Header Ads



புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய, மாணவர்களின் பெற்றோருடைய கவனத்திற்கு...!

எது வெற்றி? எது தோல்வி? என்பதே தெரியாத மூடர் கூட்டம் இன்னும் நம் மத்தியில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

புலமைப்பரிசில் பரீட்சையில் தனது மகனுக்கு 150 புள்ளியாம் ஆனால் அவன் Fail ஆகிவிட்டானாம். இது என்னவொரு மடைமைத்தனம்.  

புலமைப்பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளை பெற்றுக் கொண்ட அனைத்து மாணவர்களுமே தங்களது ஐந்தாம் வகுப்புக்கு ஏற்ற அறிவு மட்டத்தை கொண்டுள்ளனர் என்பதே உண்மை. அதை விட குறைந்த புள்ளிகளை பெற்றுக் கொண்ட மாணவர்கள் இனிவரும் காலங்களில் சற்று தமது முயற்சியை அதிகரிக்க வேண்டும்.

வெட்டுப்புள்ளி (Cut off) என்பது பாஸ் (pass) அல்லது பெயில் (fail) என்பதை தீர்மானிக்கும் அளவு கோல் இல்லை அது வெறுமனே நமது அரசாங்கத்தின் புலமைப்பரிசில் கொடுப்பனவு கொடுப்பதற்கான இயலுமையை வைத்து தீர்மானிக்கப்படும் ஒரு மட்டுப்படுத்தும் அளவுகோல் மட்டுமே. எத்தனை மாணவர்களுக்கு தங்களால் புலமைப்பரிசில் கொடுப்பனவு கொடுக்கும்  இயலுமை இருக்கிறதோ அதனை வைத்தே வெட்டுப் புள்ளிகள் தீர்மானிக்கப் படுகின்றன.

வெற்றிப்புள்ளியான 70 புள்ளிகளை விட்டு விட்டு வெட்டுப் புள்ளிகளை வெற்றிப் புள்ளிகளாக எண்ணம் கொண்டு நம் சிறார்களை வதைத்துக் கொண்டிருக்கிறோம்.

புலமைப்பரிசில் பரீட்சை என்ற ஒன்று தேவையே இல்லை என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நிச்சயமாக புலமைப்பரிசில் பரீட்சை தேவையான ஒன்றே, ஆனால் அதனை நம் பெற்றோர்கள் எவ்வாறான மனநிலையில் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதே இங்குள்ள பிரச்சனை. எத்தனையோ ஏழை மாணவர்கள் புலமைப்பரிசில் கொடுப்பனவின் மூலம் பயனடைந்து இருக்கின்றார்கள்.

உங்கள் பிள்ளை 162 புள்ளிகளை எடுத்திருக்கும் போது அரசு 161 புள்ளியை வெட்டுப் புள்ளியாக அறிவித்தால் உங்கள் பிள்ளை வெற்றியடைந்து விட்டது அல்லது அரசு 163 புள்ளியை வெட்டுப் புள்ளியாக அறிவித்தால் உங்கள் பிள்ளை தோல்வியடைந்து விட்டது. இவ்வாறான ஒரு முட்டாள்தனமான சிந்தனையிலா நீங்கள் இருக்கின்றீர்கள்?

உயர்தரத்தில் 3 S களைப் பெற்ற ஒரு மாணவனின் பெறுபேற்றில் "பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுளீர்கள்" எனும் வாசகத்தை அச்சிட்டு வழங்கும் அரசு வெட்டுப் புள்ளிகளுக்கு கீழ் நிலையில் இருக்கும் பாலகர்களின் பெறுபேற்றில் "Not Qualified" என்ற வாசகத்தை வழங்குவது எவ்வளவு பெரிய முட்டாள்தனமான செயல். இவை தொடர்பில் சிந்தனை செய்யும் அளவில் கூடவா நமது கல்விச்சமூகம் இல்லை? 

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையாதவர்கள்தான் உயர்தரத்தில் அதிகளவில் சித்தியடைகின்றனர் என்று கூறி, சித்தியடைந்த மாணவர்களை தாழ்த்தாமல், 70 க்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்றுக் கொண்ட அனைவருமே சித்தியடைந்தவர்கள்தான் என்ற மணநிலைக்கு மாற முயற்சி செய்யுங்கள்.

அரசின் பலவீனத்தை மாணவர்களின் பலவீனமாக காட்ட முயற்சிக்கும் ஒரு வழிமுறையாகவே இந்த வெட்டுப் புள்ளிகளின் தன்மையை நோக்க வேண்டியுள்ளது. "Not qualified" என்ற வாசகம் பெறு பேற்றில் இருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

வெறுமனே ஒரே ஒரு பரீட்சையினால் மாணவர்களின் வெற்றி தோல்வியை கணிப்பிட முடியுமாக இருந்திருந்தால் இன்று இலங்கையில் 98% ஆனவர்கள் தோல்வியடைந்தவர்களாகவே இருந்திருப்பர். எனவே விடாமுயற்சியில் தான் நம் வாழ்வின் வெற்றியும் தோல்வியும் தங்கியுள்ளது. 

எனவே பெற்றோர்களே பிள்ளைகளின் மனநிலையறிந்து அவர்களை ஊக்கப்படுத்தும் உரமாக இருங்கள் வெறுமனே காரமாக இருந்து விடாதீர்கள்.

By :
Sameen Mohamed Saheeth 

No comments

Powered by Blogger.