Header Ads



நாம் தமிழர் கட்சியின் ஆடு, மாடு மாநாடு


மதுரை -  விராதனூரில் நாம் தமிழர் கட்சியின் ஆடு – மாடுகளின் மாநாடு நேற்று (10) நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின்  சீமான் பேசியதாவது:


“ஆடு, மாடுகள் எங்களின் செல்வங்கள். எங்கள் வாழ்க்கை, கலாசாரத்துடன் இணைந்து வாழும் உயிரினங்கள். ஒவ்வொருவர் வீடுகளிலும் உறவினர் போல் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறோம். கால்நடைகள் குடும்ப உறுப்பினர்களாக இருந்து வருகின்றன. காடும், காடு சார்ந்த இடங்களில் வாழ்ந்த ஆடு, மாடுகள் தற்போது அதே காட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது. இந்த தடையை உடைக்க வேண்டும்.


மாட்டுக்கறி வர்த்தகம் ரூ.30 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. பால் வர்த்தகம் மூலம் ரூ.13.5 இலட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது. இதில் தமிழகத்தின் பங்கு ரூ.1.38 இலட்சம் கோடி. இந்த பால் சந்தை மதிப்பை கூட்டுவதற்கு பதில் ரூ. 50 ஆயிரம் கோடிக்கு சாராயம் குடிக்க வைத்து தாய்மார்களின் தாலியை அறுத்து வருகின்றனர். கால்நடைத்துறை கால்நடைகளை பற்றி கவலைப்படாத துறையாக உள்ளது. பால்வளத்துறை மாடுகளே இல்லாமல் மாட்டுப்பால் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது  இவ்வாறு சீமான் பேசினார்.


ஜல்லிக்கட்டு காளைக்கு சீமான் மரியாதை செய்யும் போது காளை திமிறியது. அதிக வெளிச்சம் இருந்தால் ஆடு, மாடுகள் மிரண்டு ஓடிவிடும் என்பதால் மாநாட்டில் விளக்கு வெளிச்சம் அதிகம் இல்லை. பட்டாசுகளும் வெடிக்கப்படவில்லை. மாநாட்டில் சீமான் மட்டுமே பேசினார். ஆடு, மாடுகள் மனிதர்களுக்கு கோரிக்கை வைப்பது போல் சீமான் பேசினார்.

No comments

Powered by Blogger.