Header Ads



மீண்டும் இலங்கைக்கு திரும்பும், சீனர்கள் குறித்து அச்சமடையத் தேவையில்லை : சீனத்தூதரகம்

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் சீன மத்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளமையால் சீனர்கள் புதுவருடத்தின் பின்னர் மீண்டும் இலங்கைக்குத் திரும்புவது குறித்து இலங்கையர்கள் அச்சமடையத் தேவையில்லை என்று தெரிவித்திருக்கும் சீனத்தூதரகம், கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கும் அதற்கு எதிரான போராட்டத்தில் வெற்றியடைவதற்குமான இயலுமை சீனாவிடம் காணப்படுவதாக நம்பிக்கை வெளியிட்டிருக்கிறது.

இதுகுறித்து சீனத்தூதரகம் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

சீன மத்திய அரசாங்கம் மற்றும் உரிய அதிகாரிகள் குழுவினர் ஒன்றிணைந்து கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு மட்டங்களிலான கட்டமைப்பை நிறுவியிருக்கிறார்கள்.

அத்துடன் இவ்வைரஸ் தொற்றினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் வூஹான் மற்றும் ஹுபே நகரங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கும், அதற்கு எதிரான போராட்டத்தில் வெற்றியடைவதற்குமான இயலுமை தம்மிடம் இருப்பதாக சீன அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதேபோன்று உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமையால் சீனர்கள் அவர்களது புதுவருடத்தின் பின்னர் மீண்டும் இலங்கைக்குத் திரும்புவது குறித்து இலங்கையர்கள் அச்சமடைய வேண்டிய அவசியமில்லை. குறிப்பாக வூஹான் நகரிலிருந்து வெளியேறுவதற்கும், அந்நகருக்குள் நுழைவதற்கும் தற்காலிகத்தடை விதிக்கப்பட்டுள்ளமையின் காரணமாக, அப்பிராந்திய மக்கள் இலங்கை உள்ளிட்ட வேறெந்த நாடுகளுக்கும் பயணிப்பதற்கான வாய்ப்பு இல்லை.

அதுமாத்திரமன்றி ஹுபே மாகாணத்தின் சீன நிறுவன ஊழியர்கள் மீண்டும் இலங்கைக்குத் திரும்புவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் சீனத்தூதரகம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

அத்தோடு சீனாவின் வேறு மாகாணங்கள் மற்றும் நகரங்களில் இருந்து இலங்கைக்கு வருபவர்கள், இங்கு வந்த பின்னர் குறைந்தபட்சம் 14 நாட்கள் வரை சுயதடுப்பில் இருக்குமாறும் தூதரகம் அறிவுறுத்தியிருக்கிறது.

மேலும் குழுக்களாக சுற்றுலா செல்வதை சீன அதிகாரிகள் இடைநிறுத்தியிருப்பதுடன், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர் நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தடை செய்வதற்கான அனைத்து விமானநிலையங்கள் மற்றும் போக்குவரத்து நிலையங்களிலும் கண்காணிப்புக்கள் மற்றும் பரிசோதனைகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன.

No comments

Powered by Blogger.