November 15, 2019

"நாம் என்ன நிலைப்பாடு எடுக்கிறோம் என்பதே பிரதானமானது"

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலின் இறுதி கணங்கள் இவை.  யார் வந்தாலும் நமக்கென்ன என  சொல்பவர்களுடன் பேசுவதற்கு ஒன்றுமில்லை. 

பிரதான போட்டியாளர்களான சஜித்- கோதாவுக்கிடையில்  , யார் தெரிவாவர் என்பதில் பல்வேறு எதிர்வு கூறல்கள் வந்த வண்ணமுள்ளன. தாம் ஆதரிக்கும் தரப்பே வெற்றிபெறும் என இறுதிக் கணம்  வரை அதன் ஆதரவாளர்கள் பேசிக் கொண்டிருப்பர். 

இந்த ஜனாதிபதித் தேர்தலில், நாம் எடுத்திருக்கும் அரசியல் நிலைப்பாடு , மகிந்த + கோதா  குழுமம் அதிகாரத்திற்கு  வரக் கூடாது என்பதே. இதற்கான பல்வேறு காரணங்களை கடந்த காலங்களில் எழுதிப், பதிவு செய்து வந்திருக்கிறோம். 

அதற்காக சஜித்தினை எந்த நிபந்தனையுமில்லாது, குருட்டுத்தனமான வழிபாட்டுடன் ஆதரிக்கிறோம் என்பதல்ல. 

கோதா வந்தாலும் சரி, சஜித் வந்தாலும் சரி... இலங்கையின் அனைத்து இன மக்களுக்கு உரிமைகள்  மறுக்கப்படுகின்ற போது அதற்கெதிராக எழுதவும், பேசவும் , போராடவும் தாயாராகவே உள்ளோம்.

தாம் ஆதரித்த தரப்பு ஒடுக்குகின்ற போது, கள்ள மௌனம் காத்தும், அல்லது அதனை நியாயப்படுத்தியும் , தாம் எதிர்த்த தரப்பு மக்களை ஒடுக்குகின்ற போது , மௌனம் கலைப்பதும், அதனை அரசியலாக்குவதும் அல்ல எமது நிலைப்பாடு.

 இலங்கையில் உள்ள எந்தக் கட்சியையும் நாம் ஆதரிப்பவர்களுமல்ல , அதன் உறுப்பினர்களுமல்ல. இந்தக் கட்சிகளை ஆதரிப்பதன்  வழியாக எந்த தனிப்பட்ட நலன்களையும் எதிர்பார்த்து அரசியல் பணி செய்பவர்களுமல்ல. எமது நிலைப்பாடு , ஒடுக்கப்படும் மக்கள்  நலன் சார்ந்த அரசியல் புரிதலுடனும் , அடிப்படை ஜனநாயக விழுமியங்களுடனும் ஊடாடிக் கலந்து எழுவதாகும். 

மகிந்த + கோதா  குழுமம் அதிகாரத்திற்கு வருவது...

* இலங்கையின் ஒட்டுமொத்த அடிப்படை ஜனநாயக விழுமியங்களை குழி தோண்டிப் புதைத்து விடும் என உறுதியாக நம்புகிறோம்.

* குடும்ப, வம்ச, சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுப்பதுடன்,   நிலவுகின்ற குறைந்த பட்ட பாரளுமன்ற ஜனநாயகம் , மெதமுலன்ன அரச வம்ச அதிகாரத்தின் மூலம் மாற்றீடு செய்யப்படும் என உறுதியாக சொல்கிறோம்.

* மகிந்த குடும்பமே, நாட்டின் மொத்த வளங்களையும் கட்டுப்படுத்தி, ஊழலையும் அதிகாரத் துஸ்பிரயோகத்தினையும் கட்டற்று செய்வர் என்கிறோம்.

* தமிழ், முஸ்லிம், மலையக மக்களுக்கெதிரான சிங்கள  இனவாதம் அரச ஆதரவுடன் மேலும் பலம்பெறும்... இதற்கான அனைத்து நியாயங்களும்  சிங்கள ஆதிக்க கருத்தியலுடன் பரப்புரை செய்யப்படும். சிங்கள இனவாதம் போசிக்கப்படும் என நம்புகிறோம்.

* வடக்கு, கிழக்கு மாகாணங்களில்  தமிழ் முஸ்லிம் மக்களிடையே  முரண்பாட்டை மேலும் ஆழப்படுத்தி இரு இனங்களிடையேயும் இரந்தம் சிந்தலை ஊக்குவிக்கும் என எதிர்வுகூறுகிறோம்.

