Header Ads



புத்தளம் கடலில் காணாமல், போனவரின் ஜனாசா இன்று மீட்பு


புத்தளத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன மீனவர் ஒருவர் இன்று (25) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

புத்தளம் முள்ளிபுரத்தைச் சேர்ந்த சேகு ரபீக் ( வயது 59) எனும் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, 

குறித்த மீனவர் கடந்த வியாழக்கிழமை (23) காலையில் தனது மகனோடு, வழமைபோல மீன் பிடித் தொழிலுக்குச் சென்றுள்ள நிலையில், புத்தளம் கடலில் தவறுதலாக வீழ்ந்து காணாமல் போயுள்ளதாக ௯றப்படுகிறது. 

காலை 7 மணியளவில் வழமைப் போன்று கடலில் வலை விரிப்பதற்காக சென்ற மீனவர் ரபீக், தனது இயந்திர படகின் தளத்தில் அமர்ந்து சென்ற வேளையில் அந்த சமயம் எழுந்த பாரிய அலையொன்றினால் நிலைத்தடுமாறி அவர் கடலுக்குள் வீழ்ந்துள்ளார். 

தனது தந்தை கடலுக்கு வீழ்ந்ததை அடுத்து அவரோடு சென்ற மகன் உடனடியாக தந்தையை காப்பாற்றுவதர்காக அவரும் கடலில் குதித்துள்ளார். 

இந்த சமயத்தில் அவர்களின் இயந்திர படகின் விசிறிகள் அவருக்கு காயத்தை ஏற்படுத்தியதுடன், அப்படகு தானாகவே இயங்கி அந்த இடத்தில் இருந்து தூரமாகிச் சென்றுள்ளது. 

இதனால் தனது தந்தையைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்ததால் மீனவர் ரபீக்கின் மகன் சுமார் ஒரு மணித்தியாலம் வரை நீந்திச் சென்று புத்தளம் கடல் நீர் ஏரியின் அண்டைய பகுதியான மாம்பூரி மீன்பிடிக் கிராமத்தை அடைந்து நடந்த சம்பவங்களை தமது குடும்பத்திற்கு தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து, குறித்த மீனவரைத் தேடி அன்றைய தினம் புத்தளத்திலிருந்து 35 படகுகளில் மீனவர்களும், பொதுமக்களும் இணைந்து வரை தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். 

அத்துடன், காணாமல் போன குறித்த மீனவரைத் தேடி புத்தளம் பொலிஸாருடன் இணைந்து கடற்படையினரும், கடற்படையின் நீர் மூழ்கிப் படையணியினர் கடற்பரப்பில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

எனினும், குறித்த மீனவர் காணாமல் போய் இரண்டு நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இவ்வாறு மீட்கப்பட்ட மீனவரின் சடலம் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டதுடன், பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணை என்பன இடம்பெற்றது. 

புத்தளம் , கற்பிட்டி பகுதிகளுக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிசாம் மரண விசாரணையை நடத்தினார். 

- ரஸ்மின்-

1 comment:

Powered by Blogger.