Header Ads



தன்னுயிரை தியாகம் செய்த, அப்தீன் ரிஷ்வானின் ஜனாசா மீட்கப்பட்டது


மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த யுவதியொருவரை காப்பாற்றும் நோக்கில் நீர்தேக்கத்துக்குள் பாய்ந்து காணாமல் போன இளைஞனின் சடலம் இன்று -21- மாலை மீட்கப்பட்டது.

பொலிஸாரின் உதவியுடன் மீட்கப்பட்ட இச்சடலத்தை மரண விசாரணைகளின் பின் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த தலவாக்கலை பகுதியை சேர்ந்த 22 வயதுடைய யுவதியை அவ்வழியாக சென்ற நபரொருவர் காப்பாற்றும் நோக்கில் நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்துள்ளார்.

நீரிழ் மூழ்கிய யுவதியை மேலே இழுத்துவிட்டு, அவர் நீரிக்குள் சென்றுள்ளார். ஏதேச்சையாக இதனை கண்ணுற்ற தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நீர் பாதுகாப்பு அங்கியை அணிந்துகொண்டு நீர்த்தேக்கத்தில் இறங்கி யுவதியை காப்பாற்றியுள்ளார்.

எனினும், காப்பாற்றுவதற்காக முதலில் குதித்த நபர் காணாமல் போயிருந்தார். அதன்பின் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் மேற்படி நபரின் சடலம் மீட்கப்பட்டது.

இவ்வாறு உயிரிழந்தவர் தலவாக்கலை பாமஸ்டன் பகுதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான அப்தீன் ரிஷ்வான் (வயது 32) என்பவராவார்.

காப்பாற்றப்பட்ட யுவதி லிந்துலை வைத்தியசாலையிலிருந்து, மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.