Header Ads



கண்டியில் பதற்றம், வீடுகளுக்குள் முஸ்லிம்கள் முடக்கம்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் முன்னெடுத்து வரும் உண்ணாவிரதப் போராட்டம், நான்காவது நாளாகவும் இன்று (3) தொடர்கின்ற நிலையில், தேரருக்கு ஆதரவுத் தெரிவித்து, கண்டி, மாத்தளை,  நுவரெலியா ஆகிய மாவட்டங்களில், மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கண்டி மாவட்டத்திலுள்ள பிரதான நகரங்களில், வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், வழமையான நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாகவும் ஒருவித பற்றமான சூழல் நிலவுவதாகவும் அங்கிருந்துக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேரரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக, பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், அரசாங்கத்து 24 மணித்தியால காலக்கெடு வழங்கியுள்ள நிலையில், அந்த காலக்கெடு, இன்று (3) நண்பகல் 12 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்காரணமாக கண்டியில் அசம்பாவிதங்கள் ஏதேனும் நடக்கக்கூடும் என்ற அச்சத்தில், மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதாகவும் பிரதான நகரங்கள் வெறிச்சோடிக் கிடப்பதாகவும் தெரியவருகிறது.

மேலும் மதுபானசாலைகளை மூடுமாறும் அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துரலிய தேரருக்கு ஆதரவுத் தெரிவித்து, பெரும்பான்மையின மக்கள் வழிபாடுகளிலும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கலகொட அத்தே ஞானசார தேரரை, மனிதசங்கிலியை ஏற்படுத்தி பொதுமக்கள் அழைத்துச் சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.