Header Ads



பெற்றோர்கள் பேணப்படுகிறார்களா? ஒதுக்கப்படுகிறார்களா..??

-சப்னம் பின்த் முஹம்மது அப்துல் றஹ்மான்
தாருல் ஹுதா மகளிர் அரபுக் கல்லூரி - மருதமுனை-

     அல்லாஹு தஆலா எம் ஒவ்வொருவருக்கும் பெற்றோர்களை தந்திருக்கிறான். எம்மில் சிலரின் பெற்றோர் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கலாம், சிலரின் பெற்றோர் மரணமடைந்திருக்கலாம், சிலருக்கு தாய் உயிருடன் இருந்து தந்தை மரணித்திருக்கலாம், இன்னும் சிலருக்கு தந்தை உயிருடன் இருந்து தாய் மரணித்திருக்கலாம் இவை அனைத்தும் அல்லாஹ்வின் ஏற்பாடாகும். 

     எமது பெற்றோர்கள் தற்போது எம்முடன் உயிருடன் இருக்கிறார்கள் என்றால் அது அல்லாஹ் எமக்களித்த மாபெரும் அருளாகும் அதற்காக அல்லாஹ்விடம் நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் நன்றி செலுத்திய வண்ணம் இருக்க வேண்டும். ஆனால் இன்று நாம் நமது பெற்றோர்களை பேணுகிறோமா....? என்று கேட்டால் பெரும்பாலானவர்களின் பதில் மாற்றமாகத்தான் உள்ளது. எம்மை எம் பெற்றோர் பெற்றெடுத்து சீராட்டிப் பாராட்டும் ஒவ்வொரு கணமும் எமது எதிர்காலம் பற்றிய பலவிதமான கனவுகழுடனும் கற்பனைகழுடனும் பேணிப்பாதுகாத்து வளர்க்கிறார்கள். மேலும் நாம் பெற்றோரின் கவனிப்பில் இருக்கும் போது அனைத்துவிதமான தேவைகளையும் பெற்றோர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு சந்தோசமாக காலத்தைக் கழிக்கின்றோம். அந்த நேரத்தில் எமது பெற்றோர் எம்மைக் கவனிக்கும் போது மிகவும் சந்தோசமாக எமது தேவைகளைப் பூர்த்தி செய்கிறார்கள் ஆனால் இதே பெற்றோரை பிள்ளைகள் கவனிக்கும் ஒரு நிலை வந்துவிட்டால் அந்தப் பிள்ளைகளின் பேச்சுக்களையும்; செயல்களையும் வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது. 
   இதற்கு ஒரு நிகழ்வை உதாரணமாகக் கூறலாம் 
ஒரு வயதான தந்தை வீட்டுத்தோட்டத்தில் அமர்ந்திருக்கிறார். அவரின் மகன் அவருக்கு அருகில் பத்திரிகை வாசித்துக் கொண்டிருக்கிறார் அப்போது அந்தத்தோட்டத்தில் இருந்த மரத்தில் ஒரு சிட்டுக்குருவி வந்து அமர்கிறது. அப்போது அந்தத் தந்தை
மகனே அது என்ன? எனக்கேட்கிறார்
அப்போது அந்த மகன்
தந்தையே! சிட்டுக்குருவி என்கிறார்
மீண்டும் சிறிது நேரம் களித்து தந்தை மகனிடம் அது என்ன எனக்கேட்கிறார். 
மகன் மீண்டும் தந்தையே சிட்டுக்குருவி என்கிறார் 
மீண்டும் தந்தை மூன்றாவது முறையும் அது என்ன என சற்று இடைவெளி விட்டு கேட்க படித்துக்கொண்டிருந்த பத்திரிகையை வீசிவிட்டு 'வயசானா ஞாபகாக சக்தி போயிடும் அதற்காக ஏன் என் உயிர வாங்குற' என வாய்க்கு வந்த படி தந்தையை ஏசுகிறார். அப்போது அந்தத் தந்தை கண்ணீருடன் வீட்டுக்குள் சென்றுவிடுகிறார். இதைக்கவனித்த தாய் வீட்டக்குள் சென்று ஒரு பழைய டயரியை எடுத்து வந்து சில பக்கங்களை புரட்டிவிட்டு ஒரு குறிப்பிட்ட பகுதியை மகனிடம் எடுத்துக் கொடுக்கிறார் மகனும் படிக்க ஆரம்பிக்கிறார். 
'நானும் எனது 3வயது மகனும் இன்று வீதியால் நடந்து சென்றோம் வழியில் ஒரு சிட்டுக்குருவியைக் கண்ட மகன் 
'தந்தை என்ன அது? என்றான் சிட்டுக்குருவி மகனே' என்றேன் கள்ளங்கபடம் அறியாத எனது மகன் மீண்டும் மீண்டும் 21தடவை என்ன அது என்று தொடர்ந்து கேட்டான்
ஓவ்வொரு தடவையும் என் மகனின் தலையைத்தடவி 'சிட்டக்குருவி மகனே' என்று மகிழ்ச்சியுடன் கூறினேன். 
