March 04, 2019

ஐ.நா. கூட்டத்தொடரும், முஸ்லிம்கள் மீதான உரிமை மீறல்களும்


 - ஏ.எல். நிப்றாஸ் -

இலங்கை முஸ்லிம்கள் உள்ளுக்குள் அழுதுகொண்டிருக்கின்ற சமூதாயமாகவே இருக்கின்றனர். அல்லது அவ்வாற பழக்கப்படுத்தப்பட்டிருக்கின்றனர். ஏதாவது ஒரு பிரச்சினை வந்தால், சோடாப் போத்தலில் இருந்து வெளிவரும் 'அழுக்கவாயுவை' போல, பெரும் வாதப் பிரதிவாதங்களை நடாத்தி வீராப்பு பேச்சுக்களை பேசி விட்டு இச் சமூகம் அடங்கி விடுவதைக் காண முடிகின்றது.

தமது மனக் கிடக்கைகளை வெளியில் சொல்லி அதற்கான பரிகாரங்களைத் தேடாமல் மௌனராகம் இசைத்து விட்டு, கடைசியில் தூக்கம் கலைத்த குழந்தை மாதிரி, 'எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை' என்று புலம்புகின்ற சமூகமாக முஸ்லிம்களாகிய நம்மை பெருந்தேசியமும் முஸ்லிம் அரசியலும் பதப்படுத்தி வைத்திருக்கின்றது. 

முஸ்லிம்களுக்கு பன்னெடுங்காலாமாக தீர்க்கப்படாத எத்தனையோ பிரச்சினைகளும் குறுங்கால விவகாரங்கள் பலவும் இருக்கின்றன. இது தவிர 1915 இனக் கலவரம் முதல் 90கள் தொட்டு இன்று வரை முஸ்லிம்கள் மீது நடந்தேறிய, நடந்தேறிக் கொண்டிருக்கின்றன உரிமை மீறல்களின் பட்டியலும் மிக நீளமானது. 

ஆனால், எந்த விவகாரமும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கே முஸ்லிம் அரசியல்வாதிகளிடையேயும் சமூகத்தின் மத்தியிலும் பேசு பொருளாக இருக்கின்றது. பிறகு இன்னுமொரு பிரச்சினை வந்தால் அதன்பக்கம் தாவி விடுவார்கள். இன்னும் சில நாட்களுக்கு அதுவே பேசுபொருளாக இருக்கும். மீண்டும் சில காலத்தின் பின்னர் ஒரு சில விடயங்கள் குறிப்பிட்ட பருவ (சீசன்) காலங்களின் பேசப்படுதோடு தற்காலிகமாக மறக்கடிக்கப்பட்டு விடும். 

பாலஸ்தீன முஸ்லிம்கள் போல, இலங்கைத் தமிழர்கள் போல ஒரு கொள்கையில் பற்றுறுதியுடன் இருந்து தொடர்ச்சியாக போராட முன்வராத சமூகமாக முஸ்லிம்களும், காசாவில் கவச வாகனத்திற்கு முன்னால் நெஞ்சை நிமிர்த்தி நின்றுகொண்டு பேசுகின்ற சிறார்களின் தைரியம் கூட இல்லாத ஆட்களாக இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகளும் இருக்கின்ற காரணத்தினால், முஸ்லிம்களின் கதை இப்படிப் போகின்றது. 

ஆனால் முஸ்லிம் அரசியல் கட்சிகளோ தலைமைகளோ தளபதிகளோ வழக்கம் போல இம்முறையும் கண்டு கொள்ளவில்லை. குறைந்தபட்சம் இது வரை காலமும் முஸ்லிம்கள் சந்தித்துள்ள இழப்புக்கள், மனித உரிமை மீறல்கள், அதற்கான பரிகார முன்மொழிவுகள் மற்றும் அவர்களது எதிர்பார்ப்புக்களை உள்ளடக்கிய ஒரு அறிக்கையை ஐ.நா.வுக்கு சமர்ப்பிக்காவிட்டாலும் பரவாயில்லை, அவ்வாறான ஒரு தொகுப்பு மேற்சொன்ன யாரிடமும் முறையாக இல்லை என்றே கூற வேண்டும். 
புழுதி படிந்த சில பைல்களுக்குள்ளும் அங்குமிங்குமாக இச்சமூகத்தின் இழப்புகள் சரியாக ஆவணமாக்கப்படாமல் சிதறிக் கிடக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நேரடியாக வந்து கேட்டாலும், ஒட்டுமொத்த விபரங்களும் அடங்கிய ஆவணங்கள், சாட்சியங்கள் நம்மிடமில்லை என்றே கைவிரிக்க வேண்டியுள்ளது.  
இயக்கங்களின் கைவரிசை

