Header Ads



சுதந்திரக் கட்சி, யானையுடன் சங்கமிக்கும் - மரிக்கார்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் கூட்டணி அமைக்க நடத்தப்படும் பேச்சுவார்த்தை வெற்றி பெறாது எனவும் ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து ஏற்படுத்தப்பட உள்ள ஐக்கிய தேசிய முன்னணியின் மெகா கூட்டணியில் இணையவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்பார்த்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கொலன்னாவை பிரதேசத்தில் புனரமைக்கப்பட்ட மூன்று வீதிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பன இணைவது என்பது திருமணத்தில் முடியாது. அது திருமணம் செய்து, மீண்டும் விவாகரத்து செய்வது போன்ற வேலை. அது நடக்காது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிறுத்த தீர்மானித்தால், மைத்திரிபால சிறிசேன, அவர்களுடன் இணைவதில் எந்த பயனுமில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுஜன பெரமுனவுடன் இணைந்தால், அடுத்த முறை நாடாளுமன்றத்திற்கு வர முடியாது.

இதனால், இவர்கள் எமது ஐக்கிய தேசிய முன்னணியின் மெகா கூட்டணி அமைக்கப்படும் இறுதி சந்தர்ப்பம் வரையே அவர்கள் காத்திருக்கின்றனர்.

அந்த கூட்டணி அமைக்கப்பட்ட பின்னர் கோத்தபாய ராஜபக்ச மட்டுமல்ல எவர் போட்டியிட்டாலும் நாங்கள் நிறுத்தும் வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவார்.

அதேபோல், பொதுஜன பெரமுனவுக்கு தேவையான வகையில் ஜூன் மாதம் நாடாளுமன்றத்தை கலைக்க ஆதரவு வழங்க பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் நாங்கள் தயாரில்லை.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், பொதுத் தேர்தலை நடத்த எந்த வகையிலும் நாங்கள் இணங்க மாட்டோம். ஜனாதிபதித் தேர்தலில் மட்டுமே ஐக்கிய தேசிய முன்னணி ஒரே அணியாக களம் இறங்கும். அதனால், தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம்.

அந்த வெற்றியுடன் பொதுத் தேர்தலை நடத்தி, ஐக்கிய தேசிய முன்னணியின் தனி அரசாங்கத்தை அமைக்க எதிர்பார்த்துள்ளோம் எனவும் எஸ்.எம்.மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.