Header Ads



ரணிலையும் சஜிதையும் எவ்வாறு பிரிக்கலாம் என டீல் பேசுகிறார்கள்

- ஹஸ்பர் ஏ ஹலீம் -

கொரோனாவை கட்டுபடுத்த பாராளுமன்றத்தில் மூன்றுக்கு மூன்று பெரும்பான்மையை கூட வழங்க தயாராக உள்ளோம் என திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார். 

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான காரியாலயத்தில் இன்று (17)செவ்வாய்க்கிழமை காலை ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார்.  அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், 

தற்போது உலகம் முழுவதும் அனர்த்த நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த அனர்த்த நிலையை கட்டுபடுத்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமை.

ஆகவே குறைந்தது இரண்டு வாரங்களுக்காவது நாட்டின் எல்லைகள் அனைத்தையும் மூடி இந்த நோய் தோற்றில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும்.

ஆனால் இன்று இந்த அரசாங்கம் என்ன செய்கிறது.

தேர்தலுக்கான ஆயத்தங்களை செய்கிறது.பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் அவர்களுக்கு கவலை இல்லை. ஒரு நாள் பொது விடுமுறை அளித்து கொரோனாவை கட்டுபடுத்த முடியுமா? 

தற்போது பொதுமக்கள் கொடுத்த அழுத்தங்களாலையே மூன்று நாட்கள் விடுமுறை அளித்துள்ளார்கள்.அதில் மாவட்ட அரசாங்க அதிபர்  காரியாலயங்களுக்கு விடுமுறை வழங்கப்படவில்லை ஏன் என்றால் வேட்புமனு மாவட்ட அரசாங்க காரியாலயத்திலேயே தாக்கல் செய்ய வேண்டும். 

நாடு தற்போதுள்ள சூழ்நிலையில் தேர்தல் ஒன்று அவசியமா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். தேர்தலுக்காக நடாத்தப்படும் கூடங்களில் மக்கள் பெருமளவில் ஒன்றுகூடும்போது அவர்களின் பாதுகாப்புக்கு யார் உத்தரவாதம் அளிப்பது?

இஸ்லாமியர்கள் தமது உயிருக்கும் மேலாக மதிக்கும் மக்கா நகரில் உள்ள பள்ளிவாயலே இன்று மூடப்பட்டுள்ளது.

உலகின் பல நாடுகள் தேர்தலை ஒத்தி வைத்துள்ளன.ஆனால் எமது அரசு ரணிலையும் சஜிதையும் எவ்வாறு பிரிக்கலாம் என டீல் பேசி கொண்டிருக்கிறது.

இவ்வாறு அனைத்து நாடுகளும் தமது நாட்டு மக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் போது ஏன் எமது அரசால் மட்டும் தேர்தல் தொடர்பாகவும் பொதுமக்கள் கூடுவது தொடர்பாகவும் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது.

எனவே பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறுமானால் பொதுமக்கள் ஒன்றாக கூடும் போது ஏற்படபோகும் அனர்த்தத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாகவும் கலந்துரையாட பாராளுமன்றம் உடனடியாக கூட்டப்பட வேண்டும். இந்த நோய் பரவுவதை தடுக்க அங்கு நாம் மூன்றில் இரண்டு அல்ல மூன்றுக்கு மூன்று பெரும்பான்மையை கூட இரண்டு கைகளையும் உயர்த்தி வழங்க தயாராக உள்ளோம்.

No comments

Powered by Blogger.