அந்தப்பகுதியை படித்தமகன் அழுதவண்ணம் ஓடிச்சென்று தந்தையின் நெற்றியில் முத்தமிட்டு அணைத்துக்கொள்கிறான்.
     நம் அனைவரது நிலையும் இப்படித்தான் இருக்கிறது. நாம் உலகத்தைப்பற்றி மட்டுமே யோசிக்கிறோம். இதனால் தான் வயதான பெற்றோரின் செயல்கள் எம்மை கோபப்படுத்துகிறது. 
அல்லாஹு தஆலா கூறுகின்றான் 
 '(நபியே) உமதிரட்சகன் அவனைத்தவிர (மற்றெவரையும்) நீங்கள் வணங்கக் கூடாதென்றும் பெற்றோருக்கு உபகாரம் செய்வேண்டும் என்றும் கட்டளையிட்டிருக்கின்றான். அவ்விருவரில் ஒருவரோ அவ்விருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமையை எட்டிவிட்டால் அவ்விருவருக்கும் (இழிவாகக் கூறப்படும் வார்த்தையிலுள்ள) 'சீ' என்று கூட நீர் சொல்ல வேண்டாம் (உம்மிடமிருந்து) அவ்விருவரையும் விரட்டிவிடவும் வேண்டாம். அவ்விருவருக்கும் மரியாதையான வார்த்தையைக் கூறுவீராக! இன்னும் அவ்விருவருக்காக இரக்கத்துடன் பணிவு எனும் இறக்கையை தாழ்த்துவீராக மேலும் என்னிரட்சகனே நான் குழந்தையாக இருக்கும் போது (மிக்க அன்பாக என்னை வளர்த்தது போன்று நீயும் அவ்விருவருக்கும் அருள்புரிவாயாக! என்றும் பிரார்த்தித்துக்) கூறுவீராக.
                                                  (17:23இ24)
     இவ்வசனத்தில் அல்லாஹு தஆலா பெற்றோருக்கு பிள்ளைகள் கொடுக்க வேண்டிய கண்ணியத்தை மிக அழகாக குறிப்பிட்டுள்ளான். மேலும் இந்த வசனத்தில் பெற்றோரை 'சீ' என்று கூட கூற வேண்டாம் என்று கூறியுள்ளான். ஆனால் இன்று நாம் நமது பெற்றோரை இதைவிட மோசமான வார்த்தைகளால் ஏசுகிறோம். இன்று சில பெற்றோர்கள் 'சீ' என்று எங்களை பேசினால் கூட பரவாயில்லை ஆனால் அதைவிட மோசமாக பேசுகிறார்கள். எங்களால் தாங்கமுடியவில்லை என கூறக்கூடிய பெற்றோர்களை நாம் பார்க்கின்றோம் ஸுபஹானல்லாஹ்.
     ஒரு தாய் தான் ஒரு குழந்தையை கருவுற்றதிலிருந்து அக்குழந்தை பிறக்கும் வரை பலவிதமான துன்பங்களை அனுபவிக்கிறாள.; உண்ணும் உணவிலிருந்து உறங்கும் வரை அந்தத்தாயின் கவனம் தனது கருவில் இருக்கும் குழந்தையைப்பற்றியதாகவே இருக்கும். பிறக்கவிருக்கும் அக்குழந்தைக்காக அந்தத்தாய் தனது இயல்பான நடை, உடை, பாவனை, ஊண், உறக்கம், அனைத்தையும் மாற்றுகிறாள் பின்னர் அக்குழந்தையை அல்லாஹ்வின் உதவியோடு பெற்றெடுத்ததும் குழந்தையின் நலத்திற்காக தன்நலத்தை இழந்து கண்விழித்து சீராட்டிப் பாராட்டி அரவணைக்கிறாள். இவ்வாறு ஒரு தாய் தன்குழந்தை வளரும் வரை அன்பாக வளர்க்கிறாள் ஆனால் இன்றைய நவீன காலத்தில் எம்தாயின் இந்தத் தியாகங்களை எண்ணி கண்ணீர் சிந்தி அவர்களை கண்ணியப்படுத்தும் பிள்ளைகளைவிட நவீன யுகம் என்ற போர்வையில் ஊடகங்களின் தாக்குதலில் சிக்கிக் கொண்டிருக்கும் பிள்ளைகளைத்தான் இன்று காணக்கூடியதாக உள்ளது. 
அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் 
'நாம் மனிதனுக்குத் தன் பெற்றோர் (இருவருடனும் அன்பு கொண்டு அரவணைத்துக் கொள்வது) பற்றி நல்லுபதேசமும் செய்தோம் அவனுடைய தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனம் அடைந்தவளாக அவனை சுமந்தாள் இன்னும் (அவனுக்கு பால்குடி மறக்க) இரண்டு வருடங்களாயின (ஆகவே மனிதனே!) நீ எனக்கும் உன்னுடைய பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக!
                                                    (31:14)
