Header Ads



தேசிய தௌஹீத் ஜமாஅத் பற்றியும், சஹரான் குறித்தும் தகவல்களை திரட்டியிருந்த நாலக டி சில்வா

பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா கைது செய்யப்படாமல்  இருந்திருந்தால்  ஏப்ரல்; 21 குண்டுத்தாக்குதல்களில்  இருந்து  நாட்டை ஓரளவாவது பாதுகாத்திருக்க முடியும். 

 அவருக்கு எதிராக  முன்வைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி கொலைச் சதிக் குற்றச்சாட்டு தொடர்பில்  விசாரணை செய்யவென்று அமைக்கப்பட்ட ஜனாதிபதி  ஆணைக்குழுவின் அறிக்கை உடனடியாக  வெளியிடப்பட வேண்டும் என்று அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார்.  

மேலும்  பாதுகாப்பு  அமைச்சுடன்  சட்ட ஒழுங்கு அமைச்சும் இணைந்து செயற்படுவதால்  அந்த அமைச்சின் சுயாதீனத் தன்மை பாதிக்கப்படுவதாகவும் அதன் சுயாதீனத்தன்மையை  பேணுவதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட கவனம் செலுத்த வேண்டும்  என்றும் அவர் குறிப்பிட்டார். 

அலரிமாளிகையில் இன்று -29- ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது   அவர் மேலும் கூறியதாவது;

பாதுகாப்பு அமைச்சுடன் சேர்ந்து  சட்டம் ஒழுங்கு அமைச்சு செயற்பட்டு வருவது  சட்ட ஒழுங்கு அமைச்சின் சயாதீன தன்மைக்கு  பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதி அமைச்சர் ஒருவர் இல்லாமல்  சட்டம் ஒழுங்கு அமைச்சு தொடர்ந்து பயணிக்குமாக இருந்தால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். முக்கியமான பிரச்சினைகளை விசாரணை செய்ய வேண்டிய பொறுப்பு இந்த அமைச்சுக்கு உள்ளது.  

ஆகவே  சட்ட ஒழுங்கு அமைச்சை  தனியான  ஒரு அமைச்சாக்க வேண்டும்  என்பதே எங்களின் நிலைப்பாடாகும். 

தேசிய தௌஹீத்  ஜமா அத் தொடர்பான விசாரணைகளை 2017 , 2018 ஆம் ஆண்டுகளில்  பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா முன்னெடுத்து வந்தார்.  

அந்த  விசாரணைகளில்  சஹரான் தொடர்பான தகவல்களும் திரட்டப்பட்டிருந்தன.இவ்வாறானவொரு கட்டத்திலேயே ஜனாதிபதி  கொலைச்சதி திட்ட குற்றச்சாட்டின் பேரில்  பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா கைதுசெய்யப்பட்டார். 

ஆகவே நாலக  கைது செய்யப்படாமல்  இருந்திருந்தால்  ஏப்ரல்  21 தாக்குதல்களில்  இருந்து  ஓரளவாவது நாட்டை பாதுகாத்திருக்க முடியும்.  

ஜனாதிபதி கொலைசதித் திட்டத்தில் நாலக சில்வாவுக்கு தொடர்பு இருக்குமாக இருந்தால் அது தொடர்பிலான தகவல்களை மக்களுக்கு  வழங்குவது அவசியமாகும்.  இந்த கொலைசடஷ் சதித்திட்டம் தொடர்பில் விசாரணை செய்வதற்கென ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.  

ஆனால்  குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைகள் எதுவும்  இன்னும் சமர்ப்பிக்கப்பட வில்லை. 

நாலக சில்வா குற்றவாளியாக இருந்தால் அவர் மீதான குற்றச்சாட்டு தகுந்த சாட்சிகளுடன் நிரூபிக்கப்பட வேண்டும்.  அவர் குற்றவாளியா இல்லையா என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டும்.   

(நா.தினுஷா)

No comments

Powered by Blogger.