* யாரும் கேள்வி கேட்க முடியாது, எதிர்க்க முடியாது, எதிர்கட்சிகள்  பலவீனப்படுத்தப்படும், பணம் கொடுத்து ஆட்களை விலைக்கு வாங்கப்படுவர்.  நீதித்துறை ,  சுதந்திர ஊடகத்துறை நசுக்கப்படும்......என உறுதிப்படுத்துகிறோம்.

* தனி மனிதர்கள்,  அமைப்புகள் அச்சுறுத்தப்படுவர்.  காணமலாக்கப்படுவர், கொல்லப்படுவர். ஒருவித இராணுவ பாசிசம் தலையெடுக்கும் என்கிறோம்.

இவையெல்லாம், சிங்களத் தேசத்தினை காப்பதற்காக மகிந்த + கோதா  குழுமம் , வீரத்துடனும் தியாகத்துடனும் செய்வதாக  மார்தட்டப்படும்.

இவைகளை நாம் வெறும் கற்பனையில் சொல்லவில்லை. மகிந்த அதிகாரத்தில் இருந்த கடந்த கால இரண்டு ஜானாதிபதி பதவிக் காலத்தின் போது செய்தவற்றையே சொல்கிறோம்.

இந்த மகிந்த + கோதா  குழுமத்தினை  அதிகாரத்திற்கு கொண்டுவர வேலை செய்கின்ற  தமிழ் , முஸ்லிம், மலையகத் தலைமைகளிடம் கேட்கிறோம் மேலே நாம் சொன்னவற்றை , கடந்த காலத்தில் மகிந்த + கோதா  குழுமம் செய்யவில்லை என்று உங்களால் மறுக்கத்தான் முடியுமா?

இந்த நிலைமையில் இருந்து இலங்கையை காப்பதற்கான வழி, மகிந்த + கோதா  குழுமத்தினை 
இந்த ஜானதிபதித் தேர்தலில்  நிராகரிப்பதேயாகும்.

சஜீத் ஆட்சிக்கு வந்தாலும், மேற் சொன்னவற்றில் பலவற்றையோ, சிலதையோ செய்தாலும், செய்ய முற்பட்டாலும்  ,  எஞ்சி இருக்கின்ற ஜனநாயக தளத்தில் நின்று அதனை நாம் எதிர்கொள்வோம்.

 இந்த அரச ஒடுக்குமுறைகளை எதிர்ப்பதற்கு   
இன்றைய மக்கள் விடுதலை  முண்ணனி (JVP)நமது தோழமைச் சக்தி, அதன் மீது நமக்கு அரசியல் பகையில்லை ,எதிர்காலத்தில்  உரையாடி தீர்க்க வேண்டிய முக்கிய அரசியல் விடயங்கள்  இருப்பதைத் தவிர.......

ஆகவே வெற்றி ,தோல்வி ஒருக்காலும், நாம் எடுக்கும் அரசியல் நிலைப்பாட்டை தீர்மானிப்பதாக இருந்து விடக்கூடாது என்கிறோம்.

தீர்க்கமான அரசியல் நிலைப்பாடுகள் மட்டுமே, ஒடுக்கப்படுகின்ற மக்கள் முன்னுள்ள நம்பிக்கைகளாகும் என்கிறோம்.

ஆக குறைந்தபட்சமாக இன்னும் எஞ்சியுள்ள ஜனநாயக  தளத்தையாவது பாதுகாப்போம்! முன் நோக்கி செல்வோம்! ஒடுக்கப்படும் மக்களாகிய நாம் ஜன நாயகத்திற்கான,மனித உரிமைகளுக்கான ,சமூக ஐக்கியத்திற்கான  உறுதியான நிலைப்பாடுகளை பலப்படுத்துவோம்!!

fauzer mahroof

1 கருத்துரைகள்:

தம்பிfouser,வெளிநாட்டில் பதுங்கியிருந்து/ டயஸ்போறாவின் பணத்தில் சுகம் கண்டு/ இரு பித்தலாட்ட மு.தலைவர்களின் டஷ்பின் கூடைக்குள் இருந்து கொண்டு எழுதியதாக தெரிகிறது.
பாசிச தமிழ் புலிகளின் இறுதி இலக்கான அடக்கி ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களை மட்டுமே கொண்ட வடக்கு கிழக்கை ஆட்சி செய்ய துடிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் சிக்கித் தவிக்கும் ரணில் கொம்பனியின் சதிக்குள் தள்ளிவிடும் முயற்சியாகவே உமது எழுத்து அமைந்துள்ளது.
இஸ்ரேலிய சிந்தனை கொண்ட தமிழ் தரப்பு சார்ந்த எந்தக் கட்சிக்கும் முஸ்லிம்கள் வாக்களிக்க கூடாது.

Post a comment