குறிப்பாக, யுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் மற்றும் ஏனைய தமிழ் ஆயுதக் குழுக்களால் முஸ்லிம்கள் பல உரிமை மீறல்களுக்கு ஆட்பட்டனர். அதேபோன்று, 1915 சிங்கள – முஸ்லிம் கலவரம், சுதந்திரத்திற்குப் பின்னரான ஊவா வெல்லஸ்ஸ கலவரம் உள்ளிட்ட சிறு கலவரங்கள், கடந்த சில வருடங்களுக்குள் நடந்தேறிய அளுத்கம, பேருவளை, ஜின்தோட்டை, அம்பாறை மற்றும் திகண கலவரங்களால் முஸ்லிம்கள் பெரும் அழிவுகளையும் உரிமை மீறல்களையும் எதிர்கொண்டனர். அரச படைகளாலும் ஒட்டுக் குழுக்களாலும் சிற்சில இழப்புக்கள் ஏற்பட்டமை நினைவு கொள்ளத்தக்கது. 

ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகளின் போராட்டம் என்பது அறிக்கை விடுவதோடு முடிவடைந்து விடுவதுபோல. முஸ்லிம்களின் மனித உரிமைகளுக்கான போராட்டம் என்பது தேனீர் கடைகளில் அமர்ந்து அப்படி நடந்தது இப்படிச் செய்தார்கள் என்று கதை பேசுவதோடும், விடுதலைப் புலிகளையும் பாதுகாப்பு படையினரையும் விமர்சிப்பதோடு மட்டுப்படுத்தப்பட்டு விடுவதை காண முடிகின்றது. 

முஸ்லிம்கள் தமது பக்கத்தில் இழைக்கப்பட்ட தவறுகளை ஏற்றுக் கொள்ளல் பகைமறத்தலுக்கு அவசியமாகும். மறுபுறத்தில், தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை, உரிமை மீறல்களை வெளிப்படையாக பேசவும், ஆவணப்படுத்தவும், முன்வைக்கவும் வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். படையினர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எவ்வாறு சிங்கள மக்கள் பொறுப்பில்லையோ அதுபோலவே தமிழ் ஆயுதக் குழுக்கள் முஸ்லிம்களின் உரிமைகளை மீறியமைக்கு அப்பாவி தமிழ்ச் சகோதரர்கள் பொறுப்பாளிகளல்லர். 

எனவே மனித உரிமைகளை சர்வதேசத்தின் கண்ணுக்கு கொண்டு சென்றவர்கள் என்ற அடிப்படையில் தமிழர்களுக்கு நியாயமான பலன் கிடைக்க வேண்டும் என்பதைப் போல, முஸ்லிம்களின் சிங்களவர்களின் உரிமை மீறல்களும் அதற்கடுத்தாக கவனத்திற் கொள்ளப்பட வேணடியவை என்ற யதார்த்தத்தை  தமிழ் மக்களும் அரசியல்வாதிகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும். 

மீறல்களுள் முதன்மையானது வடக்கில் பூர்வீகமாக வாழ்ந்த முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டமை. 1990ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தின் கடைசிப்பகுதியில் ஒருநாள். யாழ் குடா நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் அனைவரையும் ஐந்து சந்திப்பகுதியில் கூடுமாறும் அங்கிருந்து இரண்டு மணிநேர அவகாசத்தில் வெளியேறிச் செல்லுமாறும் விடுதலைப் புலிகள் அறிவிப்புச் செய்தனர். தங்களிடம் இருக்கின்ற பணம், நகை எல்லாவற்றையும் ஒப்படைத்துச் செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. 

இவ்வாறு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் புத்தளத்தை அண்டிய பிரதேசங்களிலும் வேறு பல பகுதிகளிலும் இன்னும் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இதுவரை முழுமையாக மீள் குடியேற்றப்படவில்லை. இது ஐ.சி.சி.பி.ஆர். மற்றும் இலங்கை யாப்பின் படி உரிமை மீறலாகும். ஆயினும், ஐக்கிய நாடுகள் சபையும் மனித உரிமை அமைப்புக்களும் இதற்கெதிராக குரல் எழுப்பியதாக ஞாபகம் இல்லை. அவ்வப்போது புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் இவ்விடயத்தை ஐ.நா.வின் கவனத்திற்கு கொண்டு வந்த போதும் இலங்கை முஸ்லிம்களின் ஒருமித்த கோரிக்கையாக அது அரசிற்கும் சர்வதேசத்திற்கும் முன்வைக்கப்பட வேண்டும். 

