Header Ads



நீண்டகால நோய்களை கொண்டவர்களே அதிகளவில் கொரோனாவால் மரணிக்கின்றனர் - Dr விந்தியா


நீண்டகால தொற்றா நோய்களைக் கொண்டவர்களே அதிகளவில் கொரோனாவால் மரணித்துள்ளதாகவும், இந்த மரண வீதம் அனைத்து வயது வகுப்பினரிடையேயும் அதிகரித்துள்ளது என்றும் சுகாதார அமைச்சின் தொற்றா நோய்ப்பிரிவின் பணிப்பாளர், சமுதாய சுகாதார வைத்திய நிபுணர் விந்தியா குமாரபேலி தெரிவித்துள்ளார். 

ஊடகங்களுக்கு இன்று -24- மாலை கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். 

இந்த நிலைமையை, கருத்திற்கொண்டு, சுகாதார அமைச்சினால் தொற்றா நோயாளர்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். 

தொற்றா நோய்களை கொண்டிருப்பவர்களுக்காக (க்ளினிக்) நடத்தும் முறைமை மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களுக்காக நடமாடும் மருத்துவ சேவை மூலம் சிகிச்சை மற்றும் மருந்து வழங்கும் முறைமைகளை ஒழுங்குபடுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

அதற்கமைய, வைத்தியர் பரிந்துரைகளுக்கமைய, ஒரே தடவையில் இரண்டு மாதங்களுக்கான மருந்துகள் வழங்கப்படும். அத்துடன், வீட்டில் ஒரே இடத்தில் இருக்கும் நடமாட இயலாத நோயாளர்களுக்காக சுகாதார வசதிகளை வீடுகளுக்கே சென்று வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும், அதற்காக சுகாதார வைத்திய அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளதாகவும் தொற்றா நோய்ப்பிரிவின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

இதனைவிட, சிகிச்சைகளுக்காக வருகைதரும் நோயாளர்களின் இரத்த அழுத்த அளவு மற்றும் நீரிழிவு பரிசோதனை மேற்கொள்ள வைத்தியசாலைகளினுள் பிரத்தியேக இடமொன்றை ஒதுக்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.