Header Ads



பூஜித் ஜயசுந்தர சிக்குவாரா..?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸவையும் கொலை செய்ய சூழ்ச்சி திட்டம் தீட்டிய சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதி காவல்துறைமா அதிபர் நாகலடி சில்வாவிற்கு எதிராக காணப்படும் சாட்சிகள் உள்ளிட்ட சுருக்க அறிக்கையை குற்றப்புலனாய்வு திணைக்களம், நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளது.

இது குறித்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் இன்று -19- விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இறுதியாக கடந்த ஆறாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது, சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் திலீப் பீரிஸ், கொலை சூழ்ச்சி திட்டம் குறித்து முன்னாள் பிரதி காவல்துறைமா அதிபருக்கு எதிராக போதியளவு சாட்சிகள் காணப்படுவதாக நீதிமன்றிற்கு தெரியப்படுத்தினார்.

இதன்படி அவருக்கு எதிரான சாட்சிகள் உள்ளிட்ட அறிக்கையை அடுத்த வழக்கு விசாரணை தினத்தில் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான், குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்திருந்தார்.

இதன்படி அந்த திணைக்களம் இன்றைய தினம் குறித்த சாட்சிகள் உள்ளிட்ட சுருக்க அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்தது.

இதன்போது முன்னாள் பிரதி காவல்துறைமா அதிபர் நாகலடி சில்வாவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதனுடன் கொலை சூழ்ச்சி திட்டத்தை வெளிப்படுத்திய ஊழல் ஒழிப்பு படையணியின் வழிநடத்தல் இயக்குனர் நாமல் குமார வழங்கிய குரல் பதிவுகளில் இருந்த குரல், காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினது என அரசாங்க பகுப்பாய்வாளர் மேற்கொண்ட பரிசோதனையில் உறுதியானது.

கொலை சூழ்ச்சி சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினமும் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் 3 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.