March 27, 2020

வெறுப்புப் பிரச்சாரம், கொரோனாவைவிட கொடிய வைரஸாகும்

- இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் -

இன்று முழு உலகமும் கொரோனா வைரஸ் தொடர்பில் பேசி வருகிறது. இலங்கையில் காலத்துக்குக் காலம் வெறுப்புப் பேச்சுக்களை பரப்பி வருவது இதை விட பெரிய வைரஸாக உள்ளது. 1950 களில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் வெறுப்புப் பிரச்சாரங்கள் பரப்பப்பட்டு வந்தன.  அரசியல்வாதிகளது நடவடிக்கைகள் மற்றும் வியாபாரப் போட்டி காரணமாகவே இப்பிரச்சாரம் ஊடகங்கள் வாயிலாக பரப்பப்பட்டு வந்தது.

இதன் மூலம் கொரோனா வைரஸால் ஏற்பட்ட இழப்புக்களை விடவும் அதிகமான உயிரிழப்புக்களும் சொத்து சேதங்களும் ஏற்பட்டன. மீண்டும் 1960 காலப்பகுதியில் கத்தோலிக்கப் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றதனால் கத்தோலிக்க ஆக்கிரப்பு தொடர்பான வெறுப்புப் பேச்சுக்கள் பரப்பி விடப்பட்டன. இவையும் ஊடகங்கள் வாயிலாகவே பரப்பப்பட்டன. அதன் பிறகு கத்தோலிக்கப் பாடசாலைகள் அரசாங்கத்துக்கு பொறுப்பேற்கப்பட்டன. இந்த விவகாரத்தால் பல உயிர்கள் கொல்லப்பட்டன.

1970களில் பல்கலைக்கழகத்துக்கு தமிழ் மாணவர்கள் அதிகமாகச் செல்கிறார்கள் எனக் குறிப்பிட்டு தரப்படுத்தல் முறை வேண்டும் என்ற கொள்கையை முன்வைத்தார்கள். இப்பிரச்சினையின் மூலம் சமூகத்தில் பல்வேறு இழப்புக்கள் ஏற்பட்டன. 1971 இன் ஆரம்பத்தில் மற்றுமொரு வகுப்புவாத போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது. மேல் வகுப்பு, கீழ்வகுப்பு என்பதாக குறிப்பிட்டு வெறுப்புப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் ஆயுதம் தூக்கிப் போராடிய சரித்திரமும் எமக்கு நினைவுள்ளது. இதன் மூலமும் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.

1980களில் தமிழர் பிரச்சினை. மீண்டும் சமயம் சார்ந்த பிரச்சினைகளும் வகுப்புவாதப் பிரச்சினைகளும் இக்காலத்தில் மேலெழுந்தன. இவையனைத்துப் பிரச்சினைகளும் கொரோனாவை விடவும் பயங்கர வைரஸாக மாறி பல உயிர்களை குடித்து விட்டன. தற்போது கடந்த வாரம் ஒரு சிங்களப் பத்திரிகையில் வெளிநாட்டு அழைப்பாளர்கள் இலங்கை வந்து அடிப்படைவாதம் போதிக்கிறார்கள், அடிப்படைவாதத்தைப் பரப்புகிறார்கள் என செய்தி வெளியிட்டிருந்தது.

பின்னர் அது சுத்தப் பொய்யென ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். ஸுஹைர் அவர்கள் Right to Reply இன் கீழ் இச்செய்தியை மேற்கோள் காட்டி ஆங்கிலப் பத்திரிகைகொன்றுக்கு அனுப்பிய கட்டுரையில் இதைத் திருத்த வேண்டும் எனக் கூறிய விடயம் இதுவரை எந்தப் பத்திரிகையிலும் பிரசுரமாகவில்லை.

இவ்வாறு குறுகிய சிந்தனையில் முன்னெடுக்கப்படுகின்ற வெறுப்புப் பிரச்சாரங்கள் நாட்டிற்கு ஏற்படுத்தும் பாதிப்புக்கள் கொரோனா வைரஸையும் விட அதிகமானது. இது தொடர்பில் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இப்படியான கருத்துக்கள் தொடர்பில் ஆராய்ந்து அவற்றுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். பாராளுமன்ற அறிக்கையொன்றை அடிப்படையாக வைத்தே இந்தச் செய்தி பிரசுரிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது. இது மிகவும் கவலையான விடயம். அவ்வறிக்கையிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவல்களைப் பெற்று சிங்கள ஊடகங்கள் இவற்றைத் தூண்டி வருகின்றன.

 தமிழ் ஊடகங்கள் ஒரு உலகத்தையும் சிங்கள ஊடகங்கள் மற்றுமொரு உலகத்தையும் உருவாக்குகின்றன.

இரு புள்ளியிலிருந்து முன்னெடுக்கப்படுகின்ற இத்தகைய தூண்டல்கள் வைரஸையும் விட கடுமையான முறையில் பரவுகிறது. இதன் மூலம் இவர்கள் மிகப்பெரும் அழிவையே ஏற்படுத்துகிறார்கள். இது சரிப்பட்டு வருவதில்லை. அனைத்துத் தரப்புக்களையும் ஒன்றிணைத்த தேசியவாதம் கட்டியெழுப்பப்பட வேண்டியுள்ளது. இலங்கையர் என்கின்ற தேசியவாத சிந்தனையே தேவைப்படுகின்றது. அது வல்லாமல் இலங்கைக்கு நல்லதொரு எதிர்காலம் இருக்காது. ஒவ்வொரு தரப்புக்களையும் தூரமாக்கி விடுகின்ற தேசியவாதம் எமக்குத் தேவைப்படுவதில்லை. எல்லோரையும் இணைத்ததான தேசியவாதமே எமக்குத் தேவைப்படுகின்றது.

எவ்வித அடிப்படை வசதிகளும் காணப்படாத, குடிப்பதற்கு தண்ணீர் கூட இருக்காத சிங்கப்பூருக்கு இப்படியானதொரு தேசியவாதத்தை உருவாக்க முடிந்தது. சிங்கப்பூர் இன்று உலகில் அதிக வருமானம் பெறுகின்ற முதல் ஐந்து நாடுகளுக்குள் இடம்பிடித்துள்ளது. அனைத்து தரப்புக்களையும் உள்ளடக்கிய பயணத்தால் மாத்திரமே சிங்கப்பூருக்கு இவ்விடயத்தை செய்துகொள்ள முடிந்தது.

இது மிகவும் கடினமான பயணம். நல்லதொரு இலக்கில் பணியாற்ற வேண்டியுள்ளது. இவ்விடத்திற்கு எமது நாடாகிய இலங்கையையும் கொண்டு வராவிட்டால் நாம் இன்னும் அதளபாதாளத்திற்கே சென்றுவிடுவோம்.

1 கருத்துரைகள்:

இந்த நாடு முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் என்ன இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் மிகவும் தௌிவாக இங்கு அவருடைய கருத்தை முன்வைக்கின்றார். இதனை வாசித்து நடைமுறைப்படுத்த இந்த அரசாங்கம் அல்லது ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் தயாராக இருக்கின்றார்களா என்பது பெரிய கேள்விக்குறி.

Post a comment