Header Ads



பயங்கரவாதத்தை கண்டிக்கிறோம் - மல்கம் ரஞ்சித்திற்கும், பொறுமை காத்த மக்களுக்கும் எமது மனமார்ந்த நன்றி

கடந்த ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்திலே நம் நாட்டிலே மேற்கொள்ளப்பட்ட மிருகத்தனமான தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நாட்டுமக்கள் அனைவரும் மிகுந்த கவலையுடன் நினைவுகூர்கின்ற இந்சந்தர்ப்பத்திலே நாமும் அவர்களுடன் இணைந்து எமது மன வேதனையையும் ஆழமான கவலையையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அதேநேரம், நடந்த அக்கொடூரமான செயலையும் நாம் மீண்டும் மீண்டும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இந்த வேளையில் அக்கோர நிகழ்வுகள் காரணமாக உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களின் உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் உளமார்ந்த கவலையையும் தெரிவித்துக் கொள்வதோடு சொந்தங்களை இழந்து தவிக்கும் உறவுகளுக்கு  உள அமைதியும் வாழ்வில் அனைத்து வகையான நலன்களும் நிறைவாக கிடைக்கவேண்டுமென எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றோம்.

தமது வணக்கஸ்த் தலங்களில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த  அப்பாவி பக்தர்களையும் ஏனைய பொது மக்களையும் படுகொலை செய்தமை இஸ்லாமிய போதனைகளுக்கு முற்றிலும் முரணான செயலாகும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமிருக்க முடியாது. இதனைச் செய்தவர்கள் மனித குலத்தின் எதிரிகளாவர். இக்காரியத்தில் ஈடுபட்டோர் யாராக இருப்பினும் அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டியவர்களாவர்.

புனித அல்-குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது:

“நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை (த் தடுப்பதற்காகவோ) அல்லாமல் மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான். மேலும் எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்”

பௌத்தம், கிறிஸ்தவம், இந்து, இஸ்லாம் உட்பட எந்த மதமும் வன்முறையை அனுமதிப்பதோ அங்கீகரிப்பதோ இல்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருந்தாலும், பொதுவாக எந்த மதத்தை எடுத்துக் கொண்ட போதிலும் மதத்தின் பெயராலேயே அதன் போதனைகளுக்கு முற்றிலும் முரணான மோசமான செயல்களிலும் நாசகார செயல்களிலும் ஈடுபடுபவர்கள் இருப்பதை நாம் காணலாம். எனினும் இது போன்ற ஒரு சில வழி தவறியவர்களின் மோசமான நடத்தையை அளவுகோலாக வைத்து எந்தவொரு மதத்தையோ அதனைப் பின்பற்றுபவர்களையோ மதிப்பீடு செய்வது நியாயமாகாது என்பதை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இப்பயங்கர நிகழ்வையடுத்து முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக அசம்பாவிதங்கள் நிகழாத வண்ணம் காத்திரமான முயற்சிகளை முன்னெடுப்பதில் முன்னின்று பங்காற்றிய சங்கைக்குரிய பேராயர் மல்கம் றஞ்சித் அவர்களுக்கும் பொறுமை காத்த பாதிக்கப்பட்ட மக்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அத்துடன் நாம் அனைவரும்  இத்தாய்த் திருநாட்டின் புதல்வர்கள் என்ற அடிப்படையில் நம்மிடையே ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் கருத்து வேறுபாடுகளை சுமுகமான முறையில் கலந்துரையாடி தீர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்பதையும் நாம் இங்கு வலியுறுத்த விரும்புகின்றோம்.

இலங்கையர்கள் என்ற ரீதியில் சமய, மொழி, பிரதேசம்  உட்பட அனைத்து வேறுபாடுகளையும் தாண்டி நமது தேசத்தைக் கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒற்றுமையுடன் கைகோர்க்க வேண்டிய காலம் வந்துள்ளது என்பதை நாம் அனைவரும் உணர்வோமாக.

எல்லாம் வல்ல அல்லாஹ் நமது நாட்டை சகல விதமான ஆபத்துக்களிலிருந்தும் அனர்த்தங்களிலிருந்தும் காத்தருள்வானாக! சாந்தியும் சமாதானமும் நிலவும் அமைதிப் பூங்காவாக ஆக்கியருள்வானாக!

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments

Powered by Blogger.