Header Ads



மினுவாங்கொட தாக்குததல், வெளியாகியுள்ள புதிய தகவல்கள் (நேரடி ரிப்போர்ட்)

- எம்.ஏ.எம். நிலாம்  -

மினுவாங்கொடை நகரில் முஸ்லிம் வர்த்தகர்கள் உயர்வான நிலையில் காணப்படுவதை பொறுக்கமுடியாத ஒரு சக்தியின் செயற்பாடாகவே கடந்த 12ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட காடைத்தனங்கள் வெளிப்படுத்துகின்றன. முஸ்லிம் சமூகத்தின் பொருளாதாரத்தை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட தீவைப்பாகவே இதனை காணமுடிகிறது.  
முழு நகரையும் ஒரு சில மணிநேரத்துக்குள் எரித்து சாம்பல் மேடையாக மாற்றிய காட்சியை எம்மால் உயிருள்ளவரை மறக்கமுடியாது. கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன.  
இனவாதமும் குறுகிய அரசியல் பின்னணியும் கொண்ட சந்தர்ப்பவாதத் தாக்குதலாகவே இதனை நான் பார்க்கின்றேன் மினுவாங்கொடை தாக்குதல் தொடர்பல நான் நேரில் கண்டதை சொல்ல விளைகின்றேன்.  
உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத் தாக்குதலுக்குப் பதிலடியாக கடந்த ஞாயிறன்று இடம்பெற்ற வன்முறைகளை எந்தவிதத்திலும் நோக்கமுடியாது. முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களை இலக்கு வைத்து இனவாதச் சக்திகளும் சந்தர்ப்பவாதிகளும் தமது கைவரிசையை காட்டத் தொடங்கியுள்ளனர். இதன் பின்னணியில் குறுகிய அரசியல் சக்தியொன்றும் இயங்குவதை காணமுடிகிறது.  
இந்த வன்முறையால் சற்று அதிகமாக அடிவாங்கிய பிரதேசமாக மினுவாங்கொடையை காணமுடிகிறது. சம்பவம் நடந்த அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மினுவாங்கொடை கல்லொளுவையில் எனது வீட்டில் குடும்பத்தோடு இப்தார் நோன்பு திறப்பதற்காக அமர்ந்திருந்தோம். வானொலியில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஒலி பரப்பப்பட்டுக் கொண்டிருந்த போதும் ஊர்ப்பள்ளிவாசலில் அதான் ஒலிக்கும்வரை காத்திருந்தோம். வானொலியில் அதான் ஒலித்து முடிந்தபோது பள்ளிவாசலில் இருந்து அதான் கேட்கவில்லை. என்ன நடந்தது என்பதை எம்மால் புரிந்துகொள்ளமுடியவில்லை. பின்னர் நோன்பு திறந்துவிட்டு கஞ்சி குடித்துக் கொண்டிருந்தபோது எனது மகனின் தொலைபேசி அலறியது. மகன் கதைத்தான். ஊர்ப்பள்ளியை தாக்கவும், முஸ்லிம் வீடுகளை உடைக்கவும் ஒரு கூட்டம் வந்து கொண்டிருப்பதாக அவனது நண்பர் தொலைபேசியில் கூறினார்.  
இதற்கிடையில் மினுவாங்கொடை கல்லொளுவைக் கிராமத்தின் கடைசி எல்லையான அக்கரை (பொல்வத்தையை தொடும் இடம்)யில் ஒருவீடு தாக்கப்பட்டதாகவும் அங்கிருந்து காடையர்கள் கூட்டமாக வந்து கொண்டிருப்பதாகவும் அறிந்தோம். உடனடியாக எமது இளைஞர்கள் அணிதிரண்டனர். எமதுப் பள்ளியை காப்பாற்றுவதற்காக 100பேரளவில் கூடிநின்றனர். இது தவிர கிராமத்தின் ஒவ்வொரு மஹல்லாவிலும் (ஒவ்வொரு பள்ளியைச் சூழவும் வாழ்பவர்கள்) பாதுகாப்புக்காக குழுக்களாக இளைஞர்கள் நிறுத்தப்பட்டனர். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு எதுவும் நடந்துவிடவில்லை. இதனை முஸ்லிம்களை அச்சமூட்ட எடுத்த நடவடிக்கையாகவே நோக்கினோம். அல்லது முஸ்லிம்கள் எதிர்க்கத் தயாராகிவிட்டதை அறிந்து திரும்பச் சென்றிருக்கலாம்.  