அதற்கடுத்ததாக பள்ளிவாசல்கள் உயிர்;பறிப்புக்கள் மற்றுமொரு முக்கிய உரிமை மீறலாகும். அந்த விதத்தில் ஏறாவூர், காத்தான்குடி பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்தவர்கள் உயிர் பறிக்கப்பட்டனர். அக்கரைப்பற்று பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் வேறு சில இடங்களிலும் வயல்களிலும் பொது இடங்களிலும் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. அத்துடன், அழிஞ்சிப்பொத்தானை அழிவுகள், , குருக்கள்மடத்தில் ஹஜ் யாத்திரிகர்கள் உயிர்பறிக்கப்பட்டறை, ஊறுகாமம் அசம்பாவிதம், அக்போபுர மரணங்கள் போன்றவற்றின் இழப்புகள், மீறல்கள் என இது நீண்டு செல்கின்றது. 
அத்தோடு நிற்கவில்லை. இனவாதமும் முஸ்லிம்களின் உரிமையை கடுமையாக மீறியிருக்கின்றது. அண்மைக்காலத்தை நோக்கினால், அளுத்கம, திகண மற்றும் அம்பாறைக் கலவரங்கள் முஸ்லிம்களின் பலவிதமான உரிமைகளை ஒட்டுமொத்தமாக மீறிய சம்பவங்களாகும். இவற்றில் திகண, அம்பாறைக் கலவரங்களுக்கு பண ரீதியான இழப்புக்கள் கூட இன்னும் முழுமையாக கொடுக்கப்படவில்லை. 
இந்நிலையில், முஸ்லிம்கள் தமது மதத்தை பின்பற்றுவதில், தனிமனித சுதந்திரத்தை பேணுவதில், ஒரு இடத்தில் வசிப்பதில் ஏற்பட்ட உரிமை மீறல்கள் மற்றும் இழப்புக்கள் முறையாக முஸ்லிம்களால் ஆவணப்படுத்தப்படுவதுடன், அதற்கு அரசாங்கம் பரிகாரம் தேட தாமதிக்குமானால், அதை உலகமறியும் வண்ணம் பகிரங்கப்படுத்துவதை தவிர வழியில்லை. 

போர்க்காலத்தில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களை சர்வதேசம் இது பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. முஸ்லிம் தலைமைகள் இது பற்றி பேசுவதற்கு வெகுவாக அஞ்சினர். ஒரு சில பொது அமைப்புக்கள், தனிப்பட்ட உள்நாட்டு, புலம்பெயர் செயற்பாட்டாளர்களை தவிர இலங்கையில் உள்ள எந்தவொரு பிரபலமான முஸ்லிம் அரசியல் கட்சி தலைவரோ, தளபதியோ, அமைச்சரோ இவ்வாறான மீறல்களை முழுமையாக அறிக்கையிட்டு அரசாங்கத்திற்கோ, உலகத்தின் கண்ணுக்கோ சமர்ப்பிக்கவில்லை. 

இனவாத விடயத்திலும் கிட்டத்தட்ட இதுதான் நடந்து கொண்டிருக்கின்றது என்பதுதான் கவலைக்குரியது. எனவே ஐ.நா.வுக்கு கொண்டு செல்வதல்ல எமது நோக்கம். மாறாக இவற்றை ஆவணப்படுத்தி உலகறியச் செய்ய வேண்டும் என்பதாகும். 

அந்த வகையில், ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் பெப்ரவரி 25ஆம் திகதி தொடக்கம் இம்மாதம் 22 வரை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அத்துடன் கலாசார உரிமை, இனப் பாகுபாடு போன்ற பிரத்தியேக விடயங்கள் தொடர்பான குழுக் கூட்டங்களும் இடம்பெறுகின்றன. 41ஆவது கூட்டத்தொடர் ஜூன் மாதத்தில் ஆரம்பமாக திட்டமிடப்பட்டுள்ளது. 
எனவே, இங்கு சுருக்கமாகக் கூறினால், முஸ்லிம்கள் மீதான உரிமை மீறல்களை ஆவணப்படுத்த வேண்டும் என்று சொல்வது யாரையும் குற்றம் சாட்டுவதற்கோ தமிழ், சிங்கள மக்களை நோவினைப் படுத்துவதற்கோ அல்ல. மாறாக, முஸ்லிம்களுக்கும் இத்தனை இழப்புக்கள், உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன என்பதை ஐ.நா. சபை போன்றவற்றை உள்ளடக்கிய சர்வதேச சமூகம் அறியும் வகையில் சொல்ல வேண்டியது நமது கடமையாகும். 

முள்ளியவாய்க்காலில் தமிழனும்;, அரந்தலாவையில் சிங்களவனும், காத்தான்குடியில்  முஸ்லிமும் இழந்த உரிமைகளின் பரிமாணங்கள் வேறுபட்டாலும், அவை ஒரே வகையான மனித உரிமைகள்தான். 

0 கருத்துரைகள்:

Post a comment