Header Ads



சட்டபூர்வ அறிக்கை நாளை சமர்ப்பிக்கப்படும்

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையின் கீழ் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணி தொடர்பிலான சட்டபூர்வ அறிக்கை நாளைய தினம் 17 சமர்ப்பிக்கப்படவுள்ளது.

புதிய கூட்டணியினை உருவாக்குவது தொடர்பில் நீண்டகாலமாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலையினை தீர்ப்பதற்கு அறிக்கை ஒன்றினை தயாரிக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியினால் சட்ட வல்லுனர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என கூட்டணியில் இணைந்துள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிவருகின்றனர்.

அதேவேளை, யானை அல்லது இதயம் சின்னத்தில் போட்டியிட வேண்டும் எனவும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

இந்த மூன்று சின்னங்களிலும் போட்டியிடுவதில் சிக்கல் நிலை உருவானால் வேறு ஒரு புதிய சின்னம் ஒன்றில் களம் இறங்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் புதிய கூட்டணியில் இணைந்துள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கோரி வருகின்றனர்.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய கூட்டணி, புதிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிட்டால் மாத்திரமே அன்னப்பறவை சின்னத்தை வழங்குவதற்கு இணங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த முன்னணியின் பேச்சாளர் ஒருவர்  குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சின்னத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி அல்லது அமைக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் உறுப்பினர்கள் எவரும் புதிய ஜனநாயக முன்னணியுடன் இதுவரை கலந்துரையாடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் நிலவும் சட்ட சூழலில் அரசியல் கட்சி ஒன்றின் சின்னத்தை வேறு ஒரு அரசியல் கட்சிக்கு வழங்கப்படுமாயின், அந்த சின்னத்தை கொண்ட ஆரம்ப கட்சி குறித்த சின்னத்தை கைவிட வேண்டும்.

எனவே 25 வருடங்கள் பழமையான தமது கட்சியின் சின்னத்தை நீக்கி விட்டு கட்சியின் சின்னமான அன்னப்பறவை சின்னத்தை வேறு பெயரில் பதிவு செய்யப்படவுள்ள கட்சிக்கு வழங்க ஒருபோதும் இணக்கம் வெளியிடப்பட மாட்டாது என புதிய ஜனநாயக முன்னணியின் பேச்சாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் கூட்டணி தொடர்பில் தற்போது எழுந்துள்ள சிக்கல்களை தவிர்க்கும் நோக்கில் சட்டவல்லுனர்களால் தயாரிக்கப்பட்ட சட்டபூர்வ அறிக்கை நாளைய தினம் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.