Header Ads



மின்சக்தி கருவியை கண்டுபிடித்து, தேசியவிருதை வென்ற சல்மான்

– அனஸ் அப்பாஸ் –

குறைந்த செலவில் விட்டுக்கு தேவையான மின்சக்தியை (சூரிய சக்திமூலம்) பூர்த்தி செய்யும் கருவி ஒன்றை (Low Cost Solar Power System) கண்டுபிடித்து தேசிய விருதை வென்றுள்ளார் சமீம் முஹம்மது சல்மான் குர்ஷித். மூதூர் 223C கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் அப்துல் மஜீத் சமீம் – ஷுஹூதா தம்பதிகளின் மூத்த புதல்வரான இவர் தனது ஆரம்பக் கல்வியை மூதூர் ஆய்ஷா வித்தியாலயத்தில் கற்றார். பின்னர், தரம் – 10 இல் இருந்து மூதூர் அல்-ஹிலால் மத்திய கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார். சல்மானின் தந்தை ஒரு வியாபாரி. தாய் இல்லத்தரசி.

தன்னிடமுள்ள புத்தாக்க திறன் வெளிப்பாடு தரம் – 04 இல் முதன்முதலில் வெளிப்பட்டதாக குறிப்பிடும் சல்மான், இதன்போது பெற்றோர் ஆர்வமூட்டியதுடன், ஆசிரியை முனீரா, அதிபர் ஹிஷாம் சேர் ஆகியோர் வழங்கிய ஒத்துழைப்பு மகத்தானது என்கின்றார்.

சல்மான் குர்ஷித் குறித்து அல்-ஹிலால் மத்திய கல்லூரி அதிபர் முபாரக் அவர்களிடம் ஆய்ஷா வித்தியாலய அதிபர் ஹிஷாம் அவர்கள் வழங்கிய வாய்மொழி சான்றிதழும், திறன் வெளிப்பாட்டு உத்தரவாதமும் சல்மானின் அடைவை துரிதமாக்கியது. “2016 ஆம் ஆண்டு Energy Education Programme இல் நீ பங்குபற்ற வேண்டும்” என்று புதிய பாடசாலை அதிபர் முபாரக் சேர் கூறியதும், மறுப்பேதும் இன்றி சவாலை ஏற்று, கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட இப்போட்டியில் மாகாண மட்டத்தில் இரண்டாமிடத்தை பெற்று தனது திறமைக்கான முதல் அங்கீகாரத்தை சுவீகரித்தார் சல்மான்.

ஐந்து மாதங்கள் நகர்ந்தன. 2016 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சக்திவள கழக உறுப்பினர்களுக்கிடையிலான தேசிய போட்டிக்கான அழைப்பு வந்தது. இதனை கல்வி அமைச்சுடன் இணைந்து சக்திவள அமைச்சு நடாத்தியது. உற்சாக மேலீடு இன்னும் அதிகரிக்க, அதிலும் களமிறங்கினார் சல்மான். இம்முறை தேசிய ரீதியான போட்டி என்பதால் பெறுபேறுகள் பாடசாலைக்கு அனுப்பும்வரை காத்திருக்குமாறு கூறப்பட்டது. பொறுமைக்கான சோதனை ஒரு மாதத்தை எட்ட, அந்த மகிழ்ச்சிகரமான செய்தி கல்வி அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையதளம் ஊடாக கிடைக்கப்பெற்றது. அவ்வருடம் தேசிய மட்ட முதலிடம் வழங்கப்படவில்லை. சல்மான் குர்சித் இரண்டாமிடம் எனவும், இன்னும் இருவர் மூன்றாம் இடங்கள் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மகிழ்வுடன் க.பொ.த (சா/ தர) பரீட்சையை எழுதி முடித்து இரண்டு நாட்களில் தேசிய ரீதியான விருது வழங்கும் விழாவுக்காக கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு விரைந்தார் சல்மான். பதக்கம், சான்றிதழுடன் ரூபா. 40,000 பணப்பரிசும் அவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. பல்வேறு துறைகளில் சாதனை படைத்தோருக்கான விருதுகள் இதன்போது வழங்கப்பட்டன.

பொதுவாக இலங்கையில் ஒவ்வொரு வீட்டுக்கும் அரசாங்கம் 230v 2000w முதல் 6000w வரையான மின்சக்தியையே விநியோகிக்கின்றது. சல்மான் உருவாக்கியுள்ள இப்புதிய முயற்சியால் 230v 3000w மின்சாரத்தை விநியோகிக்க முடியுமாக இருக்கின்றது. இவ்வாறு தொடராக ஐந்து வருடங்களுக்கு எவ்வித செலவுமின்றி மின்சாரத்தை பெற முடியும் என உத்தரவாதம் தருகின்றார் அவர். ஐந்து வருடங்கள் கடக்கின்றபோது இக்கருவியில் உள்ள மின்கலம் (Battery) இன் ஆயுட்காலம் குறைவதே அதற்கான காரணம். மேலும், பாவனைக்காலத்தில் இக்கருவி பராமரிப்பு (Service) செய்யபடவும் வேண்டும்.

