Header Ads



இலங்கையில் குறைந்தபட்சம் 19 இனங்கள், காணப்படுவதாக ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டது

பெரும்பான்மை சிங்களவர்களின் மனதைக் குடைந்த தனிநாடு, சமஷ்டி ஆட்சி ஆகியவற்றை வலியுறுத்திய ஆயுதப்போராட்டமோ அல்லது அந்தக் கோரிக்கையோ தற்போது இல்லை. அவ்வாறிருந்தும் கூட இன்னமும் இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை இனத்தவர்களுக்கு அதிகாரங்களை வழங்க வேண்டும் அல்லது சமத்துவமான நிலையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணப்பாடு பெரும்பான்மையினத் தலைவர்களுக்கு வரவில்லை என்று தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இலங்கை - இந்திய நட்பறவு ஒருமைப்பாட்டு சந்திப்பு ஒன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் நேற்று  கொழும்பிலுள்ள ரமடா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அச்சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மனோகணேசன் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையில் பல்வேறு விடயங்களில் ஒற்றுமை காணப்படுகின்றது. குறிப்பாக இருநாடுகளுமே பல்லின, பன்மொழி கலாசாரத்தைக் கொண்ட பன்முகத்தன்மை வாய்ந்த நாடுகளாகும்.

 இலங்கையில் குறைந்தபட்சம் 19 இனங்கள் காணப்படுவதாக அண்மையில் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டு, அதுகுறித்த புத்தகம் ஒன்றையும் நாங்கள் வெளியிட்டிருந்தோம். எனினும் எமது நாட்டில் பிரதானமாக நான்கு பௌத்தம், இந்து, இஸ்லாம் மற்றும் கத்தோலிக்கம் ஆகிய 4 மதங்கள் பின்பற்றப்படும் அதேவேளை அரசியலமைப்பின் பிரகாரம் மூன்று மொழிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 

எனினும் இங்கு குறித்தவொரு மதம் மற்றும் மொழியே பிரதானமானது என்ற கருத்தோட்டம் உருவான போது சிக்கல்களும் தலைதூக்க ஆரம்பித்தன. அத்தகைய எண்ணம் மாற்றமடைந்து இது பல்லின, பன்மொழி நாடு என்ற விடயம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதுவே அனைத்துப் பிரச்சினைகளுக்குமான சரியான தீர்வாக அமையும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

(நா.தனுஜா)

No comments

Powered by Blogger.