Header Ads



கொரோனாவினால் மிருகக்காட்சிசாலை விலங்குகளின், நடத்தைகளில் மாற்றங்கள் - தினேஷிகா மானவடு

கோவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைகளை அதிகரித்துள்ளதாக அந்த பூங்காவின் உதவிப் பணிப்பாளர் தினேஷிகா மானவடு தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், விலங்குகளின் நடத்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மாத்திரமல்லாது அவை உட்கொள்ளும் உணவு தொடர்பாகவும் கவனம் செலுத்துமாறு விலங்குகளை பராமரிக்கும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் விலங்கியல் பூங்கா ஒன்றில் இருக்கும் புலிக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பதாக செய்திகள் வெளியானதை அடுத்து இங்குள்ள விலங்குகளுக்கு தினமும் மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 15ஆம் திகதி முதல் தெஹிவளை விலங்கியல் பூங்காவை பொதுமக்கள் பார்வையிடுவது நிறுத்தப்பட்டதை அடுத்து விலங்குகளின் நடத்தைகளில் மாற்றங்களை அவதானிக்க முடிந்ததாக தினேஷிகா மானவடு கூறியுள்ளார்.

சில நேரங்களில் விலங்குகள் தனிமையில் நடந்து கொள்ளும் விதம், உணவை உட்கொள்ள தாமதம் செய்வது போன்ற பல மாற்றங்களை காணமுடிந்ததாக விலங்கியல் பூங்காவின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

திடீரென மக்கள் வருகை நின்று போனது விலங்குகளுக்கு பிரச்சினையாக மாறியுள்ளது.

குறிப்பாக சிம்பன்சிகள் மற்றும் பறவைகளின் நடத்தையில் பதற்றத்தை அவதானித்ததாகவும் இதனால், விலங்குகளுக்கு முன்னால் ஊழியர்களை அங்குமிங்கும் நடமாட செய்து, அவற்றின் மன அழுத்தத்தை போக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பூங்காவின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை வனஜீவராசிகள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன இன்று -17- தெஹிவளை விலங்கியல் பூங்காவை மேற்பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.