March 10, 2020

முகமது பின் சல்மான், மூத்த இளவரசர்களை கைது செய்வது ஏன்---?

செளதி அரேபியாவின் நடைமுறையில் தலைவராக இருக்கும் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான், அந்நாட்டின் மூத்த இளவரசர்கள் சிலரை கைது செய்திருப்பது பல யூகங்களை எழுப்பியுள்ளது.

சர்ச்சைகளுக்குப் புதியவரல்ல என்றாலும் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் (சுருக்கமாக எம்.பி.எஸ். என சொல்லப்படுகிறது), அரசியலின் உச்சநிலை அதிகாரத்துக்கு செல்வதற்கான தன்னுடைய லட்சியத்துக்கான இரக்கமற்ற நடவடிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். 2015ல் இளவரசராக அறிவிக்கப்பட்டதில் இருந்தே, பல்வேறு வகைகளில் தனது எதிர்ப்பாளர்களாக, போட்டியாளர்களாக இருப்பவர்களை மௌனமாக்கும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

இந்த முறை முகமது பின் சல்மானின் லட்சிய நோக்கத்துக்கான பயணத்தில் பலியாகி இருப்பது சௌதி அரச குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் - அதிலும் தன்னுடைய சித்தப்பாவான முன்னாள் உள்துறை அமைச்சர் இளவரசர் அகமது பின் அப்துல் அஜீஸ், ஒன்றுவிட்ட சகோதரரும், முன்னாள் பட்டத்து இளவரசர் மற்றும் உள்துறை அமைச்சருமான முகமது பின் நயீப் (சுருக்கமாக எம்.பி.என். எனப்படுகிறார்) - ஆகியோரும் இதில் அடங்குவர். குற்றச்சாட்டு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், தேசதுரோக குற்றச்சாட்டுகளின் பேரில் விசாரிப்பதற்காக அவர்கள் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த இருவருக்கும் இப்போது பெரிய அதிகாரம் எதுவும் இல்லை; தனது மகன் முகமது பின் சல்மான் மகுடம் சூட்டுவதற்கு வழி ஏற்படுத்தும் வகையில் 2017ல் முகமது பின் நயீப்பை திடீரென மன்னர் சல்மான் பதவி நீக்கம் செய்தார். இளவரசர் அஹமது லண்டனில் தங்கியிருந்துவிட்டு கடந்த ஆண்டு சௌதிக்குத் திரும்பினார்.

எதிராளிகள் ஏற்கெனவே பலவீனமாக இருக்கும் நிலையில், அவர்களுக்கு எதிராக சல்மான் ஏன் நடவடிக்கைகள் எடுக்கிறார் என்று பலருக்கும் கேள்வி எழலாம்.

இதற்கான உண்மையான பதில் அவருக்கு மட்டுமே தெரியும். சௌதி அரேபியா போன்ற இரும்புத் திரை கொண்ட ஒரு நாட்டில் சௌதியின் அதிகாரப்பூர்வ வட்டாரங்களில் இருந்து முழு உண்மைகளையும் பெறுவது சாத்தியமற்றது.

ஆனால் ஒரு விஷயம் மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது - உள்நாட்டிலோ அல்லது சர்வதேச அளவிலோ இதனால் தமக்கு பெரிய அளவில் எந்தப் பிரச்சினையும் வராது என்பதை இளைய முடியரசர் அறிந்திருக்கிறார்.

புரளியும் கபடச் செயலும்

இஸ்தான்புல் நகரில் சௌதி தூதரகத்தில் 2018ல் சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் தொடர் அவமானங்கள் ஏற்பட்ட நிலையில், முகமது பின் சல்மானுக்கு சிறிது அச்சம் ஏற்பட்டுள்ளது.

டொனால்ட் டிரம்ப்பின் வெள்ளை மாளிகை, முகமது பின் சல்மானுக்கு தீவிர ஆதரவு அளிக்கிறது; பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் அரசுகள் கொஞ்சம் விமர்சனம் செய்தன. இருந்தாலும் ரியாத்துடன் வணிகத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன; ரஷ்யாவும், சீனாவும் இதுபற்றி ஒருபோதும் கவலைப்படப் போவதில்லை.

