Header Ads



ஜனாஸாக்கள் தொடர்பில் அரசாங்கம் பொடுபோக்கு, நிபுணர் குழு எனக்கூறி காலத்தைக் கடத்துகின்றனர் - ஹலீம்


கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்பில் அரசாங்கம் பொடுபோக்குத்தனமாக நடந்துகொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சருமான எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.

கண்டி மாவில்மடையில், நேற்று (14) நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரைத்த அவர், கொரோனா  வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்று நீண்டகாலமாக வேண்டுகோள் விடுத்து வருவதாகவும் ஆனாலும் அரசாங்கம் அதற்கு செவிசாய்க்கவில்லை என்றும் நிபுணர்கள் குழு என்று கூறிக்கொண்டு காலத்தைக் கடத்திக்கொண்டுள்ளனர் என்றும் சாடினார். 

'கொவிட் மரணங்கள் நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்றத்தில் தெரிவித்தபோதும் இன்று சிலர் பிரதமரையே கேலி செய்ய முற்பட்டுள்ளனர்.

'நாட்டின் பிரதமரே பாராளுமன்றத்தின் தலைவராவார்.  எனவே அவரின் கருத்துகளுக்கு முன்னுரிமை இருக்கின்றது. உலகம் அதனை ஒரு சட்டமாக ஏற்றுக்கொள்கின்றது. இருந்தபோதும் ஆளும் தரப்பைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் பிரதமரின் கருத்தை கேலியாகக் கருதுகின்றனர். இவர்கள் நாட்டில் சகவாழ்வை இல்லாமலாக்கப்பார்க்கின்றனர். 

'அரசாங்கம் இன்று கேலி கூத்தாக மாறிவிட்டது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்து வரத்தமானிகள் வெளியிட்டாலும் அவை நடைமுறைக்கு வருவதில்லை. ஒருவர் வெளியிடும் வர்த்தமானியை இன்னொருவர் தடை செய்கின்றார். இவ்வாறு ஒரு கேலி கூத்தான அரசாங்கத்தையே நாங்கள் தற்போது காண்கின்றோம்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மொஹொமட் ஆஸிக்


No comments

Powered by Blogger.