Header Ads



குருநாகல் இராசதானியின் 2 வது புவனேகபாகு மன்னரின், அரசவை இன்று தகர்க்கப்பட்டது


குருநாகல் அரசவையின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பொலிஸாருக்கு அறிவித்திருந்த நிலையில், அது தகர்க்கப்பட்டமை தொடர்பில் தொல்பொருள் ஆணையாளர் நாயகம் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் தமது திணைக்கள அதிகாரிகளிடமும் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆணையாளர் நாயகம் கலாநிதி செனரத் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

முதற்தடவையாக குருநாகலை இராசதானியாக்கிக் கொண்ட இரண்டாவது புவனேகபாகு மன்னர், பலகையால் உருவாக்கப்பட்ட மேடையில் தமது அரசவையை நடத்தியிருந்தார்.

குருநாகல் நகர மத்தியிலுள்ள இந்த அரசவையின் பாதுகாப்பிற்காக பின்னர் ஒரு கட்டடம் நிர்மாணிக்கப்பட்டது.

இந்த அரசவையும் அதன் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட கட்டடமும் தொல்பொருள் சின்னங்களாக தொல்பொருள் திணைக்களத்தின் மேற்பார்வையில் இருந்தன.

சிறிது காலமாக குருநாகல் மாநகர சபை இந்த கட்டடத்திற்குள் ஹோட்டல் ஒன்றை நடத்திச் சென்றுள்ளது.

இந்த நிலையில், குறித்த கட்டடத்தின் ஒரு பகுதி கடந்த செவ்வாய்க்கிழமை புல்டோசர் மூலம் தகர்க்கப்பட்டுள்ளது.

இதனை பாதுகாக்கும் நடவடிக்கைகளை தொல்பொருள் திணைக்களம் இன்றைய தினத்தில் -16- ஆரம்பிக்கவிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த கட்டடத்திற்கு பின்னால் உள்ள வீதியொன்றை விஸ்தரிப்பதற்காக கட்டடத்தின் ஒரு பகுதியை உடைப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை தமக்கு அனுமதி வழங்கியதாக குருநாகல் நகர சபையின் தலைவர் நேற்று தெரிவித்தார்.

தொல்பொருள் திணைக்களத்திடம் அனுமதி பெறாமல், வீதி அபிவிருத்தி அதிகார சபை இந்த கட்டடத்தை தகர்ப்பதற்கு அனுமதி வழங்கியிருந்தால், அதுவும் தொல்பொருள் கட்டளைச் சட்டத்தை மீறும் செயற்பாடாகும்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியதாக தொல்பொருள் ஆணையாளர் நாயகம் கலாநிதி செனரத் திசாநாயக்க கூறினார்.

ஏற்பட்டுள்ள அழிவு தொடர்பில் ஆராய்வதற்காக குருநாகல் சாசன பாதுகாப்பு சபையின் தேரர்கள் குறித்த இடத்திற்கு இன்று சென்றிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தொல்பொருள் திணைக்களம் பொலிஸாரிடம் முறையிட்டும் இதுவரை சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

1 comment:

  1. இவர்களுக்கு முன் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பது அவர்களுக்கு(ப் படிப்பினையைத் தந்து) நேர் வழி காட்டவில்லையா? (அழிந்து போன) அவர்கள் குடியிருந்த இடங்களில் தானே இவர்கள் நடக்கிறார்கள்; நிச்சயமாக அதில் அறிவுடையோருக்கு அத்தாட்சிகள் உள்ளன.
    (அல்குர்ஆன் : 20:128)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.