Header Ads



பள்ளிவாசல்களில் பெருநாள் சிறப்பு தொழுகை, நடத்த அனுமதிகோரிய மனு - மதுரை ஐகோர்ட் தள்ளுபடி

பள்ளிவாசல்களில் ரம்ஜான் பெருநாள் சிறப்பு தொழுகை நடத்த அனுமதிக்கக் கோரிய மனுவை  ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்துள்ளது. 

மதுரை, வில்லாபுரம் குடியிருப்பைச் சேர்ந்த சாகுல் ஹமீது, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,  கொரோனா தொற்று பரவலை தடுக்கும் அரசின் நடவடிக்கைக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், வழிபாட்டு தலங்களும் அடைக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. வணிக நிறுவனங்கள், டாஸ்மாக் மதுக்கடைகள் குறிப்பிட்ட நேரத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்காக இஸ்லாமியர்கள் தினந்தோறும் நோன்பு நோற்று ஐந்து நேரத்தொழுகைகள் உள்ளிட்ட சிறப்பு தொழுகைகளை தற்போதைய சூழலில் வீட்டிலேயே நடத்தி வருகின்றனர். வரும் 25-ம் தேதி (திங்கள் கிழமை) இஸ்லாமியர்களின் நோன்பு நிறைவு நாளான ரம்ஜான் ஈத் பெருநாள் சிறப்பு தொழுகை நடத்த வேண்டியுள்ளது.

இந்த தொழுகையை பள்ளிவாசல் அல்லது திறந்த மைதானங்களில் நடத்துவது கடமை. எனவே, அன்றைய தினம் மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் முறையாக சமூக விலகலை பின்பற்றி காலை 9 மணி முதல் 11 மணி வரை மட்டும் தொழுகை நடத்த அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி ஆகியோரது அமர்வில்  விசாரணைக்கு வந்தது. மத ரீதியான வழிபாடுகளுக்கு மத்திய-மாநில அரசுகள் தான் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments

Powered by Blogger.