Header Ads



கோட்டாபய, சஜித், அநுரகுமாரவின் தேர்தல் பிரசார செலவு விபரங்கள் வெளியாகியது

தேர்தல் வன்முறை கண்காணிப்பு மத்திய நிலையம், நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் சகல வேட்பாளர்களும் செலவிட்ட முழுமையான பிரசாரங்களுக்கு செலவான செலவுகள் தொடர்பான இறுதி அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்களும் தமது தேர்தல் பிரசாரங்களுக்காக முழுமையாக 3 ஆயிரத்து 796 மில்லியன் ரூபாய் பணத்தை செலவிட்டுள்ளனர்.

அறிக்கையின் அடிப்படையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்திற்காக ஆயிரத்து 826 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசாரத்திற்காக ஆயிரத்து 737 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி கூட்டணி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் பிரசாரத்திற்காக 169 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

அச்சு ஊடகங்களில் பிரசாரங்களை செய்யவதற்காக புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சார்பில் அதிகம் செலவிடப்பட்டுள்ளது. 216 மில்லியன் ரூபாய் அச்சு ஊடகங்களில் பிரசாரம் செய்ய செலவிடப்பட்டுள்ளது.

அத்துடன் இலத்திரனியல் ஊடகங்களில் பிரசாரங்களுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளருக்கே அதிகம் செலவிடப்பட்டுள்ளது. ஆயிரத்து 126 மில்லியன் ரூபாய் பொதுஜன பெரமுனவின் வேட்பாளருக்காக செலவிடப்பட்டுள்ளது.

கூட்டங்கள் உட்பட ஏனையவற்றுக்காக புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளருக்கு அதிகமாக செலவிடப்பட்டுள்ளது.

மூன்று பிரதான வேட்பாளர்களை தவிர ஏனைய 32 வேட்பாளர்களின் பிரசாரங்களுக்காக மொத்தமாக 64 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், கோட்டாபய ராஜபக்ச, சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகிய மூன்று பிரதான வேட்பாளர்களின் பிரசாரங்களுக்காக மொத்தமாக 3 ஆயிரத்து 732 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் பிரசாரங்களுக்காக இரண்டு பிரதான வேட்பாளர்களான கோட்டாபய ராஜபக்ச மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவருக்காக 3 ஆயிரத்து 563 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.