Header Ads



இலங்கை முஸ்லிம்கள் மீது வன்முறையைத் தூண்டும் அளவு, மதத் தலைவர்கள் செயற்படுவது கவனிக்கப்படவேண்டிய விடயம்

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் ஒருங்கிணைந்த அணுகுமுறை இல்லாமலிருப்பது, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பாதுகாப்புப் படையினரின் செயற்றிறனிலும் மோசமாகத் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பெச்சலேட் தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் அத்தியாவசியம் என்றாலும், அவசரகால நிலை என்பது, குறைந்தபட்ச காலமாகவே இருக்கவேண்டும் என்றும் பயங்கரவாதத் தடுப்பு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், அவசரகாலச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக அரசாங்கம் கவனஞ்செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 41ஆவது அமர்வு, சுவிட்ஸர்லாந்திலுள்ள ​ஜெனீவா நகரில், (24) ஆரம்பமானது. ஜூலை மாதம் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தப் பேரவையின் போது, பல நாடுகள் பற்றிய மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளான தனியுரிமை, விசேட தேவையுடையோரின் உரிமைகள், சிறுபான்மையினரின் உரிமைகள், சிறுவர் உரிமைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளன.

 இந்தப் பேரவை அமர்வின் ஆரம்ப உரையை ஆற்றிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், இலங்கை தொடர்பான தனது கவனத்தையும் செலுத்தியிருந்தார்.

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக, இலங்கை பதற்றமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்றும், அவர் இதன்போது கூறியுள்ளார்.

அத்துடன், இந்தத் தாக்குதல்களுடன் தொடர்புடையதான சமீபத்தில் வெளியாகிவரும் அறிக்கைகளில், இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் மற்றும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகள் பற்றித் தெளிவாவதாகவும் அவை குறித்து தாம் அதிருப்தியடைவதாகவும், ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முஸ்லிம்கள் மீதான வன்முறையைத் தூண்டும் அளவுக்கு, சில மதத் தலைவர்கள் அறிக்கையிடுவதும் செயற்படுவதும் கவனிக்கப்படவேண்டிய விடயம் என்றும் இது குறித்துத் தான் கவலையடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

அனைத்து வகையான வன்முறை, பாகுபாடுகளின் மூல காரணங்களை நிவர்த்திசெய்ய, அரசியல், மத, பிற சமூகத் தலைவர்களை ஒன்றிணைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படல் வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தைரியத்தைப் பாராட்டிய அவர், தன்னுடைய ஆதரவு, எப்போதும் இலங்கைக்கு இருக்குமென்றும் கூறியுள்ளார்.

1 comment:

Powered by Blogger.