இலங்கை ரூபாவில் இதற்கான செலவு அண்ணளவாக 20,000 முதல் 30,000 வரை ஆகும். வீடொன்றில் உள்ள சகல இலத்திரனியல் பொருட்களும் (உதாரணமாக, ஸ்திரி (Iron) செய்வதில் இருந்து சலவை இயந்திரம் (Washing Machine வரை) இதன்மூலம் சுலபமாக இயங்கும். இதனை சந்தைப்படுத்துவதால் வணிக ரீதியான இலாபம் கிடைப்பதோடு தேசிய ரீதியான உற்பத்திக்கு பங்களித்த மன நிறைவையும் அடைய முடியும். எனவே, அதற்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் அவரது பெற்றோர், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் பங்களிப்பார்கள் என நம்புகின்றேன்.

தனது வாழிகாட்டிகளாக அன்புத் தந்தையையும், பயாஸ் ஆசிரியரையும் குறிப்பிடும் இவர், பெற்றோருக்கும், பாடசாலை அதிபர் M.முபாரக், யஹ்யா நானா, ஹிசாம் ஆசிரியர், சிபா ஆசிரியர், பயாஸ் ஆசிரியர், முனீரா ஆசிரியர் மற்றும் நளீம் மாமா ஆகியோருக்கு நன்றிகளை தெரிவிக்கின்றார்.

“வளர்முக நாடு என்ற அடிப்படையில் நீர் வளங்கள் அல்லது வளி (காற்று) மூலமாகவே இலங்கை அதிக மின்சாரத்தை பெறுகின்றது. நீர் மூலமெனில் மின்னேரியா, கொத்மலை நீர்த்தேக்கம் போன்றவற்றில் இருந்தும், காற்றின் மூலமெனில் யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் இருந்தும் மின் உற்பத்தி செய்யப்படுகின்றது. இதற்காக அதிக செலவு செய்யப்படுவதுடன், வீண் விரயமும் அதிகம் நேர்கின்றது. இக்கருவியை நாம் பயன்படுத்த ஆரம்பித்தால் அரசாங்கத்துக்கு எவ்வித செலவும் இருக்காது. எமது தேவையை நாமே பூர்த்தி செய்யலாம். இக்கருவியில் உள்ள விசேடம் என்னவெனில் தன்னியக்க தொழிற்பாடு, தானாகவே சூரிய சக்தியை சேமித்து தானாகவே மின்சக்தியாக விநியோகிக்கின்றது. சூழலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.”

“இலங்கையிலுள்ள பாடசாலைகள்தோறும் சக்தி-வள கழகம் என்ற ஒன்று ஆரம்பிக்கப்பட்டதே சூழலுக்கு நன்மைபயப்பனவற்றை இயற்கையில் இருந்து பெற்று உற்பத்தி செய்வதற்கே. அந்த குறிக்கோளையும் எனது கண்டுபிடிப்பு நிறைவேற்றுகின்றது. அண்மையில் பாகிஸ்தான் நாட்டின் கராச்சி மாநிலத்தில் இதுபோன்று கருவிகள் வீடுதோறும் பொருத்தப்பட்டு அதற்கான வரி அரசினால் அறவிடப்படுகின்றது. இலங்கையில் தாராளமாக சூரிய ஒளி கிடைக்கின்றது. உதாரணமாக, வரட்சி நிலையில் உள்ள அனுராதபுர மாவட்டத்தை நோக்கினால் பரீட்சார்த்தமாக இம்முயற்சியை அரசாங்கம் அங்கு ஆரம்பிக்க முடியும்.” என்று கூறி முடித்தார் தற்போது க.பொ.த. உயர் தரப் பிரிவில் முதல் வருடம் கற்று வரும் சல்மான் குர்சித்.

கிட்டிய எதிர்காலத்தில் காந்தப் புலனை மட்டும் பயன்படுத்தி மின் சக்தியை பெற்றுக்கொள்ளும் கருவியை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டு வரும் 16 வயதுடைய இளம் கண்டுபிடிப்பாளர் சல்மான் குர்சிதுக்கு அன்பு கலந்த வாழ்த்துக்கள்!

4 comments:

  1. Well done. Wish you all success in your endeavours.

    ReplyDelete
  2. Congratulations (Salman Generator). .. Keep it up... Research and grow more and more.. May Allah Bless your future..

    ReplyDelete

Powered by Blogger.