May 20, 2019

அல்லாஹ் அக்பர் - வெட்கத்தைவிட்டு, ரொம்ப வேதனைகளுடன் (பகுதி - 1)

- யஹியா வாஸித் -

நாங்கள் இப்போது அமைதியாயாக்கப் பட்டிருக்கின்றோம், முஸ்லிம்களாகிய நாம் அமைதியாக்கப் 
பட்டிருக்கின்றோம்,ஸ்ரீலங்கா முஸ்லிம்களாகிய நாம், மிக மிக  ஜாக்கிரதையாக முடமாக்கப் பட்டிருக்கின்றோம்.

ஊமையாக்கப் பட்டிருக்கின்றோம், குருடர்களாக்கப் பட்டிருக்கின்றோம், செவிடர்களாக்கப் பட்டிருக்கின்றோம்.  ஆம், ஏப்ரல் 2 1 - 2 0 1 9 ஆம் திகதி முதல் நாங்கள் இந்த நாட்டுக்கு வேண்டாதவர்களாகி விட்டோம்.   

எங்களுடன் பேசுவது தீட்டு என சொல்லப்பட்டிருக்கின்றது, நெ(ந)ஞ்சான் கட்டைகளால் நாங்கள் வீழ்த்தப் பட்டிருக்கின்றோம். mஎமக்கு கால்கள் இருக்கின்றது அவைகளால் நடக்க முடியல, எமது வாய்கள் நன்றாகவே இருக்கின்றது ஆனால் பேச முடியல,

கண்கள் ரொம்பவும் ஹெல்த்தியாகத்தான்  இருக்கின்றது, ஹ்ம் கண்களை திறந்து பார்க்க முடியல. காதுகள்  நன்றாகவே கேட்கின்றது  ஆனால் அந்த காதுகளுக்குள் யாரோ ஒரு பத்தாயிரம் பேர் வந்து  இரும்பை  காய்ச்சி ஊற்றிக்கொண்டே இருப்பது போல் இருக்கின்றது.

நாடி நாளங்கள் அனைத்துமே ஓடிக்கொண்டிருக்கின்றது ஆனால் ...ஆனால் அந்த இதயம் இருக்கும்  இடத்தில ஒரு பாரிய பாறாங்கல் வந்து தடார் தடார் என முட்டி மோதிக்கொண்டிருக்கின்றது.

யா அல்லாஹ், யார் நாங்கள் ..???? நாங்கள் யார்....???? நாங்கள் இந்த சிறிலங்காவிற்கு ஏன் வந்தோம், எதற்காக வந்தோம்.   என்னை பெத்த வாப்பா சொன்னார், மகனே அய்ந்து நேரம் தொழனும், ஹெல்தியா இருந்தா நோன்பு புடிக்கொனும்,  கொஞ்சம் வெல்த்தியா இருந்தா மக்காஹ் போகணும்,  மிஞ்சிப்போனா,ஒனக்கு மிஞ்சிப்போனா  தர்மம் கொடுக்கோணும், மொத்ததில கலிமா சொல்லோனும் அதுதான் உனது கவசம். கலிமாதான் உனது கவசம்.

அதைதானே செய்தேன், செய்தோம் !!!!!! ?????  எங்கே பிடித்தது சனியன்,  எப்படி பிடித்தது முசிபது எவ்வாறு வந்தது பலாய்  எங்கே ஆரம்பித்தது சைய்தானியம் ????  ஆம் சனியனும், சங்கடங்களும் சந்தோசமாகவே வந்தன.

கிளீன் சேவுடன், ஒரு குட்டி வெள்ளை தொப்பி போட்டுக்  கொண்டு, பள்ளிக்கு தொழப் போன எண்ட  காக்கா,  மெதுவாக ஒரு குட்டி தாடி வைக்க தொடங்கினார்.எண்ட காக்காவுக்கு அது அழகாகவே இருந்தது.  ரொம்ப கம்பீரமாகவும் இருந்தது.  நாள் போகப்  போக, காக்காவின் தாடி நீண்டது, அத்துடன் காக்காவின்  நடவடிக்கைகளும் எங்களை மிரள வைத்தது.கிட்டதட்ட நாங்கள் எல்லாம் முஸ்லிம்கள் அல்ல என்றார்,

