Header Ads



ஒலுவிலுக்குச் சென்ற மஹிந்தவிற்கு, மக்கள் எதிர்ப்பு


ஒலுவில் துறைமுகம் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று -03- அங்கு சென்றிருந்தார்.

இதன்போது பிரதேச மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஒலுவில் துறைமுகத்திற்காக சுவீகரிக்கப்பட்ட தமது காணிகளுக்கான நட்ட ஈடு உரிய வகையில் வழங்கப்படவில்லை எனவும் துறைமுகம் அமைக்கப்பட்டதையடுத்து ஏற்பட்டுள்ள கடலரிப்பினால் தமக்கு பாதிப்புகள் ஏற்படுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த நிலையில், கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்ட இடத்திற்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர்களும் சென்றிருந்தனர்.

இதன்போது மீனவர்களுக்கும், கவனயீர்ப்பில் ஈடுபட்ட பிரதேச மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் சென்றிருந்த அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இரு தரப்பிலிருந்தும் சிலரை அழைத்து கலந்துரையாட நடவடிக்கை எடுத்தனர்.

ஒலுவில் துறைமுகத்திற்காக சுவீகரிக்கப்பட்ட அல் ஜாயிசா பாடசாலை மைதானத்திற்கான காணியை விடுவிக்குமாறு மக்கள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீன்பிடித் துறைமுகத்தில் கடலுக்குள் நுழையும் முகப்புப் பகுதியில் மூடியுள்ள மணலை அகற்ற வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் மீன்பிடிப் படகுகள் பயணிக்கும் நுழைவாயில் பகுதியில் மூடியுள்ள மணலை அகற்றக்கோரி மீனவர்கள் பல சந்தர்ப்பங்களில் கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அத்துடன், துறைமுக நிர்மாணப்பணிகளின் பின்னர் ஒலுவிலில் ஏற்பட்டுள்ள கடலரிப்பை தடுக்கக்கோரியும் கடந்த காலங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

No comments

Powered by Blogger.