இன்றைய பிள்ளைகள் பெற்றோரை ஒரு வேலைக்காரர்களைப் போன்று நடத்துகிறார்கள் மகனோ மகளோ திருமணமாகி அவர்கள் ஏதாவது தொழிலும் செய்பவர்களாக இருந்தால் அந்தப் பெற்றோரின் நிலை பரிதாபம் தான் அவர்களின் பிள்ளைகழுக்கும் சேர்த்து வேலை செய்கிறார்கள். தன்பெற்றோரை குழந்தைகள் போன்று பராமரிக்க வேண்டிய பிள்ளைகள் மாற்றமாக தங்களுடைய பிள்ளைகளை கவனிக்குமாறு கட்டளையிடுகிறார்கள். அதற்கு சன்மானம் வழங்குவது போன்று மாதம் 2000 மோ 3000 மோ கொடுக்கிறார்கள். பிள்ளைகளின் எண்ணம் பெற்றோரைக் கவனிக்கிறோம் என்று ஆனால் இந்த சன்மானம் எதற்கு என நீங்கள் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பாருங்கள் இவர்கள் தானா பெற்றோரை கண்ணியப்படுத்தி உபகாரம் செய்பவர்கள்! இது போன்ற பல செயல்களைப் பார்க்கும் இன்னும் சில பெற்றோர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பதையும் காணக் கூடியதாக உள்ளது. 'யா அல்லாஹ் எனக்கும் எனது மனைவிக்கும் இப்படியான ஒரு நிலையை ஆக்கி விடாதே தங்களது பிள்ளைகளிடம் நாங்கள் கை நீட்டும் படி செய்து விடாதே அவ்வாறு எங்களால் மற்றவர்களிடம் எதிர்பார்த்து வாழும் ஒரு நிலை வருவதற்கு முன் எங்களை மரணிக்கச் செய்து விடு என்று பிரார்த்திக்கிறார்கள்' இதை பார்க்கும் போது வேதனையாக உள்ளது. 
எம்மைப் பெற்றெடுத்த பெற்றோருக்கு நாம் செய்யும் கைமாறு இது தானா? நாம் எதை விதைக்கிறோமோ நாம் அதையே பெற்றுக் கொள்வோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பெற்றோரைப் புறந்தள்ளும் பிள்ளைகள் நினைக்க வேண்டும் எதிர்காலத்தில் எமது பிள்ளைகள் எம்மை புறந்தள்ளினால் எமது நிலை என்னவென்று...... 
நாம் எதைச் செய்கிறோமோ அதற்கான கூலியை நிச்சயமாகப் கெற்றுக் கொள்வோம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நாம் நமது பெற்றோர்களை அன்புடனும் பாசத்துடனும் கவனித்து உபகாரம் செய்யும் போது எமது உள்ளத்தில் சந்தோசமும் அமைதியும் ஏற்படுவதை  எம்மால் உணர முடியும். 
     இஸ்லாமிய மார்க்கமானது பெற்றோரை கண்ணியப்படுத்துமாறும் உபகாரம் செய்யுமாறும் ஏவிய மார்க்கமாகும். இந்த புனிதமான மார்க்கத்தில் இருந்து கொண்டு அதன் கண்ணியத்தை குறைக்கும் வகையில் செயற்படுவது வேதனைக்குரிய விடயமாகும். எனவே நாம் அனைவரும் எமது பெற்றோருக்கு எவ்வாறான பிள்ளைகளாக இருக்க வேண்டும் என நாம் உணர்ந்து செயற்பட அல்லாஹ் எம் அனைவருக்கம் அருள் புரிவானாக! 

2 comments:

  1. Very useful article with quran verses, nowadays most of the peoples not bothering their parents as well as thinking their extra weight for family some are using for servant at their home but we should respect our parents & care for their old age
    my Thanks to sister Safnam for good article

    ReplyDelete
  2. Nice! Sister, please write another article how one/a Muslim should not engage himself in anything in any form or shape that could bring slander on his mother- in other words, how a Muslim should not act to the point someone scolding him 'Son of a bitch! If your mother raised you properly with proper knowledge, you wouldn't do this!!'.

    ReplyDelete

Powered by Blogger.