Header Ads



இலங்கைக்கு அவசரமாக வந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் - ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு


இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால் இன்று (18) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். 

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல் தொடர்பாக இதன்போது கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதுடன், இருநாட்டு இராணுவத்தினருக்குமிடையே பலமான ஒத்துழைப்புகள், சமுத்திர பாதுகாப்பு, கரையோர பாதுகாப்பு படைகளுக்கிடையிலான புரிந்துணர்வு மற்றும் செயற்பாடுகளை மேம்படுத்துதல்
தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. 

இலங்கை, மாலைதீவு மற்றும் இந்தியாவுக்கிடையிலான சமுத்திர வலயம் தொடர்பான விடயங்களை மீளாய்வு செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய இந்திய பாதுகாப்பு ஆலோசகர், ஏனைய பிராந்திய நாடுகளையும் கண்காணிப்பாளர்களாக இந்த செயற்பாட்டில் இணைத்துக்கொள்ள வேண்டுமென தெரிவித்தார். 

இரகசிய தகவல்களை ஒன்றுதிரட்டும் தொழிநுட்பத்திற்கு இலங்கைக்கு உதவியளிக்க இந்தியா உறுதியளித்துள்ளது. அத்துடன் பாதுகாப்பு உடன்படிக்கைகளையும் பலப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக இலங்கை பாதுகாப்பு படையினருக்கு தேவையான உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்திய அரசாங்கம் வழங்கவுள்ளது. மேலும் பூகோள ஒருங்கிணைப்பு மையத்தினை ஸ்தாபித்தல் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. 

மொஹான கருணாரத்ன 
பிரதிப் பணிப்பாளர் (ஊடகம்)
2020.01.18 

1 comment:

  1. மேலே கூறியவைகள்,தனிப் பொய்களே அன்றி உண்மையல்ல எனவும் இலங்கைக்கு சரியாக ஆப்புவைக்க இந்தியா போட்டுள்ள நிபந்தனைகளுக்கு இலங்கை உடன்படவேண்டும் என்பதை வலியுறுத்துவது தான் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் பயணத்தின் நோக்கம் என பொதுமக்கள் கதைக்கின்றனர்.உண்மை என்னவென்று எமக்குத் தெரியாது.

    ReplyDelete

Powered by Blogger.