Header Ads



வீட்டின் சமையல் அறையில் வேட்பாளரை தெரிவு செய்த பொதுஜன பெரமுன - கபீர்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மக்கள் கோரும், வெற்றி பெறக் கூடிய தலைவரையே நிறுத்த உள்ளதாக அந்த கட்சியின் தவிசாளரான அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சின் 3000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட பொல்பித்துகம வீதியை மக்களின் பயன்பாட்டுக்காக இன்று திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்த போகிறார்கள் என்பது குறித்து அனைவரும் பேசி வருகின்றனர்.

அவரை வேட்பாளராக நிறுத்துங்கள், இவரை வேட்பாளராக நிறுத்துங்கள் என அனைவரும் கூறுகின்றனர். மக்கள் சஜித் பிரேமதாசவை கோருகின்றனர்.

எமது கட்சி கட்டுப்பாடு சட்டத்திட்டங்களை மதிக்கும் கட்சி. எமது தலைவர் கட்சிக்காக பாரிய அர்ப்பணிப்புகளை செய்துள்ளார். கட்சிக்குள் இது குறித்து நாங்கள் நேரடியாக பேசி வருகின்றோம்.

பிரதமர் பல சந்தர்ப்பங்களில் கட்சிக்காக அர்ப்பணிப்புகளை செய்துள்ளார். 2010ஆம் ஆண்டு அவர் தேர்தலில் போட்டியிடாமல் சரத் பொன்சேகாவை வேட்பாளராக நிறுத்தினார்.

2014ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பம் இருந்த போதும், அவர் வேறு கட்சியின் பொதுச் செயலாளரான மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்த வாய்ப்பை வழங்கினார். அந்தளவுக்கு ரணில் விக்ரமசிங்க கட்சிக்காக அர்ப்பணிப்புகளை செய்துள்ளார்.

பிரதமர் எப்போதும் கட்சியை நினைத்து தீர்மானத்தை எடுப்பது போல, இம்முறையும் எடுப்பார் என நினைக்கின்றேன்.

ஐக்கிய தேசியக்கட்சிக்கு வெற்றி பெறக் கூடிய பின்னணி உருவாகியுள்ளது. நாடும் கோருகிறது. கட்சியினர் அனைவருடனும் இணைந்து, கட்சியின் தலைவர் நல்ல தீர்மானத்தை எடுப்பார் என நான் நினைக்கின்றேன்.

சில கட்சிகளின் வேட்பாளர் வீட்டின் சமையல் அறையில் தெரிவு செய்யப்படுகிறார். அந்த கட்சியின் ஜனநாயகம் இல்லாததே இதற்கு காரணம். யார் வேட்பாளர் என்று குடும்பமே தீர்மானிக்கும்.

மக்கள் கோருகின்றனர் என்று கூறி, வீட்டின் சமையல் அறையில் வேட்பாளரை தெரிவு செய்து அறிவித்துள்ளனர்.

பொதுஜன பெரமுன உள்ளுக்குள் தெரிவு செய்து வேட்பாளரை அறிவித்துள்ளது. எனினும் ஐக்கிய தேசியக் கட்சி மக்களின் கோரிக்கையை செவிமடுக்கும்.

மக்களின் உணர்வுகளை புரிந்த, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக்கூடிய, தம்மை மேம்படுத்த பல ஆண்டுகள் காத்திருந்த மக்கள் எதிர்பார்க்கும் தலைவரை நாங்கள் வேட்பாளராக நிறுத்துவோம் எனவும் கபீர் ஹாசிம் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.