என்றாலும் கூட அன்றிரவு கிராமத்தில் முஸ்லிம்கள் எவரும் நித்திரை கொள்ளவில்லை. உறுதி செய்யப்படாத தகவல்கள் வந்து கொண்டே இருந்தன. இதற்கிடையில் கலவரங்கள் பரவலாக இடம்பெற்றுள்ளதாகவும் உடனடியாக ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்படுவதாகவும் கேள்விப்பட்டோம். உடனே தொலைக்காட்சியை போட்டு பார்த்தபோது நாடு முழுவதும் ஊடரங்கு அமுல் என அறிவிக்கப்பட்டது.  
ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு ஒருமணி நேரம் கூட ஆகவில்லை. மினுவாங்கொடை நகரில் உள்ள நகர ஜூம் ஆப் பள்ளிவாசல் உடைத்துச் சேதமாக்கிப்பட்டதாகவும், முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் தீவைக்கப்படுவதாகவும் கேள்விப்பட்டோம். முஸ்லிம்கள் வீடுகளுக்குள் அடைப்பட்டுக்கிடந்தோம். விடிந்த பின்னர் ஊரடங்கு சிறிது தளர்த்தப்பட்டது. வீடுகளிலிருந்து வெளியே வந்ததும் மினுவாங்கொடை நகருக்குச் சென்றோம்.  
அங்கு பள்ளிவாசல் கண்ணாடிகள் உடைத்து, பள்ளிவாசல் கேட்டும் உடைக்கப்பட்டிருந்தது. பள்ளிவாசல்கள் உள்ளே நூற்றுக்கும் மேற்பட்ட நிலைக்கண்ணாடிகள் உடைபட்டக் குவியல்களாகக் கிடந்தன. இதே சமயம் பள்ளிவாசல் பிரதான இமாம் தாக்கப்பட்டதாகவும் அறிந்து கொண்டோம்.  
அங்கிருந்து பொலிஸ் அதிகாரிகள் வாக்கு மூலங்களைப் பெற்றுக் கொண்டிருந்தனர். அங்கு பலரும் இடத்துக்கிடம் கூடிநின்று கதைத்துக் கொண்டிருந்தனர். என்ன நடந்தது என்பதைக் கேட்டறிய அவர்களில் ஒருவரை அணுகினேன். அவரால் எதுவுமே பேசமுடியாது விம்மினார். அருகிலிருந்த மற்றொருவர் எனக்குத் தெரிந்த நண்பர். உறவுக்காரரும் கூட சவாஹிர் ஹாஜியார் அவரது பெயர் அவர் சொல்லத் தொடங்கினார்.  
நேற்று மாலை (ஞாயிறு) 5.30மணியளவில் பொல்லுகள், ஆயுதங்கள் சகிதம் நிறையபேர் கூட்டம் கூட்டமாக வந்தனர். முதலில் விமானநிலையவீதியில் பிரதான பஸ்நிலையத்துக்குப் பின்புறமாக பிரதான வீதியில் உள்ள பௌஸ்ஹோட்டலைத் தாக்கினர். அதே கடையில் இரண்டு மணித்தியாலத்துக்கு முன்பாக சாப்பிட்டு, தே நீர் குடித்துவிட்டு சென்றவர்களே கத்தி, பொல்லுகளுடன் வந்து தாக்கினார்கள்.  
அதைத் தொடர்ந்து நகரின் மத்தியில் உள்ள பலகடைகள் தீவைக்கப்பட்டன. புடவைக் கடைகள் சப்பாத்துக் கடைகள், நகைக் கடைகள் தீப்பற்றி எரித்துகொண்டிருப்பதைக் கண்டோம். சுமார் 24கடைகள் தீ வைக்கப்பட்டிருந்தன.  
இதற்கிடையே தான் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்குச் சட்டம் எங்களுக்கு மட்டும் தானா ஏன் அவர்களுக்கு இல்லையா என்று தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார் அவர்.  
பள்ளிவாசலை விட்டு வெளியே வந்ததும் வலப்பக்கமாக இருந்தது அந்த வீதி. இராணுவத்தினர் இரு மருங்கிலும் பாதுகாப்புக்கு நின்றனர்.   அந்தக் கடை உரிமையாளர்களைத் தவிர வேறு யாரும் அந்த வீதிக்குள் செல்ல இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை.  
ஒரு கட்டத்தில் ஊடகவியலாளர்களை உள்ளே செல்ல அனுமதித்தனர்.   நாமும் உள்ளே சென்றோம். அந்த வீதி கடைத் தொகுதிகளின் நிறைந்த ஒரு வீதி.  
இந்த இடம்தான் வெகுவாக பாதிக்கப்பட்டவர்களை கொண்ட ஒரு பிரதேசம்.  
ஆனால் இங்கு வன்முறையை நடத்தியவர்கள், எந்த ஒரு நபரையும் தாக்கவில்லை. மாறாக உடமைகளுக்குகத்தான் சேதம் ஏற்படுத்தியுள்ளனர்.  
