Header Ads



நான் சுற்றாடலை நேசிக்கிறேன், சுற்றாடலைப் பாதுகாத்த எம்மை தூற்றுகின்றனர் - ஜனாதிபதி


ஜனாதிபதியின் கிராமத்துடன் கலந்துரையாடலின் மற்றுமொரு கட்டம் இன்று -20- -20- நுவரெலியா – வலப்பனையில் இடம்பெற்றது.

இதன்போது, சுற்றாடல் அழிப்பு தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கருத்துத் தெரிவித்தார்.

தாம் சுற்றாடலை நேசிப்பதாகவும் ஒருபோதும் அழிக்க விரும்பியதில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

யுத்தத்தின் பின்னர் கொழும்பில் குப்பைகள் குவிந்திருந்ததாகவும் மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக கொழும்பு மற்றும் சன நெரிசல் மிக்க பகுதிகளை தாம் செழிப்பாக்கியதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மரங்களை நட்டு, பூங்காக்களை உருவாக்கி, ஈர வலயங்களை பாதுகாத்து, வௌ்ள அபாயத்தைக் கட்டுப்படுத்தியதாகவும் ஜனாதிபதி கூறினார்.

அன்று சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் குப்பை மேடு காணப்பட்டதாகவும் இன்று அது பூங்காவாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறெல்லாம் சுற்றாடலைப் பாதுகாத்த தம்மை இன்று பலரும் தூற்றுவதாக ஜனாதிபதி கூறினார்.

நேற்று (19) விஹாரமகா தேவி பூங்கா முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, அவ்வாறு பாரிய பதாகைகளை ஏந்தி சுற்றாடலைப் பாதுகாக்க முடியாது என குறிப்பிட்டார்.

அனைத்து கிராமங்களுக்கும் வீதிகள் அவசியம் என கூறிய ஜனாதிபதி, வீதிகளை அமைத்துக் கொடுக்காவிடின் அங்குள்ள மக்கள் எவ்வாறு வாழ்வார்கள் என கேள்வி எழுப்பினார்.

பரம்பரை பரம்பரையாக பயிர்செய்கை செய்த நிலங்களை அரசாங்கம் கொள்ளையிட்டுள்ளதாக கிராம மக்கள் சிலர் தம்மிடம் முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஆராயுமாறு ஜீவராசிகள் திணைக்களத்திற்கு பணித்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதன் காரணமாக தாம் காடுகளை அழிப்பதாக தம் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் ஜனாதிபதி மேலும் கூறினார்.


No comments

Powered by Blogger.