Header Ads



பிளாஸ்டிக் குப்பைகளிலிருந்து, இந்திய ஜெர்சி


உலகக்கோப்பை சீசன் வந்துவிட்டது. மே மாத இறுதியில் இங்கிலாந்தில் தொடங்கவுள்ள உலகக்கோப்பை போட்டிகளுக்கு அனைத்து அணிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக நேற்று இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி அறிமுகப்படுத்தும் விழா ஹைதராபாத்தில் அரங்கேறியது. இந்திய ஆண்கள் அணி கேப்டன் விராட் கோலி, வீரர்கள் தோனி, ரஹானே  ஆகியோருடன் பெண்கள் அணியைச் சேர்ந்த ஹர்மன்ப்ரீத் கவுர், ஜெமிமா ரொட்ரிகஸ் ஆகியோரும் பங்குபெற்றனர்.

இம்முறையும் ஜெர்சியை Nike நிறுவனம் தயாரித்திருக்கிறது. இவர்கள்தான் இந்திய அணியின் அதிகாரபூர்வ ஆடைகளுக்கான ஸ்பான்ஸர். இந்தப் புதிய ஜெர்சிகளில் பல சிறப்புகள் இருக்கின்றன. ஜெர்சி நிறங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இம்முறை இரண்டு வகையான நீல நிறங்கள் (Two-Toned blue) ஜெர்சியில் இருக்கும். இவற்றைவிட முக்கியமானது இந்த ஜெர்சிகள் மறுசுழற்சி பாலியஸ்டரில் தயாரிக்கப்பட்டுள்ளன. 2015  உலகக்கோப்பையிலும் இந்திய அணி அணிந்த ஜெர்சிகள் அனைத்துமே மறுசுழற்சி முறைகளில் தயாரிக்கப்பட்டவைதானாம்

இதற்கு முதலில் பாலியஸ்டர் என்றால் என்னவென்று சுருக்கமாகப் பார்ப்போம்.  பெட்ரோகெமிக்கல் பொருள்களை (ethylene glycol and dimethyl terephthalate) கொண்டு மனிதனால் பாலிமரைசேஷன் என்னும் முறையின் மூலம் தயாரிக்கப்படும் துணியின் பெயர்தான் பாலியஸ்டர். இந்த முறையில் தயாரிக்கப்படும் பாலியஸ்டர் என்பது பல ஆபத்துகளை ஏற்படுத்துகிறது. பருத்தி ஆடைகளை விடப் பல விஷயங்களில் சௌகரியமாக இருந்தாலும், இதைத் தயாரிப்பது கடினம். இதற்கு மிக அதிகமான தண்ணீர் தேவைப்படும். கெமிக்கல்ஸ் மற்றும் எரிபொருள்களின் தேவையும் அதிகம். இப்படி இதை உற்பத்தி செய்ய தேவைப்படும் பொருள்கள்யாவும் நச்சுத்தன்மை வாய்ந்தவை. இவற்றுக்குத் தேவைப்படும் சாயமும் அப்படியே. இவை நீர்நிலைகளை மாசுபடுத்துகின்றன. இந்தத் தயாரிப்பு முறையால் சுற்றிவாழும் மக்களுக்கு சில நோய்களும் வரலாம். ஆனாலும், பல வகையான டிசைன்களில் விற்கமுடியும் என்பதாலும் விலை குறைவு என்பதாலும் இவற்றுக்குத் தேவை அதிகமானது. இப்போது பருத்தியுடன் உலகில் அதிகம் தயாரிக்கப்படும் இரண்டு துணிகளில் இதுவும் ஒன்று. 

ஆனால் பாலியஸ்டரில் இருக்கும் பல கேடுகளை புறந்தள்ளுகிறது மறுசுழற்சி பாலியஸ்டர். பாலியஸ்டர் போல இவை பெட்ரோகெமிக்கல் பொருள்களை மூலப்பொருள்களாகப் பயன்படுத்துவது இல்லை. மாறாக இதற்குத் தேவைப்படும் PET (Polyethylene terephthalate) என்னும் பொருளை நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாட்டில்கள் தொடங்கி பல பிளாஸ்டிக் பொருள்களிலிருந்து எடுத்துக்கொள்கிறது. இதன்மூலம் நேராகக் குப்பைக்குச் செல்லும் பாட்டில்களை கொண்டு துணி தயாரிக்கமுடியும். எளிதாக விளக்கவேண்டும் என்றால் முதலில் இந்த பாட்டில்கள் சின்னச் சின்னதாக உடைக்கப்படும். பின்பு இந்த உடைக்கப்பட்ட துகள்கள் De-polymerization மற்றும் Re-polymerization என்ற முறைகளின் மூலம் சிறிய சிப்களாக உருவாக்கப்படும். இதிலிருந்து நாரும், நூலும் எடுக்கப்படும். இதிலிருந்து நாம் துணிகள் நெய்துகொள்ளலாம். பழைய பாலியஸ்டர் துணிகளையும் பிளாஸ்டிக் பொருள்களுடன் சேர்த்து இதற்காகப் பயன்படுத்தலாம்.

