Header Ads



முஸ்லிம் சட்டத்தில் மட்டும், ஏன் கை வைக்கிறார்கள்..?


-சட்டத்தரணி பஸ்லின் வாஹிட்-

இன்று இலங்கை வாழ் முஸ்லிம் மக்களிடத்தில் விவாதத்துக்கு வந்துள்ள ஒரு முக்கிய  தலைப்பாக இருப்பது முஸ்லிம் விவாக,விவாகரத்து சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களாகும்.

ஒன்பது வருடங்களாக  விவாதிக்கப்பட்டும் இறுதித் தீர்மானத்துக்கு வரமுடியாமல் இரண்டாகப் பிளவுபட்டு தமது முன்மொழிவுகளை இரண்டு சட்ட வல்லுனர்கள் தலைமையிலான குழுக்கள் முன்வைத்துள்ளன. இக்குழுக்களில் சட்டத்தரணிகளும் கல்விமான்களும் உலமாக்களும் அடங்கியிருந்தும் 9 வருடங்கள் ஆகியும் இறுதி முடிவுக்கு வர முடியாமல் போனதும் விந்தையானது. குறுகிய காலத்தில் புதிய அரசியலமைப்பைக் கூட முன்மொழியும் இந்நாட்டில் சட்டத் திருத்தமொன்றிற்காக இவ்வளவு காலம் எடுத்துவிட்டு இறுதியாக பொது மக்களின் அபிப்பிராயத்தைக் கோரியிருப்பது சிந்தனைக்குரியது.

பலவருடங்களாக முடங்கிக் கிடந்த கமிட்டி கடந்த ஒரு வருடத்தில் மாத்திரம் 13 கூட்டங்களை அவசர அவசரமாக நடாத்தி திருத்தங்களை முன் வைத்திருப்பது சர்வதேச சக்திகளின் அழுத்த்ததினால் என்றே பரவலாக பேசப்படுகின்றது.

இலங்கையில் அமுலில் உள்ள இஸ்லாமிய சட்டத்தில் அவசரமாக தேவைப்படும் மாற்றமாய் இருப்பது காதி நீதிமன்றங்களினதும், காதி நீதவான்களினதும் நடைமுறை, அதிகாரம்,அடிப்படை  வசதி போன்ற விடயங்களாக இருந்தாலும் அவற்றை விட்டு விட்டு அவசியமற்ற விடயங்களான திருமண வயதெல்லை, திருமணப்பதிவு வலி, மத்கப் ,காதி நியமனம் போன்ற சில விடயங்களுக்கான திருத்தங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட கமிட்டி 3 வருடங்களாக எந்த வித கூட்டங்களையும் நடத்தாது இருந்து விட்டு மீண்டும் அவசர அவசரமாக கூடி முக்கியத்துவம் இல்லாத விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து விட்டு அவசியமான மாற்றங்களான  காதி நீதிமன்ற செயற்பாடுகள் விடயத்தில் தமது கருத்தை மழுப்பி உள்ளமை ஆழமாக கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.

இவ்வளவு காலமும்  இலங்கையில் பல தசாப்தங்களாக நடைமுறையில் இருக்கும் இஸ்லாமிய சட்டத்தில்  பாரிய பிரச்சினைகள் இருக்கவில்லை.

பிரச்சினை இருப்பது அச்சட்டங்களில் விவாக ,விவாகரத்து விடயங்களை அமுல்படுத்தும் காதி நீதிமன்ற நடவடிக்கைகளிலாகும். காதி நீதவான்களுக்கும், நீதிமன்றங்களுக்கும்  போதிய வசதிகளில்லை. அதிகாரமில்லை.  உரிய கௌரவம் கொடுக்கப்படுவதில்லை. ஏனைய மதத்தினரின் குடும்ப வழக்குகளை விசாரிக்கும் நீதவான்களைப் போல் தீர்ப்புக்களை அமுல்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன. அதிகாரத்திலும் பல சிக்கல்கள்,


உதாரணமாக காதி நீதவான்களுக்கு விவாகரத்தின் பின்னர் பிள்ளைகள் தாயிடத்திலா தந்தையிடத்திலா இருக்க வேண்டும் என்றவிடயத்தில் தீர்ப்பளிக்க அதிகாரமில்லை. அதேபோல் பிள்ளை பராமரிப்பு செலவு சம்பந்தமாக தீர்ப்பளிக்கும் அதிகாரம் காதி நீதவான்களுக்கு வழங்கப்பட்டாலும்,தந்தை செலவை கட்ட மறுக்கும் சந்தர்ப்பத்தில் அதனை அறவிட்டுக் கொடுக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை.

