Header Ads



கோத்தபயவின் சிறுவயது குழப்படிகளை போட்டுத்தாக்கும் ராஜித - நாட்டின் குடியுரிமை, அடையாள அட்டை இல்லாதவர் தலைவராக கூடாதென்கிறார்

நாட்டின் குடியுரிமையும் தேசிய அடையாள அட்டையும் அற்ற கோத்தபாய ராஜபக்சவை நாட்டின் தலைவராக நியமிக்க இடமளிக்கக் கூடாது என அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று -29- தெரிவித்தார்.

கொலன்னாவ பிரதேசத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக் கூட்டமொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றும் போது குடியுரிமை மற்றும் குடியகல்வு திணைக்களத்தையும் ஆட்பதிவு திணைக்களத்தையும் பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்.

அச்சந்தர்ப்பத்தில் அவர் பாதுகாப்பச் செயலாளராக கடமை புரியவில்லை. பாதுகாப்பு அமைச்சராகவே கடமையாற்றினார். இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி கோத்தபாய ராஜபக்ச போலியான கடவுச் சீட்டினையும் அடையாள அட்டையினையும் பெற்றுக் கொண்டுள்ளார் என இங்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன விமர்சித்தார்.

இராணுவத்தினருக்கு ஊடகவியளாலர்களை தாக்குவதற்கோ கொலை செய்வதற்கோ எவ்வித அவசியமும் இருக்கவில்லை. ஊடகவியளாலர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தது கோத்தபாய ராஜபக்சவே. ஏன் என்றால் கோத்தபாய ராஜபக்சவின் மிக் கொடுக்கல் வாங்கல்கள் குறித்த அனைத்து இரகசியங்களையும் ஊடகவியளாலர் லசந்த விக்ரமதுங்க தன்வசம் வைத்திருந்தார்.

அதனை அவர் இறப்பதற்கு முன்னர் பத்திரிகையில் வெளியிட அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தார். அதனை அடிப்படையாக கொண்டே கோத்தபாய ராஜபக்ச இந்தக் கொலையினை செய்தார்

அதேபோல வசீம் தாஜூடினை கொலை செய்வதற்கு இராணுவத்தினருக்கு எவ்வித அவசியமும் இல்லை. ஏனென்றால் தாஜூடீன் இராணுவத்தினருடன் ரகர் விளையாடவில்லை. ராஜபக்ச குடும்பத்தினருடனே அவர் ரகர் விளையாட்டில் ஈடுபட்டிருந்தார்.

தொடர்ந்து நான்கு வருடங்கள் சிறந்த ரகர் வீரராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். அதன்போது பல சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு வசீம் கொல்லப்பட்டதும் இந்த ராஜபக்ச குடும்பத்தினராலேயே ஆகும்.

ஊடகங்களுக்கு தீயிட்டார்கள், ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தியிருந்தார்கள். இவையெல்லாவற்றிற்கும் காரணமாக இருந்த ராஜபக்ச குடும்பத்திடம் மீண்டும் நாட்டை ஒப்படைப்பதா..? எமது அரசாங்கத்திலும் குறைகள் இருக்கலாம். அது இந்த அரசாங்கத்தில் மாத்திரம் இல்லை. எந்த அரசாங்கத்திலும் இருக்கக்கூடும். அப்படி இல்லை என்றால் அது அரசாங்கமே கிடையாது.

ஊழலை ஒழிப்பதற்கு பலர் நாட்டை ஆட்சி செய்ய முயற்சிக்கின்றார்கள். அவ்வாறு ஊழலை ஒழித்தவர்கள் இருக்கின்றார்களா? உதாரணத்திற்கு பிரான்ஸ் நாட்டை எடுத்துக்கொள்வோம் அங்கு ஜனாதிபதி ஊழலை ஒழிப்பதற்காகவே ஆட்சியைக் கைப்பற்றினார். ஆனால் தறபொழுது அவரை அடித்து துரத்தும் அளவிற்கு மக்கள் முன்வந்திருப்பதை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. எனவே ஊழலை ஒழிக்க நாட்டை பிடிப்பது சாத்தியமாகுமா?

கோத்தபாய ராஜபக்ச என்பவர் தனக்குத் தானே கூறிக்கொள்கின்றார் ராஜபக்ச குடும்பத்தில் உள்ள அப்பாவியான நபர் தானே என்று. அவருடைய அப்பாவித்தனத்தை கமல் குணரத்ன எழுதிய புத்தகத்தில் காணக்கூடியதாக இருந்தது.

சிறுவயதில், ஒரு தருணத்தில் தனது அம்மா தனக்கு சாப்பாட்டை கொடுத்த போது அதில் ஏதோ குறை இருந்ததால் அந்த சாப்பாட்டை தனது தலையிலேயே கொட்டிக்கொண்டாராம்.

தான் வீட்டில் இருக்கும்போது ஒருவர் வந்து தம்மை தாக்கி சென்ற நேரத்தில் தாம் ஆடையில்லாமல் இருப்பதை கூட மறந்து நெடுந்தூரம் சென்று அந்த நபரை தாக்கியதாக அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் அவரது அப்பாவித்தனம்.

கோத்தா “பய” அதன் அர்த்தம், சிறுவயதிலேயே சிறந்த பெயரையே அவரது பெற்றோர் அவருக்கு இட்டுள்ளனர். அவரது பெயரைக் கண்டால் பயம் என்பதைப் போல இருக்கின்றது.

1991 இராணுவத்தில் இருந்து விலகி பயந்து ஓடிய கோத்தபாய இன்று தாம் சிறந்த இராணுவ வீரர் என கூறிக்கொள்கின்றார். நாட்டை காக்கும் யுத்தத்தின் போது உயிர் தப்பிக்கொள்வதற்காகவே அவர் இராணுவத்தில் இருந்து வெளியேறினார்.

அச்சந்தர்ப்பத்தில் கோத்தபாய பத்திரிகை ஒன்றிற்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். வெளிநாட்டில் தமது மனைவி தூக்கமில்லாமல் தவிப்பதாகவும் எத்தருணத்திலும் தமது உயிர் போய்விடுமோ என்ற அச்சத்தில் இருப்பதாகவும் கூறியிருந்தார்.

அவ்வாறு தப்பியோடிய இவர் எப்படி சிறந்த இராணுவ வீரராவார். நினைத்தாலே சிரிப்பாக இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.