Header Ads



சஜித் பிரேமதாசவுடன் கைக்கோர்த்து, குடும்ப தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் - சம்பிக்க

குடும்ப தீவிரவாதத்தை ஒழித்து நாட்டின் எதிர்காலத்தை ஜனநாயக வழியில் கொண்டுசெல்ல புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடன் மக்கள் கைகோர்க்க வேண்டும் என ஜாதிக ஹெல உருமய கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.  

ஜாதிக ஹெல உருமய கட்சியின் தேசிய மாநாடு நேற்று கொழும்பு,பொரள்ளை கெம்பல் பார்கில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  இங்கு மேலும் உரையாற்றுகையில், ஜாதிக ஹெல உருமய கட்சியானது அரசியல் ரீதியாக வெற்றியடைய முடியாது போயிருந்தாலும் இந்நாட்டு அரசியலை தீர்மானிக்கும் பிரதான சக்திகளில் ஒன்றாகவுள்ளது. ஏனைய கட்சிகளை போன்ற வெறுமனே உருவாக்கப்பட்ட கட்சியல்ல. ஜாதிக ஹெல உருமய என்பது, எமது நாட்டில் நிலவிய கொடிய தீரவாதத்தை தோற்கடிப்பதற்கான பலத்தை கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டது.    1999ஆம் ஆண்டு நவம்பர் முதலாம் திகதி வன்னியில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலின் பின்னர் தீவிரவாதத்தை துடைத்தெறிய வேண்டுமென்ற வேட்கையுடன் புரட்சிகரமாக உருவாக்கப்பட்டதே எமது கட்சி. 2005ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாங்கள் ஆதரவளித்தோம் என்பதுடன் தீவிரவாதமும் தோற்கடிக்கப்பட்டது.  

என்றாலும் யுத்தம் நிறைவடைந்த பின்னர் தமது குடும்பம்தான் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடு முழுவதும் பிரசாரத்தை முன்னெடுத்தார். முழு அரச இயந்திரத்தையும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தார். அதற்காக தமது உறவினர்கள் 269பேர்வரை முக்கிய பதவிகளில் அமர்த்தியிருந்தார்.  

ஒட்டுமொத்த அரச இயந்திரத்தையும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்பட்டார். இதனையே 2015ஆம் ஆண்டு நாம் தோற்கடித்தோம்.  

நவம்பர் 16ஆம் திகதி இந்நாட்டு மக்களுக்கு தீர்மானமிக்க நாள். ஒரு குடும்பத்திற்கு நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது. அடிமட்ட ஜனநாயகத்திலிருந்து நாட்டை வழிநடத்த அனைவரும் சஜித் பிரேமதாசவுடன் கைக்கோர்க்க வேண்டும். குடும்ப தீவிரவாதத்தை ஒழித்து ஜனநாயகத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றார். 

சுப்பிரமணியம் நிஷாந்தன்  

1 comment:

Powered by Blogger.