முதலில் வந்தவர்கள் கடைகளை அடித்து நொருக்கியுள்ளனர். அங்கிருந்த கடைகள் ஆடை, நகை, சப்பாத்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் விற்கும் கடைகள்.  
அடித்து நொருக்கிய கடைகளில் இருந்தவர்கள் அப்படி அப்படியே விட்டுவிட்டு ஓடிவிட்டனர்.  
பிறகு மீண்டும் வந்து உடைத்துப் போட்ட கடைகளிலிருந்து வெளியே இழுத்துப்போட்ட பொருட்களை சேர்த்து கடைக்குள்ளே தூக்கிப்போட்டுவிட்டுப் போய்விட்டனர்.  
பிறகு சற்று நேரத்தில் மீண்டு வந்த வன்முறையாளர்கள் கடைகளைத் தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர்.  
அங்கே ஒரு நகைக்கடை. மினுவாங்கொடை சந்தியில் அதுமட்டும்தான் ஒரே ஒரு நகைக்கடை.  
அந்த நகைக் கடையின் உரிமையாளரைத் தேடினோம். அந்தக் கடைக்கு முன்னால் ஒரு வாங்கிலில் இழப்பின் வேதனையை சுமந்தபடி அமர்ந்திருந்தார்.  
இந்த நகைக் கடையின் சேத விபரங்கள் எப்படி என்றோம். இன்னும் எரிந்துகொண்டிருக்கிறது. முழுமையாக எரிந்து முடிந்த பிறகுதான் உள்ளே போகமுடியும். அதன் பிறகுதான் சேத விபரம் தெரியும். எப்படியும் 20மில்லியனுக்கும் அதிகமாக வெள்ளி மற்றும் தங்க நகைகள் எரிந்திருக்கும் என்றார் அந்த நகைக் கடையின் உரிமையாளர்.  
அந்த இடத்தில் இன்னொரு வியாபாரி நம்மோடு பேசத் தொடங்கினார்.  
இங்கே மொத்தமாக 22கடைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. அனைத்துமே முஸ்லிம்களின் கடைகள்தான். அதில் நான்கு கடைகள் முஸ்லிம் அல்லாதவர்களுடையது.  
இந்தச் சந்தைக்குள் எங்களுக்குள் எவ்வித முரண்பாடோ கருத்து வேற்றுமையோ இனபாகுபாடோ கிடையாது.  
வெளியில் இருந்து வந்தவர்களால்தான் இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது என்றார்.  
அத்தோடு இப்போதுள்ள அரசியல்வாதிகள் எவர் மீதும் எமக்கு நம்பிக்கையில்லை. அவர்கள் அனைவருமே ஒன்றுதான், என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த வியாபாரி தெரிவித்தார்.  
அங்கே எரிந்த 22கடைகளில், முஸ்லிம் அல்லாதவர்களின் கடைகளும் உண்டென்று சொன்னதனால் நாம் அந்தக் கடைகளைத் தேடிப் போனாம்.  
புகைத்துக் கொண்டிருந்த ஒருதுணிக் கடையின் வெளிப்புறப் படியில் ஒரு ஆணும் பெண்ணும் தலையில் கைவைத்தபடி அமர்ந்திருந்தனர்.  
அந்தக் கடையின் பெயரைப் பார்த்தோம் ‘ஸ்ரீபதி டிரேடிங் பொய்ன்ட்’ என்றிருந்தது.  
அவர்களிடம் நெருங்கினோம். சிங்களத்தில் பேசத் தொடங்கினார் அந்த நபர்...  
பாருங்கள்... என்ன நடந்திருக்கிறது என்று பாருங்கள்.  
கிட்டத்தட்ட 350இலட்சத்திற்கும் அதிகமான ஆடைகள் எரிந்து நாசமாகிவிட்டன. இதை யார் எமக்கு திருப்பித் தருவார்கள் என்று கேள்விகளை எழுப்பிக்கொண்டே போனார்.  
பாதிக்கப்பட்ட கடைகளைத் தாண்டி வெளியே வர ஒரு போதகர் அந்தச் சந்தியில் நின்றுகொண்டிருந்தார். அவரின் முகத்தில் ஒரு இறுக்கம் தெரிந்தது.  
அவரிடம் பேசுவோம் என்று அவரை அணுகினோம்.  
அவர் மினுவாங்கொடை மெதடிஸ்த தேவாலயத்தின் போதகர்.  
அவரின் பெயர் நதீர பெர்னான்டோ... இது இனவாதம் அல்ல. சந்தர்ப்பவாதம். ஆம் நான் இந்தத் தாக்குதலை இப்படித்தான் விளிப்பேன் என்று பேசத் தொடங்கினார்.  
