March 01, 2019

தடைகளைத் தகர்த்து, மருத்துவர் ஆன அகிலா என்ற ஹதியா - கணவர் ஷபீன் ஜஹான் உருக்கம்

தடைகளைத் தாண்டி மருத்துவர் ஆன உன்னை வரவேற்பதில் பெருமை கொள்கிறேன் ஹதியா என்று அவரின் கணவர் ஷபீன் ஜஹான் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் பகுதியைச் சேர்ந்த அசோகன் என்பவரின் மகள் அகிலா (24). இவர் கடந்த 2017-ல் மாயமானார். இது குறித்து போலீஸில் அசோகன் புகார் செய்ததோடு, கேரள உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவையும் தாக்கல் செய்தார்.

சேலத்தில் ஒரு கல்லூரியில் படித்து வந்த அகிலாவை சிலர் கடத்திச் சென்று இருப்பதாவும் அவர் புகாரில் தெரிவித்து இருந்தார். ஆனால், நீதிமன்றத்தில் ஆஜராகிய ஹதியா (அகிலா) தான் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் மதம் மாறியதாகவும், தனது பெயரை ஹதியா என மாற்றிக்கொண்டுவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், தான் தொண்டு நிறுவனம் ஒன்றில் தங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த வழக்கின் விசாரணைக்கு மீண்டும் ஆஜராகிய ஹதியா, ஷபின் ஜஹான் என்பவரை திருமணம் செய்துவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால், நீதிமன்றம் இந்த திருமணத்தை ஏற்க மறுத்தது, திருமணப் பதிவை ரத்து செய்ய உத்தரவிட்டது. அதேசமயம், ஹதியாவின் தந்தை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனது மகளை தீவிரவாத இயக்கத்தில் சேர்க்க முயற்சி நடப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த மனுக்களை எதிர்த்து ஹதியாவின் கணவர் ஷபின் ஜஹான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 24 வயதான ஹதியா தனது கணவரை சுயமாகத் தேர்வு செய்ய அரசியலமைப்புச் சட்டத்தில் உரிமை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் கடந்த ஆண்டு மார்ச்சில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஹதியா, ஜஹான் திருமணம் சட்டப்படி செல்லும், இதை செல்லாது என்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்வதாகவும் ஹதியா சட்டப்படி தனது திருமணத்தை பதிவு செய்து இருப்பதால், அவர் தொடர்ந்து தனது கணவருடன் தங்கி இருக்கலாம் என்றும் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து சேலத்தில் ஹோமியோபதி படித்துவந்த ஹதியா, தனது மருத்துவப் படிப்பை மீண்டும் தொடர்ந்தார். இந்நிலையில் ஹதியா வெற்றிகரமாக மருத்துவப் படிப்பை முடித்துள்ளதாக அவரின் கணவன் ஷஃபின் ஜஹான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,

''இந்த வெற்றி ஒரு மகத்தான சாதனை. இதற்குக் காரணம் உங்களின் கணக்கில்லாத பிரார்த்தனைகள், பிரிவுக்குப் பிறகான இடைவிடாத போராட்டங்கள், அன்பு, பொறுமை மற்றும் பல.

கடைசியாக, அனைத்துத் தடைகளையும் தாண்டி முக்கியமான இடத்துக்கு வந்துவிட்டார் ஹதியா. மருத்துவராக உன்னை வரவேற்பதில் பெருமை கொள்கிறேன். டாக்டர் ஹதியா அசோகன்!'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் ஹதியா டாக்டர் கோட் அணிந்து, கையில் ஸ்டெத்தஸ்கோப்புடன் இருக்கும் புகைப்படத்தையும் அவரின் கணவர் பதிவோடு பகிர்ந்துள்ளார்.


0 கருத்துரைகள்:

Post a Comment