கைக்கூலி எனும் சீதனத்தை திருப்பி மனைவிக்கு வழங்கும்படி காதிக்கு தீர்ப்பளிக்கும் அதிகாரம் இருந்தாலும், அதனை வழங்க மறுக்கும் சந்தர்ப்பத்தில் அறவிட்டுக் கொடுக்கும் அதிகாரம் காதி நீதவானுக்கு இல்லை. காதி நீதிமன்றங்களில் விசாரணைகள் நடைபெறும் போது  உரிய மரியாதை நீதவானுக்கு வழங்கப்படாமல் நீதிமன்றத்துக்குள்ளேயே நீதவானை தூற்றுகின்றனர் .எனைய நீதிமன்றங்களில் அவ்வாறு நடந்து கொண்டால் உடன் கைது செய்து நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடும்.

காதி நீதிமனறங்களில் அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை. நீதவான் என்ற பெயர் மட்டும் தான். அவர்களுக்கு நியமனம் வழங்குவது கூட நீதிச்சேவைகள் ஆணைக்குழுவினால் ஆகும். ஆனால் நடை பவனியாகவும், பஸ்களிலும் அவர்கள் பிரயாணிக்கின்றனர்.

இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம் இன்றைக்குத் தேவையான அவசியமான மாற்றங்களை இலங்கை வாழ் முஸ்லிம்களின் பல்லாண்டு கால கோரிக்கையான காதிநீதிமன்ற மாற்றங்களை விட்டு விட்டு முஸ்லிம் விவாக ,விவாகரத்துச் சட்டத்திலே உள்ள திருமண வயதெல்லை,மத்கப், வலி, பெண் காதி நியமனம், போன்ற விடயங்களில் மாற்றத்தை கொண்டு வர இக்கமிட்டி  அறிக்கை சமர்ப்பித்து இருப்பது முஸ்லிம் மக்களிடையே அனாவசிய சர்ச்சை ஒன்றையே உருவாக்கும்.

இவ்விடயத்தில் உலமா சபையும் தமது நிலைப்பாட்டை பொது மக்களிடத்தில் விளக்கமளித்தாலும் அவர்களது வாதமும் நியாயமானதாக தென்படவுமில்லை. அதை விட ஆழமாக சிந்திக்கும் பொறுப்பு உலமா சபைக்கு உள்ளது.மீண்டும் சந்தேகத்தைக் கொண்டு வரும் ஒரே விடயம் யாருடைய தேவைக்கு இந்த அவசர மாற்றங்கள் என்பதாகும்.சரவதேச சக்திகள் இதன் பின்னால் உள்ளனவா?

முஸ்லிம் தனியார் சட்டத்தில் மட்டும் ஏன் கை வைக்க வேண்டும்.

சர்வதேசத்துக்கு பெண்ணுரிமையில் மாற்றம் தேவையென்றால் கண்டிய விவாக சட்டத்திலே இருக்கும் ஒரு பெண்ணை ஒரே நேரத்தில் அண்ணனும் தம்பியும் மனைவியாக வைத்துக் கொள்ள உள்ள அனுமதியை என்னவென்று சொல்வது. அதிலேயும் மாற்றத்தை கொண்டு வருவது அவசியம்தானே.

கொழும்பில் குளிரூட்டிய அறைகளில் கூடி எடுக்கும் முடிவுகள் கிராமப்புற மக்களின் தேவைகளை நிறைவேற்றாது.எனவே இன்று முன் மொழியப்பட்டு இருக்கும் மாற்றங்கள் எதை அமுல் படுத்தினாலும் அது பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை தரப் போவதில்லை.

மாறாக மேலும் சர்ச்சைகளை தோற்றுவிக்கவே வழிவகுக்கும்.

3 comments:

  1. "நம்பிக்கை கொண்டவர்களே!

    அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்;

    உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால்- மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் -

    இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்."

    (அல்குர்ஆன் : 4:59)
    www.tamililquran.com

    ReplyDelete
  2. Please give to thawheed jamath or all jamath join with thawheed jamath and then discuss with opposite party. Please do fast

    ReplyDelete
  3. 9 வருடங்கள் அவசரமான காலமா?

    ReplyDelete

Powered by Blogger.