தூக்கிவாரி போட்டது. அப்படியானால் நாங்கள் யார் ???? நான் யார் ??? தமிழ் மக்கள் சொல்கின்றார்கள் நீங்களும்   தமிழர்களே.  நீங்கள் முஸ்லிம்களே  அல்ல என்கின்றனர். சிங்கள மக்களோ, உங்களுக்கு நாடே கிடையாது,  நீங்கள் தூத்துக்குடியிலிருந்து வந்தவர்கள், ஓடிடுங்கோ என்கின்றனர், எண்ட சொந்த காக்கா    சொல்கின்றார் நீ எல்லாம் முஸ்லீமே கிடையாதுடா போடா   என்று !!!!! Pleas who am i ?

அவரது உடையும் மாறியது, ஜுப்பாக்களும், விசுவாக்குச்சிகளும் வீட்டுக்குள் குடி  வந்தன, நன்றாக 
எங்களது சில்லறை கடையை நடத்திக்கொண்டு வந்த எங்கள் மூத்த காக்கா, மூன்று நாள், ஏழு நாள், நாற்பது நாள்  என்று திடீர் திடீர் என்று மறைந்து  மார்க்கப் பணி செய்து கொண்டிருந்தார். நாங்கள் இங்கு சாப்பாட்டுக்கு  அல்லாடிக் கொண்டிருந்தோம்.

பதினோரு பிள்ளைகளை பெற்ற வாப்பா தடுமாறினார், உம்மா வெம்பி வெடித்தார், நான் காக்காவை தேடி பள்ளி பள்ளியாக அலைந்தேன்,  எனக்கு என்ர காக்காவ நன்றாகவே பிடிக்கும்,காக்கா  அங்கு பள்ளிகளில்  கிடாரங்களில் சோறு சமைத்து உண்டு கொண்டிருந்தார்.எனக்கு அந்த மாட்டிறைச்சி வாசனை மூக்கை தட்டியது, அதை தட்டி கேள் என ம(ன)ணம் சொன்னது. ஆனால் I am not a muslim ?

காலி, பேருவளை மதரசாக்களில் படித்து, இஸ்லாத்தை கரைத்து குடித்து, அதில் புலமை பெற்று இந்தியாவுக்கு  மொளலவி  பட்டம் பெறப்போன எங்க அடுத்த ஊர் காசிம் காக்காட  மகன், பள்ளிகளில் அழகாக கொத்பா   பிரசங்கம் செய்வதாகவும், இது அங்குள்ள பழைய மொளலவிமாருக்கு புடிக்காததால்    அவர பள்ளிகளுக்குள் எடுப்பதில்லை என தீர்மானம் எடுத்துள்ளதாகவும் ஊருக்குள் புசு புசு என பேசிக்கொண்டார்கள்.

ஒரு ஆறுமாதம் போயிருக்கும், ஊருக்கு நடுவில், வாட்டசாட்டமான ஒரு இடத்தில் தாஜ் மஹால் கணக்காக ஒரு பள்ளி வாசல் கட்டப்பட்டது. பணம் எங்கிருந்து வருகின்றது, ஏன் இதை இந்த சிங்கள தேசத்தில் கட்டுகின்றார்கள், இந்த பள்ளி வாசலை சுற்றி மூவாயிரத்துக்கு மேற்பட்ட முப்பத்தி ஐந்து வயதை தாண்டிய,  திருமண வயதை தாண்டிய ஏழை பெண்பிள்ளைகள் இருக்கின்றார்களே என்றெல்லாம் யாருமே கேட்கவில்லை.

கேட்க எனக்கும்  நாதியில்லை, Yes i am not a muslim.  ஒரு சில வருடங்களுக்கு அப்புறம் சகோதரியின் வீட்டுக்கு போகின்றேன்,அன்று மகரிபுக்கு பாங்கு சொல்கின்றது,  பள்ளிக்கு போக தயாராகின்றேன், எனது மச்சான் அவசர அவசரமாக பள்ளிக்கு போக தயாராகின்றார், மச்சான் பொறுங்க நானும் வாறன் என்கின்றேன், இல்ல நீங்க போங்க, நான் மற்ற பள்ளிக்கு போகின்றேன் என்கின்றார் ? ஆம் புதிதாக கட்டிய பள்ளிக்கு  ??????பழைய பள்ளியில் தொழ வைக்கின்ற முறை இஸ்லாத்துக்கு புறம்பானதாம், இஸ்லாத்தில் அப்படி ஒரு தொழுகை முறை இல்லையாம்.