எனவே முகமது பின் சல்மான் தன் விருப்பத்தின்படி, அதிகாரத்தை எட்டுவதை உறுதி செய்து கொண்டு வருகிறார். சௌதி பொது வாழ்க்கையில் தனக்கு இடையூறாக இருக்கும் விஷயங்களை அகற்றி வருகிறார். அவர்கள் மத குருமார்களாக இருந்தாலும், உறவினர்களில் போட்டியாளர்களாக இருந்தாலும், தொழிலதிபர்கள் அல்லது உள்நாட்டில் செல்வாக்கு மிகுந்த குழுக்களாக இருந்தாலும் - அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி இரக்கமின்றி ஒவ்வொன்றாக நசுக்கி வருகிறார்.

அது சர்வாதிகார அரசியல் 101 போல இருக்கிறது, ஆனால் 21வது நூற்றாண்டு பாணியில் உள்ளது. இளவரசர்கள் 2017ஆம் ஆண்டு சொகுசு விடுதியான ரியாத் ரிட்ஸ்-கார்ல்ட்டனில் சௌகரியமான சூழலில் வைக்கப்பட்டிருந்தது போல தற்போது அடைக்கப்பட்டுள்ளார்.

அதே சமயம் பொதுவெளியில் மிகவும் பணிவானவரைப் போல சல்மான் தன்னை கவனமாகக் காட்டிக் கொள்கிறார். 2017ஆம் ஆண்டில், முகமது பின் நயீப் பதவி நீக்கம் செய்யப்பட்ட போது, தனது ஒன்றுவிட்ட சகோதரரிடம் மண்டியிட்டு அவரது கையை முத்தமிட்டு மரியாதை செலுத்திக் கொண்டது போன்ற செயல்களில் ஈடுபட்டார் சல்மான்.

முகமது பின் நயீப்பின் சரிவின் மூலம் முகமது பின் சல்மானின் வளர்ச்சி ஏற்பட்டிருப்பதில் எந்த முரண்பாடும் இல்லை. 2017ஆம் ஆண்டின் தொடக்க காலம் வரையில், மேற்கத்திய நாடுகளின் கொள்கைகளை தீர்மானிப்பவர்கள் முகமது பின் சல்மானின் ஆதரவாளர்களாக இருந்தனர். அவரை நம்பிக்கைக்கு உரியவராக பார்த்தனர். உலகெங்கும் பாதுகாப்பு ஏஜென்சிகள் அவரை விரும்பின. அவரை சந்தித்த அனைவருமே எதிர்கால மன்னராக இருக்கும் தகுதியுள்ளவர் என்று கருதினர்.

நாட்டின் பாதுகாப்புத் துறைகளை நிர்வகித்து வந்த முகமது பின் நயீப், முகமது பின் சல்மானின் லட்சியம் மற்றும் தந்திரங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் போய்விட்டது, அதற்கு அவர் ஆயத்தமாக இல்லை.

சௌதி மன்னர் குடும்பத்தில் உள்ள அதிகார வட்டாரங்கள் வேறுபட்ட தகவல்களைத் தெரிவிக்கின்றன. மன்னர் சல்மான் மரணத் தருவாயில் இருப்பதாகப் புரளிகள் உள்ளன. அல்லது அரண்மனை கைப்பற்றப்படலாம் என்று சல்மான் உணர்ந்து, அதை முறியடிப்பதற்கு இப்படி விரைந்து நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்றும் புரளிகள் உலவுகின்றன.

வெளிப்படையான பதிலை புறக்கணிக்கும் வகையில் உள்ள, இந்த இரு விஷயங்களிலும் உண்மை இல்லை: குடும்பத்தினரை தன் விருப்பத்துக்கு ஆதரவான நிலைக்கு கொண்டு வருவதற்கும், ராஜவிசுவாசத்தை உறுதிப் படுத்துவதற்கான ஒழுங்கு நடவடிக்கையாகவும், அதிகாரம் மிக்கவர் யார் என்பதை எல்லோருக்கும் நினைவூட்டுவதாகவும் இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

அதுமட்டுமின்றி எந்தவித சந்தேகமும் இன்றி சவுதி அரேபியாவின் அதிகாரமிக்க தலைவர் முகமது பின் சல்மான்தான் என்பதில் எந்தவித தவறும் நடந்துவிடகூடாது என்பதும்தான்.

மைக்கேல் ஸ்டீபன்ஸ்

2 கருத்துரைகள்:

Not only coup plotters, but hundreds of princes and all royal families should be behind the bar for looting public money. to rule any country without the consent of people is wrong

America fully support and isreal going to achieve everything in the gulf.because salman brainwashed from america n isreal.
He dont care about islam n nothing

Post a Comment