சம்பவம் நடக்கும் போது நான் இங்கேதான் இருந்தேன். ஆனால் நான் ஒருவன் மட்டும் அத்தனை பேரையும் எப்படித் தடுக்க முடியும்.  
300க்கும் அதிகமானோர் மோட்டார் சைக்கிளில் வந்தார்கள். எங்கிருந்து யார் வந்தார்கள் என்று தெரியாது.  
இது திட்டமிட்ட தாக்குதலா என்று எனக்கு சொல்லத் தெரியாது.  
ஆனால் ஒன்று பாதுகாப்பு இல்லை என்பதை சொல்லியாக வேண்டும்.  
ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதலினால் மக்கள் பெரும் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர்.  
அது உண்மைதான்... யாரும் மறுப்பதற்கில்லை.  
அந்தக் கோபத்தை அடக்கப் பார்த்தார்களே தவிர அதிலிருந்து மக்கள் விடுபடுவதற்கு எவ்வித முயற்சிகளையும் எந்தத் தரப்பும் மேற்கொள்ளவில்லை.  ஆயுதங்கள் எங்கும் இல்லை. நீங்கள் அஞ்சவேண்டாம். பாதுகாப்புக்கு நாம் உத்தரவாதம் தருகிறோம் என்று இன்றுவரையில் ஏன் யாரும் அறிவிக்கவில்லை. மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்க இவர்கள் தவறிவிட்டனர். ஒரு சந்தேகத்துடனேயே அனைவரும் இருக்கிறார்கள்.  
பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்பட்டிருப்பதாக படைத்தளபதி தெரிவிக்கின்றார். உண்மையிலேயே இராணுவத்தளபதி பாதுகாப்பு விடயத்தில் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்திருக்கின்றார். ஆனால் பிரதேச மட்டத்தில், கிராமங்களில் படையினர் ஊரடங்கு வேளைகளில் நடந்து கொண்டமுறை கவலைதரக் கூடியதாகும். அந்த நேரத்தில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட படைவீரர்களுடன் வேறு ஒரு கூட்டமும் நடமாடியுள்ளது.  
அவர்கள் யார் என்பதை பாதுகாப்புத் தரப்பு கண்டறியவேண்டும். பாதுகாப்புத்தரப்பு சீருடை அணிந்த ஒரு கூட்டமே அது. அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகள் நடந்துகொண்டமுறை அவர்கள் பாதுகாப்புத்தரப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை உறுதிப்படுத்தியது.   ஊரடங்கு வேளையில் அவர்கள் ஏன் அனுமதிக்கப்பட்டார்கள் என்பது கேள்விக்குறியதாகும். ஊடரங்குச் சட்டத்தை மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானதாகவே நாம் கொள்ளவேண்டியுள்ளது. 
இந்த மினுவாங்கொடை தாக்குதல் நடைபெற்ற தினத்தன்று இனவாத அமைப்புகளின் பிரதிநிதிகள் நடமாடியுள்ளனர். எதற்காக வந்தார்கள்? என்பது சந்தேகப்படவைக்கின்றது. மதுமாதவ சம்வம் இடம்பெற முன்னரே நகரின் கிடைத்தொகுதிகள் அமைந்த இடங்களில் நடமாடியுள்ளார். இவற்றை CCTV மூலம் காணமுடிந்துள்ளது.  
அவர் திவுலப்பிட்டிக்குச் செல்ல வந்தபோது பள்ளிவாசல் முன்பாக சிலர் கூடியிருந்ததால் பயணம் தடைப்பட்டதாகவும் பாதுகாப்புத்தரப்பு விடயத்தை சொன்ன பின்னர் மாற்று வழியில் பயணித்ததாகவும் கூறுகிறார்.  
இது முற்று முழுதான பொய்யாகும். அவர் காலை முதல் பின்னேரம் வரை அங்கு நடமாடியுள்ளார். பலரைச் சந்தித்துள்ளதாகவும். சில இடங்களை அடையாளம் காட்டியதாகவும் தகவல்கள் வெளிவந்தமுள்ளன.
அதே போன்று ராவணாபலய, சிங்களே பலய, பொதுபலசேனா அமைப்புகளின் பிரதிநிதிகளும் அன்றைய தினம் அங்கு வந்து போயுள்ளனர். இது முஸ்லிம்களை சந்தேகிக்க வைத்துள்ளது. மினுவாங்கொடையில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள மக்கள் வருங்காலத்திலும் தூண்டிவிடப்பட்படலாமென்று தெரியவருகின்றது. இந்த விடயத்தில் பாதுகாப்புத்தரப்பு விழிப்புடன் செயற்படவேண்டுமென பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.    

No comments

Powered by Blogger.