June 12, 2020

கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம் - பலரது கவனமும் திரும்பியது


கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக் காயத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட சடலமொன்று தொடர்பில் இன்று -12- காலை பலரது கவனமும் திரும்பியிருந்தது.

உயிரிழந்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இடைக்கிடை மழை பெய்து கொண்டிருந்த இன்றைய காலைப் பொழுதில் கொழும்பு நகரின் சுதந்திர சதுக்கத்தை அண்மித்துள்ள பூங்காவில் மரமொன்றுக்கு அருகில் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இன்று -12- காலை 7 மணியளவில் சடலத்தை பொதுமக்கள் கண்டுள்ளனர்.

இராஜகிரியவை சேர்ந்த ரஜீவ் பிரகாஷ் ஜயவீர எனும் 64 வயதானவரே உயிரிழந்துள்ளதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.

சடலம் கண்டுபிடிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் சிறியரக துப்பாக்கி ஒன்று சடலத்தின் கீழ் காணப்பட்டதுடன் அது சிறியதொரு பட்டியால் சுற்றப்பட்டிருந்தது. சடலத்தில் இரத்தக் கறைகள் காணப்பட்டதுடன், துப்பாக்கிச்சூட்டுக் காயத்தையும் அவதானிக்க முடிந்தது.

மரணம் தொடர்பான நீதிமன்ற விசாரணை இன்று பகல் மேற்கொள்ளப்பட்டதுடன், ஆரம்ப கட்ட விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், உயிரிழந்த நபர் தற்கொலை செய்துகொள்ள தீர்மானித்திருந்தமை அறியக்கிடைத்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டார்.

அடையாளம் காணப்பட்ட அந்நபர் வீழ்ந்து கிடந்த இடத்தில் சிறிய ரக துப்பாக்கி ஒன்றும், அவரது அடையாள அட்டையும் கிடந்தன. அதற்கமைய, நடத்தப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் அவர் தனது சகோதரருக்கு அனுப்பிய கடிதமொன்று தொடர்பாக தெரியவந்துள்ளது. இந்தக் கடிதத்தில் அவர் ஏதோவொரு நோயால் அவதிப்படுவதாகவும், அவர் தற்கொலை செய்வதற்கு தீர்மானித்திருந்ததாகவும் அதற்காகப் பயன்படுத்திய துப்பாக்கியை கொள்வனவு செய்தமை தொடர்பாகவும் தகவல்களை உள்ளடக்கியுள்ளார். அதேபோன்று, நேற்று இந்தத் தகவல் கிடைத்ததன் பின்னர் அவரது சகோதரர் அவரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். எனினும், அது வெற்றியளிக்கவில்லை. அதற்கமைய, அவர்கள் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்

என பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.

ஶ்ரீ லங்கன் விமான சேவையின் சிரேஷ்ட அதிகாரியாக பிரான்ஸின் பாரிஸ் உள்ளிட்ட பல நகரங்களில் சேவையாற்றியிருந்த ரஜீவ பிரகாஷ் ஜயவீர, பத்திரிகை மற்றும் இணையத்தளங்கள் பலவற்றுக்கு கடிதம் விநியோகித்த ஒருவர்.

பாரிய நிதி மோசடியைக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் அவர் சாட்சியும் வழங்கியுள்ளார்.

இந்நிலையில்,

நீதவானின் உத்தரவின் பிரகாரம் கொழும்பு நீதிமன்ற வைத்திய அதிகாரி L.M.L.D.சில்வாவினால் பிரேதப் பரிசோதனைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்காலிக அறிக்கை தற்போதைக்கு கிடைத்துள்ளது. அந்த அறிக்கைக்கு அமைவாக வாய் வழியாக சுடப்பட்ட துப்பாக்கி குண்டால் ஏற்பட்ட காயம் காரணமாகவே மரணம் சம்பவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அவரது உடலில் வேறெந்த காயமும் இல்லை எனவும், வேறு எவராலும் ஏற்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் விதத்திலான காயங்களுக்கான அடையாளங்கள் எதனையும் காணவில்லை எனவும் நீதிமன்ற வைத்திய அதிகாரியால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு இதனை தற்கொலை என்றே நினைக்கிறோம். எனினும், நீதவான் விசாரணை நிறைவடையும் வரை நிலையான தீர்மானத்தை எடுக்க முடியாது

என பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன மேலும் தெரிவித்தார்.

ரஜீவ பிரகாஷ் ஜயவீரவின் பூதவுடல் இன்று பிற்பகல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

1 கருத்துரைகள்:

பாதுகாப்பு வலயத்தில் நடந்துள்ள இந்த மரணம் தற்கொலை அல்லது கொலை என்று கண்டு பிடிக்க CCTV இல்லையா?

Post a comment