Header Ads



சஜித் பக்கம் சாய்கிறது கண்டி மாவட்டம், ரணிலை கைவிடும் 198 பேர்

ஐக்கிய தேசியக் கட்சியின் இதயம் என கருதப்படும் கண்டி மாவட்டத்தின் ஐ.தே.கட்சியினர் அனைவரும் சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியுடன் இணைந்துக் கொள்ள நேற்று தீர்மானித்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை எடுப்பது தொடர்பாக கலந்துரையாட லக்ஷ்மன் கிரியெல்ல, கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேசசபைகளின் உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர் என 218 பேருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இவர்களில் 198 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கண்டி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பொதுத்தேர்தலில் சஜித் அணியில் போட்டியிட விரும்புவோரின் விருப்பு வெறுப்பை முன்வைக்குமாறு கிரியெல்ல கோரிக்கை விடுத்துள்ளார்.

சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டணியின் கீழ் போட்டியிட வேண்டும் என அனைவரும் கூறியுள்ளனர்.

அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி யானை சின்னத்தில் தனித்து போட்டியிட தீர்மானித்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன என கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்படி நடந்தால், அனைவரும் சஜித் பிரேமதாசவின் தலைமையிலான புதிய கூட்டணியின் கீழ் போட்டியிட வேண்டும் என கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறியுள்ளனர்.

இறுதியாக சஜித் பிரேமதாசவின் தலைமையிலான புதிய கூட்டணியில் இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிடும் விதம் தொடர்பாக இன்று அவருடன் கலந்துரையாடுவது எனவும் இறுதியாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.