Header Ads



பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்பில்லாத, முஸ்லிம்களை விடுதலை செய்யுங்கள்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னர் சிறு குற்றங்கள் தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களின் விசாரணை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்பற்ற அனைவரையும் விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு துறையினருக்கு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு சபை நேற்று (19) பிற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கூடியபோதே ஜனாதிபதி அவர்கள் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். 
நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளின் தற்போதைய நிலைமைக் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டன. 

சமய நிகழ்வுகள் மற்றும் பொதுமக்கள் சந்திப்புகள் நடைபெறும் இடங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது தெளிவுபடுத்தினார். 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட ஆளுங்கட்சி, எதிர்கட்சி ஆகியவற்றின் சிரேஷ்ட மக்கள் பிரதிநிதிகளும் பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானி, முப்படை தளபதிகள், புலனாய்வுத் துறை பிரதானிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு துறையின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.