February 19, 2019

கொலைக் கலாசாரத்துக்குள் வைத்திருந்த மஹிந்த, இப்போது நல்லபெயர் எடுக்க நடிக்கின்றார்

2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டின் இறுதிப் பகுதி வரை ஆட்சியில் இருந்த மஹிந்த ராஜபக்ச நாட்டை கொலைக் கலாசாரத்துக்குள் வைத்திருந்தார். அவரும் அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்சவும் இந்தக் கொலைகளுக்குத் தலைமை தங்கினார்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இவர்கள்தான் போர்க்காலத்தின்போது போர் விதிகளை மீறி போர்க்குற்றங்களும் இடம்பெற வழிவகுத்தார்கள். குற்றமிழைத்தவர்களை விட அதற்கு உத்தரவிட்டவர்களும் தலைமை தாங்கியவர்களும்தான் மாபெரும் குற்றவாளிகள். அப்படிப்பட்டவர்கள் இப்போது நல்ல பெயர் எடுக்க நடிக்கின்றார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் போரின்போது போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை என்று மஹிந்த ராஜபக்ச கொழும்பு நகர மண்டபத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற நிகழ்வில் தெரிவித்திருந்தார்.

ரணில் விக்ரமசிங்க வடக்குக்குச் சென்று போர்க்குற்றம் இடம்பெற்றிருக்கின்றது என்று ஒப்புக்கொண்டு நாட்டை சர்வதேச சமூகத்துக்கு காட்டிக் கொடுத்து விட்டார் என்றும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

மஹிந்த ராஜபக்ச இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டபோது அவர் மேலும் தெரிவித்ததாவது,

போர்க் காலகட்டத்தில் எந்தச் சந்தர்ப்பத்திலும் போர்க்குற்றம் இடம்பெறவில்லை என்று மஹிந்த ராஜபக்ச வெட்கம் இல்லாமல் கூறுகின்றார்.

போர்க்குற்றங்களையும், கொலைகளையும் அவர் அரங்கேற்றியதால்தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவரைத் தமிழ் மக்கள் ஓரங்கட்டினார்கள்.

போர்க் காலகட்டத்தில் ஒரு புறம் விடுதலைப்புலிகளும் மறுபுறம் அரச படைகளும் போர்க்குற்றங்களை இழைத்தார்கள். இதை நாம் மறுக்க முடியாது.

ஆனால், இவற்றை மறந்து - மன்னித்து நாம் ஓர் நிலைக்கு வர வேண்டும். அப்போதுதான் நாட்டில் நல்லிணக்கத்தை நிலைநாட்டலாம்.

பழையதைக் கிளறிக் கொண்டிருக்காமல் நடந்த உண்மைகளை ஏற்றிக் கொண்டு, மறப்போம் மன்னிப்போம். நாம் அனைவரும் புதிய வழியில் ஓரணியில் பயணிக்க வேண்டும். இதைத்தான் வடக்கில் நான் வலியுறுத்தி இருந்தேன்.

ஆனால், நான் வடக்கில் வைத்து நாட்டை பன்னாட்டுச் சமூகத்திடம் காட்டிக்கொடுத்து விட்டேன் என்று மஹிந்த ராஜபக்ச தெற்கில் பொய்ப் பரப்புரை முன்னெடுக்கின்றார்.

பல கொலைகளுக்கும் போர்க்குற்றங்களுக்கும் உத்தரவிட்ட அவர், இப்படிப் பொய்யுரைப்பது வெட்கக்கேடு.

மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் நாட்டின் மீது சர்வதேச அழுத்தங்கள் என்றுமில்லாத வகையில் அதிகரித்திருந்தன. ஆனால், 2015ஆம் ஆண்டு நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த அழுத்தங்களை குறைக்கச் செய்தோம். கடும் வலுவுடைய ஜெனிவாத் தீர்மானங்களை மென்மையாக்கினோம். மூவின மக்களையும் அரவணைத்து ஆட்சியை நடத்தினோம்.

ஆனால், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி பதவி ஆசை பிடித்த கூட்டணியால் எமது ஆட்சி 52 நாட்கள் கவிழ்க்கப்பட்டிருந்தன. அந்த நாட்களில் இந்தக் கூட்டணியினர் நாட்டின் அதியுயர் சபையான நாடாளுமன்றத்தையே அசிங்கமாக்கினார்கள்.

இதனால் நாட்டின் மீதான சர்வதேச அழுத்தங்கள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கின. இதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார் என்று நான் சொல்லத் தேவையில்லை.

நாம் மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் உள்நாட்டு அரசியலில் எம் மீதான பழிவாங்கல் நடவடிக்கைகள் தொடர்கின்றன.

ஆனால், சர்வதேச மட்டத்தில் இலங்கையின் நற்பெயரைக் காப்பாற்றும் நடவடிக்கையில் ஐக்கிய தேசிய முன்னணி அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், நாட்டைக் கொடுக்கும் நோக்கம் எனக்கில்லை என குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a comment