Header Ads



ஜெனீவாவில் வபாத்தான ஜிப்ரி நானா, குறித்த சில நினைவுகள்


ஜெனீவா ஜிப்ரி நானாவை இறைவன் அழைத்துக்கொண்டான்....

ஜிப்ரி நானாவுடனான அன்றைய நாட்களின் நினைவுகள் மறக்க முடியாதவை.

கொழும்பைச் சேர்ந்த அல்ஹாஜ் செய்யத் இப்ராஹிம் ஜிப்ரி அவர்கள் கடந்த 20 வருடங்கள் ஜெனிவாவில் தொழில் புரிபவர். பல அமைப்புக்களை ஜெனிவாவிலிருந்து முன்னெடுப்பதற்கும், உருவாக்குவதற்கும் எம்மோடு பக்க பலமாக செயல்பட்டவர்.

17 வருடங்களுக்கு முன்னர் நான் ஜெனீவாவில் வந்து இறங்கி அவரை சந்தித்துச் சில நாட்களிலேயே அவர் பணி புரிந்து கொண்டிருந்த தூதரகத்திலேயே ஒரு தொழில் வெற்றிடம் கிடைத்த போது என்னை உடனடியாக அந்தத் தொழிலில் இணைவதற்கு உதவி செய்தார். அதுவே எனது சுவிஸ் வாழ்வின் முதல் தொழில்.

மட்டுமல்ல எனது முதல் ரூம் மேட்டும் அவர் தான். எனது குடும்பமும், அவரின் குடும்பமும் பிறகுதான் சுவிஸ் வந்தார்கள். ஜிப்ரி நானா, நான் மற்றும் பாயிஸ், ரம்ஸான் பிறகு ஆஷிப் என எல்லோரும் ஒரே வீட்டில் தான் எங்களது ஜெனீவா வாழ்வின் ஆரம்ப காலப் பகுதியைக் கழித்தோம். மிகவும் சுவாரஷ்யமான நட்புமிக்க நாட்கள் அவை. பல வாதப்பிரதிவாதங்கள் வேலை விட்டு வந்தவுடன் நாங்களே மாறி மாறி சமைத்துக் கொள்ள வேண்டும். சிங்கள மொழியில் தான் பேச வேண்டும் (ஏனெனில் என்னைத் தவிர ஜிப்ரி நானா உட்பட ஏனையவர்கள் சிங்கள மொழி மூலம் படித்தவர்கள்), தினமும் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும், இவைதான் ஜிப்ரி நானாவின் அன்றைய வீட்டின் அடிப்படை விதிகள்.

சுவிஸில் வாழும் இலங்கையர்கள் சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் என வெவ்வேறாகப் பிரிந்து அந்தக் காலகட்டத்தில் கிரிகெட் சுற்றுப் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்த போது, நாங்கள் ஜெனிவாவில் சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் எல்லோரும் இணைந்த ஒரு Team ஐ உருவாக்க வேண்டும் என்ற அவரின் முயற்சியால் 2004 ஆண்டுக் காலப் பகுதிகளில் அவ்வாறானதொரு கிரிகெட் அணி ஜெனிவாவில் உருவானது.

அந்த அணியின் தலைவராக பிரியங்கரா, உப தலைவர் விஜி. ஆறு சிங்கள நண்பர்கள், ரெண்டு தமிழ் நண்பர்கள் 4 முஸ்லிம் நண்பர்கள் இணைந்து ஒரு அணியானோம். ஜிப்ரி நானா முகாமையாளராக தெரிவானார், இந்த அணி கிரிக்கட் விளையாட்டுக்கும் அப்பாற்பட்டு சில இன நல்லிணக்க வேலைத்திட்டங்களையும் செய்ய வேண்டுமென்ற அடிப்படையில் என்னை அதன் இணைப்புச் செயலாளராகத் தெரிவு செய்தனர்.

கிரிக்கட் விளையாடும் ஆர்வம், திறமைக்கு அப்பாற்பட்டு என்னைப் போன்றவர்களையும் விளையாடக் கட்டாயப்படுத்தினார். நான் சற்று பின்வாங்கும் போது இனநல்லுறவுக்காக நீங்கள் விளையாடத்தான் வேண்டும் எனச் சொல்வார்.

ஜெனீவாவில் நடக்கும் எந்தவொரு இலங்கையர்களின் ஒன்று கூடலானாலும் ஜிப்ரி நானாவை காண முடியும். எவ்வளவு வேலைப் பழு இருந்தாலும் வந்து தலையைக் காட்டி விட்டு போகாமலிருக்க மாட்டார். எந்த காரணத்துக்காகவும யாரும் பிரிந்து சென்று விடாமல் ஒற்றுமையாகவே எல்லோரும் இருக்க வேண்டுமென எந்தவொரு கலந்துரையாடலிலும் அவருக்கே உரிய மொழி நடையில் சொல்லத் தவர மாட்டார்.

எல்லோருடனும் தொடர்புகளை நல்ல கௌரவத்துடன் பேணும் மனிதர் ஜிப்ரி நானா. அவர் ஜெனிவாவில் வாழும் இலங்கை சமுகத்தின் FOCAL POINT போலவே செயப்பட்டார்.

சுவிஸ் வாழ் இலங்கை சமுகம் ஒரு நல்ல உள்ளங் கொண்ட மனிதர் ஒருவரை இழந்து விட்டது.
(சில நினைவுப் படங்களை இங்கே பகிர்கிறேன்)

- Muise Wahabdeen -

1 comment:

  1. ஜிப்ரி நானாவின். மறைவு. சுவிஸ் வாழ் இலங்கை முஸ்லீம் மக்களை மிகவும் கவலைக்குள்ளாக்கிய சம்பவம் . அஹ்லாக்க்கான மனிதர். சுவார்க்கவாதிக்குரிய மிக உன்னத பண்புகளை கொண்டிருந்தவர் . அவருக்கு அல்லாஹ் சுபஹானஹுதாலா. மேலான சுவர்க்கத்தை. அளிப்பானானாக . ஆமீன் . Yahkoob Sulthan Bern

    ReplyDelete

Powered by Blogger.