Header Ads



பரிவாரங்கள் புடைசூழ, டிப்பெண்டர் அனல்பறக்க, தேர்தல் பிரசாரத்தில் ஜீவன் - பதிலளிக்க பம்முகிறார்

தனது தந்தையான அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு வழங்கப்பட்ட அமைச்சரவைப்  பாதுகாப்பு அதிகாரிகள், வாகனங்கள் மற்றும் பரிவாரங்களுடன், அவருடைய மகன் ஜீவன் குமாரவேல் தொண்டமான் மலையகத்தில் வலம் வருகின்றாரென முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சரவைப் பாதுகாப்புப் பிரிவினர் புடைசூழ, டிப்பெண்டர் வாகனங்கள் அனல்பறக்கும் வேகத்தில் பயணிக்க, ஏனைய வாகனங்கள் விரைந்து பயணிக்க, தேர்தல் பிரசார நடவடிக்கைகளை ஜீவன் முன்னெடுத்துவருகின்றார்.

நுவரெலியா மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட்ட, இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவையடுத்து, அவ்வெற்றிடத்துக்கு வேட்பாளராக அவரது மகன் ஜீவன் தொண்டமான், நியமிக்கப்பட்டார்.

சாதாரண வேட்பாளர் ஒருவர், இவ்வாறான பரிவாரங்களுடன் தேர்தல் சட்டத்திட்டங்களை மீறி, பிரசாரங்களில்  ஈடுபடுவது தொடர்பில், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான மத்திய நிலையமே முறைப்பாடு செய்துள்ளது.

அமைச்சுக்கான பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர்,  பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டோருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அந்த மத்திய நிலையத்தின் தேசிய அமைப்பாளர் மஞ்சுல கஜநாயக்க, தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.

“அமைச்சின் பாதுகாப்பு அதிகாரிகள் இருவரை அவர் பயன்படுத்துகின்றார். அவ்விருவரும், ஆறுமுகன் தொண்டமானின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட அதிகாரிகள் ஆவார்” என்றார்.

இதுதொடர்பில், உரிய தரப்பினருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ள தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான மத்திய நிலையம், இவ்வாறான செயற்பாடுகள், தேர்தல் விதிமுறைகளை மீறுவனவாகும். தேர்தல் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ள 2020.06.06  இலக்கம் 2178/29 என்ற ஏற்பாடுகளை மீறுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இதேவேளை, “ஏனைய வேட்பாளர்களைப் போன்று, ஜீவன் தொண்டமானும் சாதாரண வேட்பாளர். சகல வேட்பாளர்களும் சமமாகக் கவனிக்கப்பட வேண்டும்.  ஆனால், தந்தைக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளை அவர் பயன்படுத்துகின்றார். இது தவறென அவர்களுக்குச் சுட்டிக்காட்டியுள்ளோம்” என அமைப்பாளர் மஞ்சுல கஜநாயக்க தெரிவித்தார்.

வேட்பாளர், ஜீவன் குமாரவேல் தொண்டமான் மீது சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டு தொடர்பிலும், தன்னிலை விளக்கத்துக்காகவும்,  ஜீவன் தொண்டமானுடன், தொடர்பு கொள்வதற்கு, அலைபேசியின் ஊடாக, நேற்று(14) பிற்பகலில் பலமுறை தொடர்புகொள்ள முயற்சித்த ​போது, அம்முயற்சி இச்செய்தி அச்சுக்குப் போகும் வரையிலும்  கைகூடவில்லை.

No comments

Powered by Blogger.