Header Ads



முஸ்லிம் தலைமைகளின் கூட்டுத் தீர்மானத்தால், பாரிய அழிவில் இருந்து பாதுகாக்கப்பட்ட சமூகம்

சமூக நலன்களை முன்னிறுத்தி முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஓரணியாகத் திரண்டு மேற்கொண்ட தீர்க்கமான முடிவு காரணமாக முஸ்லிம் சமூகம் பாரிய அழிவில் இருந்து பாதுகாக்கப்பட்டிருப்பதுடன் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கும் வழிவகுத்துள்ளது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபையின் குழுத் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் புனித மக்காவில் இருந்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;

"பௌத்த துறவிகள் நினைத்தால் இலங்கையில் எந்த அக்கிரமத்தையும் அரங்கேற்றி விடலாம் என்பதற்கு ரத்ன தேரரின் உண்ணாவிரோத போராட்டம் நல்லதோர் உதாரணமாகும். ஆனால் அவரும் ஞானசார தேரர் போன்ற இனவெறி கொண்ட மதவாதிகளும் அவர்களை பின்னால் இருந்து இயக்கும் பேரின அரசியல் தலைமைகளும் எதிர்பார்த்த எண்ணம், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் வழிகாட்டலில் இறைவனை முன்னிறுத்தி எமது முஸ்லிம் தலைமைகள் மேற்கொண்ட தீர்மானத்தினால் தவிடுபொடியாகியுள்ளது.  

இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை ஒற்றுமையாக மேற்கொண்ட முஸ்லிம் அரசியல் தலைமைகளை வாழ்த்திப் போற்றுகின்றேன்.

இந்த இக்கட்டான தருணத்தில் தனிப்பட்ட அபிலாஷைகள் மற்றும் அரசியல் முரண்பாடுகள் அனைத்தையும் புறமொதுக்கி விட்டு, சமூகத்தின் பாதுகாப்பை மாத்திரம் கருத்தில் கொண்டு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான சதியை முறியடிப்பதற்கும் அவரை தனித்து விடாமலும் சமூக ரீதியாக உணர்வுபூர்வமாக சிந்தித்து, தமது அமைச்சுப் பதவிகளை பேரினவாதிகளின் முகத்தில் தூக்கி வீசுவதற்கு முன்வந்து, நெறிப்படுத்திய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கும் அக்கட்சியின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களுக்கும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இவர்களது விட்டுக்கொடுப்பும் தூய எண்ணமும் எம்மால் குறைத்து மதிப்பிட முடியாத ஒரு விடயமாகும். 

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் உள்ள தவிசாளர் கபீர் ஹாஷிம், எம்.எச்.ஏ.ஹலீம் போன்றோரின் சமூக உணர்வையும் இச்சந்தர்ப்பத்தில் மெச்சுகின்றேன். இந்த மகத்தான பணிக்காக எமது அரசியல் தலைமைகள் அனைவருக்காகவும் புனித கஹ்பத்துல்லாஹ்வில் நான் பிரார்த்திக்கிறேன்.

அதேவேளை தற்போது அமைச்சுப் பதவிகளைத் துறந்து, ஓரணியாகத் திரண்டுள்ள முஸ்லிம் தலைமைகள், அச்சத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ள எமது முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு வேண்டிய அவசர நடவடிக்கைகளையும் பயங்கரவாதத்தின் பேரால் அநியாயமாக கைது செய்யப்பட்டு, புனித நோன்பு காலத்திலும் சிறையிலடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிமகளை விரைவாக விடுவிப்பதற்குமான ஏற்பாடுகளை துரிதப்படுத்த வேண்டும்.

டாக்டர் ஷாபி போன்ற முக்கிய பிரமுகர்கள் மீதான அபாண்டமான குற்றச்சாட்டுகள் துரிதமாக விசாரிக்கப்பட்டு, அவர்களின் விடுதலையும் விரைவுபடுத்தப்பட வேண்டும்.                      

சமூக ரீதியான ஒற்றுமை மலர்ந்துள்ள இத்தருணத்தில் முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்று அமைக்கப்பட்டு, சமூகத்தின் பலமான அரசியல் சக்தியொன்று கட்டியெழுப்பப்படுவதன் அவசியத்தை வலியுறுத்த விரும்புகின்றேன்.

மறைந்த பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களினால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் பேரியக்கமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தை பொதுவான சின்னமாகக் கொண்டு அக்கூட்டமைப்பை ஏற்படுத்துவது பொருத்தமாக அமையும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். இதற்காக சகல முஸ்லிம் அரசியல் தலைமைகளும் விட்டுக்கொடுப்புச் செய்து அக்கூட்டமைப்பை சாத்தியப்படுத்துவதற்கு முன்வர வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோளாகும்.

எமது அரசியல் தலைமைகளிடையே தற்போது மலர்ந்துள்ள ஒற்றுமை என்பது வல்ல இறைவனால் ஏற்படுத்தித் தரப்பட்டதொரு மிகப்பெரும் சக்திமிக்க ஏற்பாடாகும். இந்த ஒற்றுமை நீடித்து, நிலைக்க வேண்டும் என்பதே ஏல்லோரதும் அவாவாகும். அது மலினப்படுத்தப்பட்டு விடக்கூடாது. இந்த ஒற்றுமையை சீர்குலைத்து, பிளவுகளை ஏற்படுத்துவதற்கு முஸ்லிம் சமூகத்திற்கெதிரான சக்திகள் திரைமறைவில் சதிகளை முன்னெடுப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. இந்த சதியில் இருந்து எமது ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும். 

முஸ்லிம் தலைமைகள் ஒரு பொதுவான சமூக நோக்கத்திற்காக தமக்குள் விட்டுக்கொடுப்பதனால் எதுவும் குறைந்து விடப்போவதில்லை. மாறாக எமது சமூகம் பலம் பெறுவதுடன் அவர்களும் உயர்வடைவார்கள் என்பதுதான் யதார்த்தமாகும். அமைச்சுப் பதவிகள் இராஜினாமா விடயத்தில் விட்டுக்கொடுப்புகள் செய்து ஒற்றுமைப்பட்டமை அதற்கு நல்ல உதாரணமாகும். 

எமது நாயகம் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மாற்று மதத்தவர்களுடன் கூட பாரிய விட்டுக்கொடுப்புகளை செய்து ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளமை நாம் எல்லோரும் அறிந்த வரலாறாகும். ஜாஹிலியத் மக்களிடையே இஸ்லாம் வளர்ந்து முன்னோக்கி நகர்வதற்கு முஹம்மத் (ஸல்) நபியவர்களின் இந்த விட்டுக்கொடுப்பே அடிப்படையாக அமைந்திருந்தது என்பதை நாம் அறிவோம்.

அந்த வழியில் நமது இஸ்லாமிய சமூகத்திருக்கான அரசியல் சக்தியை கட்டியெழுப்பும் பாரிய இலக்குடன் பரந்துபட்ட முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு எமது முஸ்லிம் தலைமைகள் அனைத்தும் விட்டுக்கொடுப்புகளுடன் களமிறங்கத் தயாராகுமாறு அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றேன். இந்த உயரிய எண்ணம் வெற்றியளிக்க புனித கஹ்பத்துல்லாஹ்வில் இருந்தவனாக எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று கலாநிதி ஏ.எம்.ஜெமீல் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.