Header Ads



நெத்தலிகள் மட்டுமல்ல, சுறாக்களும் குறிவைக்கப்பட வேண்டும்

யாழ் மாவட்டத்தில் அரிசி உட்பட அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றில் விலை மோசடி செய்து விற்பனையில் ஈடுபட்ட பதினொரு வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

இன்றைய நெருக்கடி நிலைமையில் வட பகுதியில் வர்த்தகர்கள் பலர் விலை ஏற்றி பொருட்களை விற்பனை செய்து கொள்ளை இலாபம் பெறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை இரண்டு வாரங்களுக்கு முன்னர் எமது கட்சி கண்டித்திருந்தது, அத்துடன் இந்த விவகாரத்தில் வர்த்தக சங்கங்கள் தலையிட்டு நிலைமையினை சீர் செய்ய முன்வர வேண்டும் என்றும் கோரியிருந்தது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு ஒன்றினை நடாத்திய யாழ் வர்த்தக சங்கப் பிரமுகர்கள் சிலர் வர்த்தகர்கள் அனைவருமே உத்தமர்கள் தான் என்ற தோரணையில் பதிலளித்ததோடு அரசியல்வாதிகளின் விமர்சனங்கள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர். இப்பொழுது சட்ட நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கும் சில வர்த்தகர்கள் தொடர்பில் இவர்கள் எல்லாம் என்ன சொல்லப் போகின்றார்கள்?

வர்த்தகத் துறையில் உள்ள சில கறுப்பாடுகள் தொடர்பிலேயே எமது குற்றச்சாட்டுக்கள் தொடுக்கப்பட்டு இருந்தன. இருந்த போதிலும் அவற்றை ஒட்டுமொத்தமாக நிராகரித்து அரசியல் பேசிய வர்த்தக சங்கத்தின் சில நிர்வாகிகள் இப்பொழுதாவது கசப்பான உண்மைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தைப் பெற முயற்சிக்க வேண்டும்.

இப்பொழுது சட்டத்தின் பிடியில் சிக்கி இருப்பவர்கள் சில நெத்தலிகள் மட்டுமே, சுறாக்களும் குறிவைக்கப்பட வேண்டும் என்பது தான் எமது கோரிக்கை.

இந்தப் பிரச்சனையில் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களை பின்பற்றி யாழ் மாவட்டத்திலும் சட்டம் செயற்படத் தொடங்கியிருப்பது வரவேற்பிற்கு உரியது.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகள் தயவு தாட்சண்யமின்றியும், குறுக்கீடுகளைப் புறக்கணித்தும் மேலும் தீவிரத்துடன் சட்ட விரோத வர்த்தக நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்படுவார்கள் என்று நாம் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.