Header Ads



கல்முனையில் நாளை ஊரடங்கு தளர்த்தப்படும் நேரத்தில், கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு விதிகள்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

நாளை திங்கட்கிழமை (06-04-2020) காலை 6.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.00 மணி வரை ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ள நிலையில், இக்காலப்பகுதியில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு, கல்முனை மாநகராட்சி ஆள்புல எல்லைக்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய  நடவடிக்கைகள் குறித்து இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மாநகர சபை மண்டபத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.சுகுணன், கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரி கே.எச்.சுஜீத் பெரேரா, கல்முனை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி தர்மசேன, கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் தொற்றா நோய் பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர் என்.ஆரிப், மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.றிஸ்பின், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.அஜ்வத், கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கணேஷ்வரன் ஆகியோருடன் மாநகர சபை உறுப்பினர்களும் பள்ளிவாசல்களின் பிரதிநிதிகளும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு, பொது மக்கள் ஒன்றுகூடுவதை முடியுமானவரை கட்டுப்படுத்துவது குறித்தும் சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக அமுல்படுத்துவது தொடர்பிலும் கூடிய கவனம் செலுத்தப்பட்டது.

* இதனைக் கருத்தில் கொண்டு, கடந்த முறை போன்று பொதுச் சந்தைகளில் மொத்த வியாபாரம் மாத்திரம் இடம்பெறுவதுடன் பொது மக்களுக்கான மரக்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் வியாபார நடவடிக்கைகள்  விளையாட்டு மைதானங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. 

* சந்தைகளின் நுழைவாயில்களிலும் கடைகளின் முன்னாலும் கை கழுவுவதற்கான அல்லது கிருமி தொற்று நீக்கும் (Sanitize) ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

* மக்கள் மத்தியில் போதிய இடைவெளி பேணப்படுதல் வேண்டும் என்பதுடன் அனைவரும் மாஸ்க் அணிந்திருத்தல் அவசியம்.

* நுகர்வோர் மத்தியில் போதிய இடைவெளி இருப்பதை வர்த்தக நிலையங்கள் மற்றும் கடைகளின் உரிமையாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக உரிமையாளரினால் ஒரு பணியாளர் இக்கடமையில் அமர்த்தப்பட வேண்டும். 

* பொருள் கொள்வனவுக்காக சந்தை, கடைத்தெருக்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ஒருவர் மாத்திரமே செல்ல வேண்டும்.

* சமீப காலப்பகுதியில் வெளிநாடுகளில் இருந்து வந்தோர், சந்தைகள் மற்றும் கடைத் தெருக்களுக்கு செல்வதை முற்றாக தவிர்ந்து கொள்ள வேண்டும். 

* பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை மீறப்படக்கூடாது என்பதுடன் விலைப்பட்டியல் அவசியம் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

* மேற்படி ஒழுங்கு விதிகளை நடைமுறைப்படுத்துவதற்காக மாநகர சபை உத்தியோகத்தர்களுடன் பொலிஸ், இராணுவம், கடற்படை, விசேட அதிரடிப் படை மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவர்.

* பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகளை மீறும் வியாபாரிகள் மீது அதே இடத்தில் நடவடிக்கை எடுப்பதற்காக நுகர்வோர் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

ஆகையினால், கல்முனை மாநகராட்சி ஆள்புல எல்லைக்குட்பட்ட வர்த்தகர்களும் பொது மக்களும் மேற்படி அறிவுறுத்தல்களை முழுமையாகக் கடைப்பிடித்து, கொரோனா வைரஸ் அற்ற மாநகராக தொடர்ந்தும் பாதுகாப்பாய் இருக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றார்.

No comments

Powered by Blogger.