Header Ads



கொரோனாவிலிருந்து மீண்ட தாதியை, தாக்கிய அரிய நோய் - எப்படி நடந்தது..?


கொரோனா வார்டில் பணியாற்றியதால் தொற்று ஏற்பட்டு குணமடைந்த செவிலியர் ஒருவர் "மியூகோர்மைகோசிஸ்" என்ற அரிதான பூஞ்சைத் தாக்குதலால் பாதிக்கப்பட்டு போராடிக் கொண்டிருக்கிறார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கொரோனா சிறப்பு வார்டில் பணியாற்றிய செவிலியர்களில் ஒருவரான ஜெபசெல்வி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட நிலையில் அரிதான பூஞ்சைத் தொற்று ஒன்றால் பாதிக்கப்பட்டார்.

தூத்துக்குடி, அண்ணாநகரைச் சேர்ந்த 46 வயதான ஜெபசெல்வி தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துனையில் 16 வருடங்களாக செவிலியராக பணியாற்றி வருபவர். இவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதற்காக அவர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார்.

இந்த நிலையில்தான், ஜெபசெல்வி மியூகோர்மைகோசிஸ் (Mucormycosis) என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க வசதி இல்லாமல் ஜெபசெல்வியின் குடும்பத்தினர் அவதிப்பட்டு வருகின்றனர்.

மியூகோர்மைகோசிஸ் என்றால் என்ன?

மியூகோர்மைகோசிஸ் என்பது புதிய நோயல்ல. ஒருவகை பூஞ்சைக் காளானால் ஏற்படும் இந்த நோய் ஏற்கனவே கண்டறியப்பட்ட ஒன்றுதான். ஆனால், அரிதாகவே இந்நோய் மனிதர்களுக்கு ஏற்படும்.

முதலில், மூக்குப் பகுதியில் ஏற்படும் இந்த நோய், விரைவிலேயே தொண்டை, கண்கள், மூளை எனப் பரவிவிடும். இந்தத் தொற்று மூளையை எட்டும் நிலையில் உயிருக்கு ஆபத்தான நோயாக மாறிவிடுகிறது.

பொதுவாக, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களையே மியூகோர்மைகோசிஸ் தாக்கும். கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால், அவர்களுக்கு இந்த நோய் அதிகம் பரவும் ஆபத்து உள்ளது.

மியூகோர்மைகோசிஸ் நோயின் அறிகுறிகள் என்ன?

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ச்சியான தலைவலி, முகத்தில் அழுத்தம், வீக்கம் ஆகியவை துவக்கத்தில் இருக்கும். அதற்கடுத்தபடியாக கண்கள் வீங்குவதோடு, வீக்கமுள்ள பகுதிகளில் கருநிற புள்ளிகளும் தோன்றும். தொண்டை அடைத்துக்கொள்வதும் உண்டு.

இதற்கான சிகிச்சை என்ன?

சிடி ஸ்கேன், எண்டோஸ்கோபி மூலம் நோய் தாக்கியதை உறுதிசெய்தவுடன், பூஞ்சை தாக்குதலுக்கு எதிரான மருந்துகள் அளிக்கப்படும். அதற்குப் பிறகு, அறுவை சிகிச்சை மூலம், அந்த பூஞ்சைகள் அகற்றப்படும். எவ்விதமான சிகிச்சை அளிப்பது பரிசோதனைக்குப் பிறகு என்பதை மருத்துவர்கள் முடிவுசெய்வார்கள். BBC

No comments

Powered by Blogger.