Header Ads



முஸ்லிம் சிறைக்கைதிகளுக்கு புனித ரமழானில் உரிய வசதிகள் மறுப்பு - சிரமங்களை எதிர்நோக்குவதாக கவலை


ரமழான் மாதத்தில் முஸ்லிம் சிறைக்கைதிகள் தமது மதக் கடமைகளைச் சரிவரச் செய்வதற்கான உரிய வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் சம்மந்தப்பட்ட அமைச்சர் உயர் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்து மகஜர் ஒன்றை அனுப்பியுள்ளதாக அகில இலங்கை வை. எம். எம். ஏ பேரவையின் தேசிய தலைவர் சஹீட் எம். ரிஸ்மி தெரிவித்துள்ளார் 

சிறையிலுள்ள முஸ்லிம் சிறைக்கைதிகளுக்கு இந்த ஆண்டு தமது  மதக் கடமைகளைச்  சரிவரச் செய்வதற்கு உரிய வசதிகள் வழங்க மறுக்கப்பட்டுள்ளன. அதற்கான வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு என்று  சிறைக்கைதிகளின் பெற்றோர்கள் வை. எம். எம். ஏ பேரவைக்கு முன் வைத்த முறைப்பாட்டை அடுத்து நீதி அமைச்சர் அலி சப்ரி, சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை மற்றும் உயர் அதிகாரிகளுக்கு  சுட்டிக் காட்டி  மகஜர் கடிதம் ஒன்றை அனுப்பியுளள்ளதாக அகில இலங்கை வை. எம். எம். ஏ பேரவையின் தேசிய தலைவர் சஹீட் எம். ரிஸ்மி இதனைத் தெரிவித்தார்.

அவர் அனுப்பிய மகஜர் கடிதத்தில் 

ரமழான் மாதத்தில் தமது மதக் கடமைகளைச் செய்வதற்கு மறுக்கப்பட்டமையினால் சிறைக்கைதிகள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.   ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது ஒரு முஸ்லிமின் முதன்மைக் கடமைகளில் ஒன்றாகும் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.  கூடுதலாக, ரமலான் மாதத்தில் ஒரு முஸ்லீம் கட்டாய பிரார்த்தனைகளையும், விருப்பமான பிரார்த்தனைகளையும் மற்றும் வணக்க வழிபாடுகளில் ஈடுபட வேண்டும்.  நோன்பு  கடமைகளை நிறைவேற்ற முஸ்லிம்களுக்கு நோன்பைத் தொடங்கவும் முடிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.  அது அவர்களின் உரிமை. சிறைக்கைதிகளும் மனிதர்களே .முந்தைய காலங்களில் இதுபோன்ற சிறப்பு ஏற்பாடுகள் ,  வசதிகள் எல்லாம் விளக்கமறியலில் மற்றும் ஏனைய சிறையில் உள்ள கைதிகளுக்கு வழங்கப்பட்டன. இம்முறை அந்த வசதி வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை என சிறைக்கைதிகளின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே  முஸ்லிம்   கைதிகளுக்கு ரமலான் மாதத்தில் அவர்களின் மதக் கடமைகளை மதித்து  அவர்களுக்கு தேவையான சமயக் கடமைகளைச் செய்வதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க   நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் பணிவன்புடன்  கேட்டுக்கொள்கிறோம்.

இதய சுத்தியுடன் எமது கோரிக்கையினை பரிசீலனை செய்து முஸ்லிம் சிறைக் கைதிகள் தமது சமயக் கடமையை சரிவரச் செய்வதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்குமாறு வேண்டி  மகஜரில் சுட்டிக் காட்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.