Header Ads



கால்நடைக் கழிவுகள் உரியமுறையில் அகற்றப்படுவதை உறுதிப்படுத்துங்கள் - மாநகர முதல்வரிடம் யாழ் முஸ்லிம் இளைஞர் கழகம் கோரிக்கை

யாழ் மாநகரசபைக்கு உட்பட்ட 13ஆம் வட்டாரம் (ஜே 87) முஸ்லிம் கல்லூரி வீதியில் அமையப்பெற்றுள்ள குடியேற்றம் இன்றி காணப்படும் வெற்றுக் காணி ஒன்றில் காணப்படும் கிணறு ஒன்றில் கோழி (கால்நடை) இறைச்சியாக்கப்பட்டதன் பின்னர் கிடைக்கப்பெறுகின்ற கழிவுகள் சில வாரங்களாக பை ஒன்றினுள் கட்டப்பட்டு வீசப்பட்டுள்ளது. 

குறித்த விடயம் தொடர்பில் யாழ் முஸ்லிம் இளைஞர் கழகத்தினால் மாநகர முதல்வருக்கு கடிதம் ஒன்று இன்று (18) அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

யாழ் மாநகரசபைக்கு உட்பட்ட 13ஆம் வட்டாரம் (ஜே 87) முஸ்லிம் கல்லூரி வீதியில் அமையப்பெற்றுள்ள குடியேற்றம் இன்றி காணப்படும் வெற்றுக் காணி ஒன்றில் காணப்படும் கிணறு ஒன்றில் கோழி (கால்நடை) இறைச்சியாக்கப்பட்டதன் பின்னர் கிடைக்கப்பெறுகின்ற கழிவுகள் சில வாரங்களாக பை ஒன்றினுள் கட்டப்பட்டு வீசப்பட்டுள்ளது. 

இவ்வாறு வீசப்பட்ட கழிவுகள் அண்மையில் பெய்த மழையினால் தற்பொழுது துர்நாற்றம் எடுக்க ஆரம்பித்துள்ளது. இதனால் அயலில் உள்ள குடியிருப்பாளர்கள் தமது வீடுகளில் வசிக்க முடியாது பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். 
இது தொடர்பில் அப்பகுதி மக்கள் சமூகப் பொறுப்பு மிக்க கழகம் என்ற வகையில் எமது இளைஞர் கழகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இது தொடர்பில் ஆராய இன்றைய தினம் (18) கழக உறுப்பினர்கள் இணைந்து குறித்த பகுதிக்கு நேரடிக் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தோம். குறித்த விஜயத்தின் மூலம் கோழிக் கழிவுகள் அங்கு கொட்டப்பட்டுள்ளமையை உறுதி செய்ய முடிந்ததுடன் குறித்த பகுதியில் முழுமையாக துர்நாற்றம் வீசுவதனையும் உணர முடிந்தது. 

இது தொடர்பில் மாநகரசபை பொதுச் சுகாதாரப் பொறியியற்பிரிவின் பொறுப்பதிகாரியின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளோம். இருப்பினும் இது தொடர்பில் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மாநகர முதல்வராகிய தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருவது எமது பொறுப்பு என்று கருதுகின்றோம். அந்த வகையில் குறித்த விடயம் தொடர்பில் துரித நடவடிக்கை மேற்கொண்டு அக் கழிவுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் சார்பில் தயவாகக் கேட்டுக் கொள்வதுடன், பொறுப்பற்று செயற்படுபவர்கள் தொடர்பில் உரிய கண்டிப்புடனும், உரிய வகையில் மாநகர கழிவு காவும் வண்டியில் கோழிக் கழிவுகளை சேர்ப்பிக்கப்படுவதை உரிய அதிகாரிகள் மூலம் உறுதிப்படுத்துமாறும் தங்களை தயவாகக் கேட்டுக் கொள்கின்றோம் என்றுள்ளது. 
இக் கடிதத்தின் பிரதிகள் மாநகர ஆணையாளர் மற்றும் பொதுச் சுகாதார பொறியியற் பிரிவு பொறுப்பதிகாரி ஆகியோருக்கும் பிரதியிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

யாழ் மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் கோழி (கால்நடை) இறைச்சி விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகள் சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் நாம் பகிரங்கமாக இத்தால் கேட்டுக் கொள்கின்றோம். 

'பசுமை மாநகரை அசுத்தம் செய்வோர் தொடர்பில் அவதானமாக இருப்போம்.'

தகவல் 
என்.எம். அப்துல்லாஹ்
தலைவர்
யாழ் முஸ்லிம் இளைஞர் கழகம் 

No comments

Powered by Blogger.