எண்ட மச்சானும் என்னை தூக்கி வீசி விட்டார். யெஸ் ஐயாம் நாட் அ  ஜெனுவின் முஸ்லிம். திடீரென ஒருநாள் பத்திரிகைகளிலும், வானொலிகளிலும் பரகஹாதெனியாவில் முஸ்லிம்களுக்கிடையில்  மோதலாம்,இரண்டு பள்ளிவாசல் தர்மகர்தாக்களுக்கிடையில் அடிபிடியாம் என்று செய்திகள் வந்தன.

இதை பார்த்துவிட்டு எனது  தமிழ் நண்பர்கள்  " நாங்கள் ஜாதி சண்டை புடிப்பதாக  பெரிதாக அலட்டுவாயே இது என்ன சண்டை மச்சான்" என்றனர். அதன் பின்னர்தான் தெரியும் ஏற்கனவே அங்கேயும் ஒரிஜினல் முஸ்லீம்கள் பிறந்து விட்டனர் என்ற சங்கதி.

1982 க்கு பின் இவ்வாறு ஆயிரம் பள்ளிகள் முளைத்தன, வளர்ந்தன, வேர் விட்டு பரவின. அதிசயம் என்னவென்றால்   வட கிழக்குக்கு வெளியே தென்மேற்கில், முழுக்க முழுக்க சிங்கள, தமிழ் மக்கள் 95 வீதம் வாழும் பிரதேசங்களில்  3 ஸ்டார், 5 ஸ்டார், 7 ஸ்டார் ஹோட்டல்கள் கட்டுவது போல் பள்ளிவாசல்களை பிரதான வீதி ஓரங்களில் கட்டித் தள்ளினார்கள். 

ஆம், நாங்கள் பெரிய ஆக்கள், எங்கள் அல்லாஹ் ரொம்ப பெரியவன், எங்களை ஆட்டவே முடியாது என்ற கணக்காக  பள்ளிகளையும், வீடுகளையும், பங்களாக்களையும் கட்டி கொண்டாடினர். ஒவ்வொரு ஜும்ஆ தொழுகையின் பின்னும், பள்ளிக்கு வெளியே கைக் குழந்தைகளுடனும், சோத்துக்கு வழியில்லாமலும்  நின்ற நூற்றுக்கணக்கான் அந்த தாய்மார்களை , அந்த பள்ளி வாசல்களுக்குள் அழைத்து இந்த உத்தமர்கள் இதுவரை, பசியாற்றவே இல்லை.

இவை ஏதும் தமிழர் தரப்பாலோ, சிங்கள அரசாலோ கண்டு கொள்ளப்படவுமில்லை. கணக்கில்   எடுக்கப்படவும் இல்லை. முழுக்க ஆயுத மோகம் கொண்ட தமிழர் தரப்பு  இவர்களை அழித்துவிடலாம் என்று கங்கணம் கட்டி கொண்டிருந்தது. சிங்கள தரப்போ, தூத்துக்குடி, நாகர் கோயில் , கல்லல், காரைக்கால்,திருப்பரங்குன்றம்,கொச்சின் , காலிக்கட், கண்ணனூர் போன்ற இடங்களில் இருந்து வந்த இந்த வியாபாரிகளை   விலைக்கு வாங்கி விடலாம்   என்று நன்றாகவே கணக்கு போட்டு கொண்டது. 

வியாபாரமும் நன்றாகவே நடந்தது. 
2 1 ஏப்ரல் 2 0 1 9 பிறக்கும் வரை ............( தொடரும் )


4 கருத்துரைகள்:

இலங்கையின் இஸ்லாமிய வரலாறு. சிறப்பு, தொடருங்கள்.

தொடரட்டும், ஆர்வமுடன் இருக்கின்றேன். இது இலங்கை இஸ்லாமிய நாகரீகம். நன்றி எழுத்தாளரே.

Post a Comment