மறுசுழற்சி பாலியஸ்டர்

சாதாரண பாலியஸ்டரைவிட இது தயாரிக்க 33-லிருந்து 55 சதவிகிதம் குறைவான ஆற்றலே எடுத்துக்கொள்ளப்படும். மேலும் இதன்மூலம் துணிகளுக்காக பெட்ரோலிய பொருள்களை மட்டும் நம்பி இருக்கவேண்டாம். மேலும் பிளாஸ்டிக் பாட்டில்களை இப்படிப் பயன்படுத்துவதன்மூலம் அவற்றால் ஏற்படும் குப்பை மற்றும் நிலமாசு ஆகியவற்றைத் தவிர்க்கலாம். மேலும் இந்தத் துணிகள் அனைத்தையும் மிகவும் குறைந்தபட்ச செலவில் தரத்தில் எந்த ஒரு குறைவும் வராமல் மறுசுழற்சி செய்யமுடியும். இதன்மூலம் இவை மக்காத பொருள்தான் என்றாலும் இப்படி மறுசுழற்சி வட்டத்திலேயே எந்த ஒரு பாதிப்பும் தராமல் இருக்கமுடியும். பருத்தி உற்பத்தியிலும் நமது தேவையாலும், புதிய ஃபேஷன் முறைகளாலும் கெமிக்கல் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. இவற்றின் மறுசுழற்சி திறனும் குறைவே. இன்றைய சூழலில் எக்கச்சக்க துணிகள் குப்பைக்குச் செல்கின்றன. இது வருடங்கள் நகர நகரப் பெரிய பிரச்னையாக உருவெடுத்துக்கொண்டே இருக்கிறது. வெளிநாடுகளில் `Sustainable Fashion' என்பது இன்று பெரும் விவாதப்பொருளாகவே உருவெடுத்திருக்கிறது. இயற்கை ஆர்வலர்கள் பலரும் இதுகுறித்து பேசத்தொடங்கிவிட்டனர். 

குப்பைகளில் கொட்டப்படும் துணிகள்

மேலும் இதில் உருவாகும் ஜெர்சிகளை அணிவதிலும் பல சௌகரியங்கள் இருக்கிறதாம். இவை வீரர்களின் அசைவுகளுக்கேற்ப நன்றாக ஸ்ட்ரெச் ஆகிறதென்றும், ஈரப்பதத்தை நல்ல முறையில் உறிஞ்சிவிடுகிறது என்றும் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு முறையும் வீரர்களின் விருப்பங்கள் கேட்டு அவற்றை வடிவமைப்பில் கொண்டுவருகிறது Nike. புதிய ஜெர்சி பற்றி கோலி, தோனி நேற்றைய விழாவில் புகழ்பாடினர். தோனி ``ஒரு துணியை மேலே அணிந்திருக்கிறோம் என்பதையே உணரமுடியாத அளவு மெல்லிதாக இருக்கிறது இது. இது முழு ஆட்டத்தின் போதும் இருக்குமென நம்புகிறேன்" என்றார். கோலி ``Nike உருவாக்கியதிலேயே இதுதான் பெஸ்ட்" என்றார். இவற்றை Nike ஸ்டோர்களில் நாமும் வாங்கமுடியும்.

ட்விட்டரில் பலரும் புதிய டிசைன் பிடிக்கவில்லை என்று அதிருப்தி தெரிவித்தாலும், தொடர்ந்து இப்படிச் சுற்றுச்சூழலைப் பாதிக்காத முறையில் ஜெர்சிகளை தயாரிப்பதன் மூலம் இந்திய அணி நல்ல ஒரு எடுத்துக்காட்டை விட்டுச்செல்கிறதெனப் பலரும் பாராட்டவும் செய்துள்ளனர். ஒரு ஜெர்சி முழுவதும் உருவாக்க சுமார் 33 பிளாஸ்டிக் பாட்டில்கள் மட்டும் போதுமாம். வெ டு கோ இந்தியா!

விகடன்

No comments

Powered by Blogger.