Header Ads



பட்ஜட்டை பார்க்கப்போன சந்திரிக்கா - விருந்தினர்களின் வருகையில் வீழ்ச்சி, வழமைக்கு மாறான அமர்வு

2019ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் நேற்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமான வரவு- செலவுத்திட்ட உரை மாலை 4.15 மணிவரை சுமார் இரண்டே கால் மணித்தியாலம் இடம்பெற்றது.  

புதிய தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிப்பது, அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு, நடுத்தர வருமானம் பெறுபவர்களின் வீட்டுக் கனவை நனவாக்கும் கடன் திட்டங்கள் எனப் பல்வேறு யோசனைகளை அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்தார்.  

அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் வரவு-செலவுத்திட்டத்தைப் பார்வையிடுவதற்காக அமைச்சுக்களின் செயலாளர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், முப்படைத் தளபதிகள், பொலிஸ் மாஅதிபர், அரசாங்க உயர் அதிகாரிகள் எனப் பலரும் பார்வையாளர் கலரியில் அமர்ந்திருந்தனர்.  

பாராளுமன்றம் நேற்றுப் பிற்பகல் 2 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. தினப்பணிகள் பற்றிய அறிவிப்பைத் தொடர்ந்து வரவு-செலவுத்திட்டத்தை முன்வைக்க நிதியமைச்சரின் பெயரை சபாநாயகர் அறிவித்தார். இதன்போது நிதியமைச்சர் மங்கள சமரவீர சபைக்குள் நுழைய ஆளும் கட்சி உறுப்பினர்கள் மேசையில் தட்டி தமது வரவேற்பைத் தெரிவித்தனர்.  

சபைக்குள் நுழையும்போது தனது கையில் கொண்டுவந்த வரவுசெலவுத்திட்ட கோப்பை அமைச்சர் உயர்த்திக் காட்டியதும் சபையில் சிரிப்பொலி எழுந்தது. இருக்கைக்கு வந்ததும் அமைச்சர் தனது வரவு- செலவுத்திட்ட உரையை ஆரம்பித்தார். இரண்டு மணிக்கு ஆரம்பமான வரவு- செலவுத்திட்ட உரை மாலை 4.15 மணிவரை தொடர்ந்தது.  

மலசலகூட வசதிகள் அற்ற வீடுகள் இருப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் சகல வீடுகளுக்கும் மலசல கூடங்களைக் கட்டிக்கொடுப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவரின் மாவட்டமான ஹம்பாந்தோட்டையில் அதிகமானவர்களுக்கு மலசலகூடங்கள் இல்லையென அமைச்சர் கூறியதும் எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டனர். இதனால், சபையில் சிறு சலசலப்பு ஏற்பட்டது.  

அமைச்சர் தொடர்ந்தும் வரவு-செலவுத்திட்ட யோசனைகளை முன்வைத்தார். சில யோசனைகளை முன்வைக்கும் போது வழமைபோல ஆளும் கட்சி உறுப்பினர்கள் அவற்றை வரவேற்கும் வகையில் மேசையில் தட்டி தமது வரவேற்பைத் தெரிவித்தனர்.  

தேர்தலை அடிப்படையாகக் கொண்டு வரவு- செலவுத்திட்டம் தயாரிக்கப்படும் எனக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதால், இது தொடர்பில் எதிர்பார்ப்பு தோன்றியிருந்தது. எனினும், நேற்றைய வரவு- செலவுத்திட்ட அமர்வில் எதிர்பார்த்ததைவிட குறைவானவர்களே கலந்துகொண்டிருந்ததைக் காணமுடிந்தது. பாராளுமன்ற உறுப்பினர்களும், வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளடங்கலான சிறப்பு விருந்தினர்களும் வழமையைவிடக் குறைவாகவே கலந்துகொண்டிருந்தனர்.

சபாநாயகர் கலரியில் அமர்ந்திருந்த முக்கியஸ்தர்களில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க குறிப்பிடத்தக்கவராகக் காணப்பட்டார். எனினும், மாகாண ஆளுநர்களில் மேல் மற்றும் தென்மாகாண ஆளுநர்கள் மாத்திரமே வருகைதந்திருந்தனர். வழமையாக பார்வையாளர் கலரி அரசாங்க அதிகாரிகளால் நிரம்பியதாகக் காணப்படும்.

எனினும், நேற்றையதினம் கலரியில் வெற்றிடங்களைக் காணக்கூடியதாகவிருந்ததுடன், சபையில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி தரப்புக்களிலும் ஆசனங்கள் சில வெறிச்சோடியிருந்ததைக் காணக்கூடியதாகவிருந்தது.  

வரவு- செலவுத்திட்டம் தாக்கல் செய்யப்படும்போது ஜனாதிபதி சபைக்கு வருகைதருவார். இருந்தபோதும் இம்முறை ஜனாதிபதியின் வருகை அமையவில்லை.  

மாலை 4.15 மணியளவில் வரவு- செலவுத்திட்ட உரையை அமைச்சர் முடித்தார். இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்கள், விருந்தினர்கள் கலந்துகொண்ட தேனீர் விருந்தும் நடைபெற்றது.   

No comments

Powered by Blogger.